அபி வாழ்வில் மீண்டும் கௌதம்... இணையத் துடிக்கும் சித்தார்த்... என்ன செய்வாள் அபி? #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 78-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
அபி, கெளசல்யா... சித்துவின் வாழ்க்கை திசை மாறியது யாரால்?
சித்தார்த்துக்குப் பார்த்த பெண் பேசிய பேச்சுகளைக் கேட்டு, கெளசல்யா கோபத்தில் இருக்கிறார். ``அவளுக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டுப் போகணும். அதை விட்டுட்டு உங்க தம்பி மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பொண்ணு தேடாதீங்கன்னு அவ எப்படிச் சொல்லலாம்?”
``நீ இன்னும் பழங்காலத்துலேயே இருக்கே. இப்ப எல்லாம் ரெண்டு வருஷம் பெரியவனா இருந்தாலே யோசிக்கிறாங்க. 27 வயசு தாண்டினா வேணாம்னு சொல்றாங்க. கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைகளைப் பெத்தவனுக்கு இப்படி ஒரு பெண்ணைப் பார்த்தா, இப்படித்தான் சொல்லுவா. நீதான் கொஞ்சம் மாறணும். சித்தார்த்துக்கு ஏத்த மாதிரி சிங்கிளா இருக்கறவங்களையோ கணவனை இழந்தவங்களையோதான் நீ பார்க்கணும்” என்று கெளசல்யாவின் கணவர் மிகச் சரியாகத்தான் சொல்கிறார். கெளசல்யாவால்தான் அதைத் தாங்க முடியவில்லை.
``என்னது... நம்ம சித்தார்த்துக்கு என்ன குறைச்சல்? ஏன் இப்படிப் பெண் பார்க்கணும்? அவன் அழகுக்கும் திறமைக்கும் நான், நீன்னு போட்டிப் போடுவாங்க. இன்னும் பத்து நாள்ல அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் காட்டறேன்!”
``இதுதான் உங்கிட்ட உள்ள பிரச்னை. நாங்ககூட சிங்கிளா உள்ள பெண்களை ஏத்துக்கற மனநிலைக்கு வந்துட்டோம். உன்னை மாதிரி பெண்கள் இன்னும் முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க. நீ மட்டும் உன் தம்பி வாழ்க்கையில் தலையிடலைன்னா இந்தப் பிரச்னையே வந்திருக்காது. நீ வளர்த்தது உண்மைதான். அதுக்காக அவன் வாழ்க்கையை வாழ நீ அவனை அனுமதிக்கவேயில்லே. அபி நல்ல பொண்ணாதானே இருந்தா. அழகா குடும்பம் நடத்தினா. உன்னாலதான் சித்தார்த்துக்கு இந்த நிலைமை.”
``நான் ஒண்ணும் பண்ணலைங்க.”
``ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலைன்னாலும் அதுதான் உண்மை. தப்பா எடுத்துக்காதே, வேற பொண்ணைப் பார்க்கறதுக்குப் பதில் அபியைச் சேர்த்து வைக்கலாமான்னு யோசி” என்கிறார் கெளசல்யாவின் கணவர்.
பெண்கள் இரண்டாவதாக ஒரு வாழ்க்கையை யோசிக்கக் கூடாதா? எத்தனை வருஷம் ஆனாலும் (திருந்திய) முன்னாள் கணவனோடுதான் மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டுமா?
அபியைப் பார்க்க பெனிடா, காயத்ரி, ஹர்ஷிதா வருகிறார்கள். அங்கே கெளதமும் அபியும் கல்யாணம் பண்ணிக்கொண்டால் என்ன என்று யோசிக்கிறார்கள். மறுநாள் கெளதமிடம் இதைச் சொல்கிறார்கள்.
``நல்ல நண்பர்களா இருக்கக் கூடாதா? என்னாலதான் இவ்வளவு பிரச்னையும்னு குற்றவுணர்ச்சில தவிக்கிறேன். நீங்க வேற மத்தவங்க சொன்னதை உண்மைன்னு நினைக்க வச்சிடுவீங்க போல. எங்க ரெண்டு பேருக்குமுள்ள ஃபிரெண்ட்ஷிப்பைக் கெடுத்துடாதீங்க. அபிக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க” என்கிறான் கெளதம்.
``யார் என்ன சொல்வாங்கன்னு நினைச்சா, வாழவே முடியாது கெளதம். நல்ல ஃபிரெண்ட்ஸ் நல்ல பார்ட்னரா ஆனா என்ன?” என்று ஹர்ஷிதா கேட்பதில் நியாயம் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு நாங்கள் அப்படி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று என்ன அவசியம்?
மருத்துவமனையில் எல்லோரும் இருக்கும்போது, கெளசல்யா வருகிறார். ``மாமா, என்னை மன்னிச்சிடுங்க. என்னாலதான் என் தம்பி வாழ்க்கை இப்படியாயிருச்சு. நான் கொஞ்சம் இங்கிதம் இல்லாமல் நடந்துகிட்டேன். என் தம்பி மேல எந்தக் குறையும் இல்லை. இப்ப எனக்கு எல்லாம் புரிஞ்சிருச்சு” என்று கண் கலங்குகிறார்.
கெளதம், சித்தார்த்... என்ன செய்யப் போகிறாள் அபி?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா