லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

எளிமையான தமன்னா... வலிமையான திரைக்கதை... திக் திக் நவம்பர் ஸ்டோரி!

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
தமன்னா

சஹானா

ஆங்கிலம், இந்தி வெப் சீரிஸ்களைப் பார்க்கும்போது, இப்படி ஏன் தமிழில் எடுப்பதில்லை என்கிற ஏக்கம் வரும். அந்தக் குறையைப் போக்கிவிடுகிறது விகடன் டெலிவிஸ்டாஸின் புதிய படைப்பான ‘நவம்பர் ஸ்டோரி’.

இது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளி யாகியுள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட தமிழ் வெப் சீரிஸ். எழுதி, இயக்கியிருக்கிறார் இந்திரா சுப்ரமணியன். தமன்னா முதன்முறையாக வெப் சீரிஸில் கால்பதித்திருக்கிறார். பசுபதி, ஜி.எம்.குமார், விவேக் பிரசன்னா, அருள்தாஸ், மைனா நந்தினி, ஜானகி சுரேஷ், நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மென்பொருள் நிபுணர் அனுராதா. இவரின் அப்பா கணேசன், புகழ்பெற்ற க்ரைம் நாவல் எழுத்தாளர். இப்போது அல்ஸைமர் என்ற பெருமறதி நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் மனநிலையும் பாதிக்கப்பட்டு, தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறார். சிறுவயதிலேயே தாயை இழந்த அனுராதா, தன் அப்பாமீது அன்பும் மரியாதையும் அதிக அளவில் வைத்திருக்கிறார். அவர் நோயால் கஷ்டப்படுவதைத் தாங்க முடியாமல், எப்பாடுபட்டாவது சிகிச்சையளிக்க நினைக்கிறார். 80 லட்சம் ரூபாய் செலவு செய்தால், எட்டு மாதங்கள்வரை அவர் இயல்பான மனிதராக இருப்பார் என்கிறார் மருத்துவர். அத்தனை லட்சங்களை அள்ளிக் கொடுத்தாலும் மாதக்கணக்கில்தான் இயல்பாக இருப்பார் என்றாலும், அதையும் செய்துவிட வேண்டும் என்றே அனுவின் பாசம் தவிக்கிறது.

பணத்துக்காகத் தங்களின் பழைய வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்கிறார் அனு. அந்த வீட்டை விற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அப்பா கணேசன். ஆண்டுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில் மட்டும் அப்பா ஏன் அந்த வீட்டுக்குச் செல் கிறார், வீட்டை விற்கக் கூடாது என்று ஏன் தடுக்கிறார் என்று குழப்பமடைகிறார் அனு.

காவல்துறை ஆவணங்களைக் கணினியில் பதிவேற்றுவதற்கான டெண்டர் எடுக்கிறார் அனுவின் நண்பர் மலர்வண்ணன். இந்தப் பணிக்கு அனுதான் மூளையாகச் செயல் படுகிறார். அப்போது அங்குள்ள சர்வரிலிருந்து யாரோ சில ஃபைல்களை ஹேக் செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்கள் யார், எதற்காக ஹேக் செய்ய முயற்சி செய்கிறார்கள் என்கிற இன்னொரு குழப்பமும் அனுவுக்கு வருகிறது.

எளிமையான தமன்னா... வலிமையான திரைக்கதை... திக் திக் நவம்பர் ஸ்டோரி!

கணேசனின் மறதி ப்ளஸ் மனவியல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாக, வீட்டை விற்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்குகிறார் அனுராதா. ஒரு நாள் கணேசனைப் பார்த்துக்கொள்ளும் உதவியாளர் சித்ரா, தன்னை வீட்டுக்குள் அடைத்துவிட்டு கணேசன் வெளியே சென்றுவிட்டதாகச் சொல்கிறார். பல இடங்களில் தேடி, இறுதியில் பழைய வீட்டுக்குச் செல்கிறார் அனு. அங்கே கணேசன் மயக்கமாகக் கிடக்கிறார். அருகில் ஒரு பெண்ணின் இறந்த உடல். அதிர்ச்சியடையும் அனுராதா, கணேசன்தான் மனநிலை பாதிப்பில் அந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். உடனே ரத்தக்கறைகள் மீது பெயின்ட்டை ஊற்றிவிட்டு, அப்பாவை வீட்டில் விட்டுவிட்டு, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார்.

விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் சுடலை. கணேசன் பிரபல க்ரைம் நாவலாசிரியர் என்பதை அறிந்தவுடன் அவர்மீது அவருக்கு ஒரு ப்ரியம். கணேசனே குற்றவாளி என்று வழக்கை முடிக்கப் பார்க்கிறது காவல்துறை. ஆனால், இந்தக் கொலையில் வேறு யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாக நினைக்கிறார் சுடலை. அதனால் கணேசனைக் கைது செய்யாமல் விசாரணையை வேறு தளங்களில் தொடர்கிறார்.

குழந்தை ஏசு என்ற பிரபல பிணக்கூறு ஆய்வாளர் கொலை நடந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் காரர் என்பதால், ஸ்டேஷனுக்கு வருகிறார். அப்போது இறந்த பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யும் மருத்துவரும் சுடலையும் பேசுவதைக் கேட்கிறார். தானும் பிணக்கூறு ஆய்வாளர்தான் என்பதால், குழந்தை ஏசு கொலை தொடர்பான தனக்குத் தெரிந்த சில விஷயங்களைச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

இதற்கிடையே... ஓர் இளம் பெண்ணை மூன்று இளைஞர்கள் கடத்துகிறார்கள். அதில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். முந்தைய கொலைக்கும் இந்தக் கொலைக்கும் சில ஒற்றுமைகள் புலப்படுகின்றன. அந்த விசாரணையும் சுடலையிடம் வருகிறது. இரண்டு கொலைகளையும் சேர்த்து ஆராயும் அவர், அந்த இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நம்புகிறார். கொலைகாரர் யார், கொலை ஏன் நடந்தது, கணே சனுக்கும் நவம்பர் மாதத்துக்கும் என்ன தொடர்பு, எதற்காகக் காவல் துறை ஆவணங்களை ஹேக் செய் தார்கள் என்பது எல்லாம் எதிர்பாராத சுவாரஸ்யங்கள்.

‘ஒண்ணுமே புரியல... கண்ணைக் காட்டி காட்டில விட்டது மாதிரி இருக்கு’ என்று தமன்னா ஒரு காட்சி யில் சொல்வார். சீரிஸைப் பார்க்கும் நமக்கும் பல நேரங்களில் அப்படித் தான் தோன்றுகிறது. ஆனால், ‘ட்ரூத்’ எனும் இறுதிக்காட்சியில் மிக அழகாக எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துத் தெளிவாக்குகிறது இதன் திரைக்கதை.

‘ஆறடி உயரத்திலிருக்கும் கம்பி குத்தி அந்தப் பெண் இறந்திருக்கலாம்’ என்று சந்தேகிக்கும்போது, `பொம் பளை எல்லாம் அவ்வளவு உயரமா இருப்பாங்களா?’ என்று கேட்கிறார் ஒருவர். ‘ஏன் சார், பொம்பளைங்க ஆறடி இருக்கக் கூடாதா?’ என்று கேட்கும்போது, வசனம் ‘அட!’ போட வைக்கிறது.

பிணக்கூறு கூடத்தை இதுவரை தமிழ்த் திரைப்படங்களிலோ வெப் சீரிஸ்களிலோ இவ்வளவு நெருக்க மாகப் பார்த்ததில்லை. அந்தக் காட்சிகள் உலகப் படங்களுக்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளன. எனினும், நிர்வாண உடல்களை இப்படி நேரடியாகக் காட்சிப் படுத்தியிருக்க வேண்டுமா என்கிற கேள்வி எழாமல் இல்லை. ரத்தக் காட்சிகளையும் குறைத்திருக்கலாம். ஓடிடி இலக்கணமாகவே மாற்றப் பட்டுவிட்ட பாலியல் காட்சிகள் ஏதும் இந்த சீரிஸில் கிடையாது என்பது மாற்றத்துக்கான விதை.

மேக் அப் இன்றி, எளிய உடையில் வரும் தமன்னா, அனுராதா பாத்தி ரத்தில் அருமையாகப் பொருந்தி விடுகிறார். ஆபீஸ், வீடு என எங்கும் சீரியஸாக இருக்க வேண்டிய கதா பாத்திரத்தை அழகாகச் செய்திருக் கிறார். இந்தக் கதையின் ஹீரோ பசுபதி வழக்கமான தன் அட்டகாச நடிப்பை ஆர்ப்பாட்டம் இல்லாமல் வழங்கி யிருக்கிறார். ஜி.எம்.குமார், நந்தினி, ஜானகி சுரேஷ் ஆகியோரும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

அடுத்து என்ன என்று கேட்க வைக்கும் காட்சியமைப்புகள் கொண்ட சினிமாட்டோகிராபியும் (விது ஆயன்னா), பிரமாதமான எடிட்டிங்கும் (ஷரண் கோவிந்த்சாமி), இவற்றுக்கு இணையான இசையும் (சரண் ராகவன்) ‘த்ரில்’ அனுபவத்தைக் கடைசி வரை கொடுப்பதால் நிச்சயம் ஒரு நிறைவை அனுபவிக்க முடிகிறது.

தெலுங்கு, இந்தியிலும் வெளி யாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ் 2021-ம் ஆண்டு அவசியம் காண வேண்டிய பட்டியலில் இடம் பிடிக்கிறது.