கலை இயக்கம், VFX என விஷுவல் பிரமாண்டம் காட்ட இன்று திரைக்கலைஞர்கள் அவ்வளவு மெனக்கெடுகிறார்கள். சொல்லப்படும் கதைகளின் தன்மையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. ஆனால், `இயற்கையிடம் நம்மை பிரமிக்க வைக்கவும், நாம் ரசிக்கவும் கற்றுக்கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அது நமக்குச் சொல்லும் கதைகளையே நாம் இன்னும் முழுமையாகக் காதுகொடுத்து கேட்கவில்லை’ என்பதுதான் பிபிசியின் நேச்சுரல் ஹிஸ்டரி பிரிவின் நம்பிக்கை (Natural History Unit (NHU)). இதை ‘பிளானட் எர்த்’, ‘ப்ளூ பிளானட்’ என்று தன் வைல்ட்-லைஃப் டாக்குமென்டரி தொடர்கள் மூலம் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கும் இவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்புதான் ‘செவன் வேர்ல்ட்ஸ், ஒன் பிளானட்’ (Seven Worlds, One Planet).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமொத்தம் ஏழு எபிசோடுகள். ஒவ்வொரு எபிசோடும் ஒரு கண்டத்தின் வாழ்வியலையும் சூழலையும் அங்கு வாழும் உயிரினங்கள் வழி நமக்கு எடுத்துச்சொல்கிறது. காட்டப்படும் அனைத்து விலங்குகளிடமும் சொல்வதற்கு ஏதாவது ஒரு ஒன்லைன் கதை இருக்கும். அந்தக் கதையை சுவாரஸ்யமாக நமக்கு எடுத்துவருவதில் எப்போதும்போல இந்த முறையும் நேர்த்தி காட்டுகிறது பிபிசி. கோல்டன் ஸ்னப்-நோஸ்டு குரங்கு, பூமா போன்று இதுவரை பெரிதும் படம் பிடிக்கப்படாத விலங்குகள் சிலவற்றின் வாழ்க்கையை மிக அருகில் சென்று படமாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடு முடிந்த பிறகும், அது எப்படிப் படமாக்கப்பட்டது என்பதைக் காட்டும் 10 நிமிட மேக்கிங் ரீல் செம சுவாரஸ்யம்.

இது நீதிக்கதை இல்லைதான். ஆனால், போகிறபோக்கில் நம்மூர் மெசேஜ் படங்களைவிட அதிக தாக்கத்துடன் மெசேஜ் சொல்லிச் செல்கின்றனர். இதில் ‘மாற்றம் ஒன்றே மாறாதது, அதற்கேற்றவாறு தகவமைத்துக்கொள்ளும் இனம்தான் நிலைத்து நிற்கும்’ என்பதுதான் அதிகம் பதிவாவது. இதுபோக தாயின் அன்பு, அதிகாரத்தைப் பிடிக்கும் அரசியல், பெண்ணைக் கவர்வதற்கான போட்டி என விலங்குகள் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் பதிவுசெய்கிறது இந்தத் தொடர். மனிதர்களாகிய நம்மிடமிருக்கும் சில முக்கிய குணநலன்கள் எங்கிருந்து வருகின்றன என்பதும் புரிகிறது. டைட்டிலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கண்டமும் தனக்கெனத் தனி உலகத்தை எவ்வாறு உருவாக்கி வைத்திருக்கிறது என்பதைச் சொல்லவும் தவறவில்லை ‘செவன் வேர்ல்ட்ஸ், ஒன் பிளானட்.’ எலியில் தொடங்கி பிரமாண்ட திமிங்கிலங்கள் வரை அனைத்து வகையான உயிரினங்களுமே கதாபாத்திரங்களாக வருவதால், விலங்குகள் பிடிக்கும் என்பவர்கள் மிஸ் செய்யவே கூடாத தொடர் இது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தத் தொடருக்கு பிரபல இயற்கையியலாளர் டேவிட் அட்டென்பரோ வர்ணனை செய்திருக் கிறார். இவரின் குரலுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

2019 ஆக்ஸ்போர்டு அகராதியின் மிக முக்கியமான வார்த்தையாக ‘Climate Emergency’-யைத் (காலநிலை அவசரம்) தேர்ந்தெடுக்கும் அளவுக்கு இன்றைய சூழல் நெருக்கடியானது. அதற்கு மனிதர்களாகிய நாம்தான் காரணம் எனக் குறை சொல்வதுடன் நிறுத்திவிடாமல், சில தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்தத் தொடர்.
மனிதனால் எண்ணிக்கையில் 35,000 ஆக இருந்த சதர்ன் ரைட் திமிங்கிலங்கள், வெறும் 35 பெண் திமிங்கிலங்கள் இருக்கும் இனமாகச் சுருங்கிப்போயின. ஆனால் 1986-ல் திமிங்கில வேட்டைக்கு உலக நாடுகள் போட்ட ஒற்றைத் தடையால் மீண்டும் தழைக்கத் தொடங்கியது இந்தத் திமிங்கில இனம். சுமார் 30 வருடங்கள் கழித்து இன்று 2,000-க்கும் அதிகமான சதர்ன் ரைட் திமிங்கிலங்கள் வாழ்ந்துவருகின்றன. இவர்கள் காட்டிய உதாரணங்களில் இது வெறும் ஒரு சோற்றுப்பதம்தான். இன்னும் பல உதாரணங்கள் மூலம், மனிதன் எடுக்கும் ஒரு சிறிய முடிவால் எப்படி ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று இந்தத் தொடர் விதைக்கும் நம்பிக்கை இன்றைய நாளில் மிகவும் அவசியமானது. தமிழிலும் வெளிவந்திருக்கும் இந்தத் தொடரை பிபிசி எர்த் சேனலிலும், சோனி லிவ் தளத்திலும் காணலாம்.