`ஃபிரெண்டா இருந்தா போதும்!' - வேண்டுகோள் வைத்த சித்தார்த்... ஏற்பாளா அபி? #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 77-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
”நாங்க அமைச்சுக் கொடுத்த வாழ்க்கையையே சரியில்லைன்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போனவளோட எங்களுக்கு என்ன பேச்சு? எங்க யார் மேலயும் அக்கறையில்லாமல் போனவ, இப்ப எதுக்கு திரும்பி வந்திருக்கா? நீங்க நல்லவரு, அதான் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க” என்கிறார் அபியின் பெரியப்பா.
“எங்க வாழ்க்கையில் நடந்த எல்லா தப்புக்கும் அபி காரணமில்ல. நான்தான் காரணம் மாமா. நீங்க அவளை நல்லாதான் வளர்த்திருக்கீங்க. அதனாலதான் ஹாஸ்பிடலில் சேர்த்த முதல் நாளில் இருந்து பணம் அனுப்பி பார்த்துட்டிருக்கா. சேது சொன்ன மாதிரி நிலம் வித்த பணத்துல ட்ரீட்மென்ட் நடக்கல.
எல்லாம் அபி கொடுத்தது. இந்த கொரோனா காலத்துல கனடாவிலிருந்து பார்க்க ஓடி வந்தவளுக்கு பாசமில்லையா? நீ போய்ப் பாரு அபி” என்கிறான் சித்தார்த். அபியின் அம்மா அழுகிறார். “உனக்கு சரியாகும் வரை நான் இருப்பேன்மா. குழந்தைகள் பத்திரமாதான் இருக்காங்க” என்று ஆறுதல் சொல்லிவிட்டு, சித்தார்த்துடன் மீண்டும் காரில் கிளம்புகிறாள் அபி.
கெளசல்யா கணவருடன் சித்தப்பா வீட்டுக்குச் செல்கிறார். அங்கே சித்தப்பாவின் சகோதரி மகளை பெண் பார்க்க வந்திருப்பதாகச் சொல்கிறார்.
”எனக்கு சித்தார்த் மேல அப்ப விருப்பம் இருந்தது உண்மைதான். இப்ப எல்லாம் பெண்களுக்குச் சாதகமாதான் சட்டம் எல்லாம் இருக்கு. அதைப் பயன்படுத்தி சில பெண்கள், ஆண்களைப் பாதிப்புக்குள்ளாக்கிடறாங்க. கல்யாணம் ஆனவர், ரெண்டு குழந்தைகளோட அப்பாங்கிற விஷயமெல்லாம் எனக்கு ஒரு பொருட்டில்லை. ஆனா, நான் விசாரிச்ச வரை அபி நல்லவள்னு சொன்னாங்க. சித்தார்த் ஒரு மேல் சாவனிஸ்ட்னு கேள்விப்பட்டேன். அதனாலதான் அமெரிக்காவில் இருந்தவர் கிராமத்து பெண்ணை கல்யாணம் பண்ணி, அடிமையா வச்சிருக்கலாம்னு நினைச்சார் போல...” என்று அந்த பெண் சொல்லச் சொல்ல கெளசல்யா டென்ஷன் ஆகிறார்.
“வேலைக்குப் போற திமிர்ல அவ யாரையும் மதிக்கல. எவனோடவோ ராத்திரி தங்கிட்டு வந்திருக்கா. என் தம்பி தங்கமானவன்” என்று கெளசல்யா சொல்ல, “நானும் தான் வேலைக்குப் போறேன். நானும் திமிர் பிடிச்சவளா? இப்படித்தான் எல்லாத்துலயும் மூக்கை நுழைச்சு குடும்பத்தைக் காலி பண்ணினீங்களா?” என்று அந்த பெண் கேட்க அதிர்ச்சியடைகிறார் கெளசல்யா.
வீட்டில் விடும் சித்தார்த்திடம் தேங்க்ஸ் சொல்கிறாள் அபி. “பேசாமலே போயிடுவீயோன்னு நினைச்சேன். நிம்மதியா இருக்கு. இப்படியெல்லாம் பேசணும்னு ரொம்ப ஏங்கியிருக்கேன். நான் இப்படியெல்லாம் சொல்றதால, உன்னை கன்வின்ஸ் பண்றேன்னு நினைக்காதே. எனக்கு சேர்ந்து வாழணும்னு எல்லாம் எண்ணம் இல்ல. ஒரு ஃபிரெண்டா இருந்தா போதும்” என்கிறான் சித்தார்த்.
என்ன செய்யப் போகிறாள் அபி?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா