சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வருக வருக வைக்கிங்ஸ்!

Viking Age
பிரீமியம் ஸ்டோரி
News
Viking Age

WEB SERIES

வைக்கிங் காலம் (Viking Age). ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் பதினொன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை ஐரோப்பிய வரலாற்றில் இப்படித்தான் குறிப்பிடுவர்.

அந்த அளவுக்கு மொத்த ஐரோப்பாவிலும் ஆதிக்கம் செலுத்திவந்தது வைக்கிங்ஸ் இனம். ஸ்காண்டினாவியா பகுதிகள் என்று இன்று அழைக்கப்படும் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் பகுதிகளில் இருந்த இந்த இனம் தங்கள் கப்பல் படைகளைக் கொண்டும், போர் வியூகங்களைக் கொண்டும் மொத்த ஐரோப்பாவிற்கும் தண்ணிகாட்டியது. இவர்களது கதையைக் கொஞ்சம் மசாலா கலந்து சொல்லும் வரலாற்றுப் புனைவுத் தொடர்தான் ‘வைக்கிங்ஸ்’ (Vikings). 2013 முதல் வெளிவந்துகொண்டிருக்கும் இந்தத் தொடரின் கடைசி சீசனாக ஆறாவது சீசன் சமீபத்தில் வெளிவந்துள்ளது.

கட்டெகெட்(Kattegat) என்னும் கடல் வணிக நகரத்தில் தொடங்கிய வைக்கிங்ஸின் கதை அப்படியே அன்றைய இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என மொத்த ஐரோப்பாவையும் சுற்றி ஒரு ட்ரிப் அடித்துவிட்டு மீண்டும் அதே கட்டெகெட் நகரில் வந்து நிற்கிறது இந்த இறுதி சீசனில். இந்த நகரத்தின் அருகில் இருக்கும் ஒரு சிறிய விவசாய கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ரக்னார் லோத்ப்ரோக்கின் பெயர் எப்படி ஐரோப்பா முழுவதும் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக மாறியது என்பது முதல் நான்கு சீசன்களுக்கான ஒன்லைன் என்றால், அவன் மகன்களுக்கு இடையேயான மோதலில் யார் ரக்னாரின் நிஜ வாரிசாக மகுடம் சூடுகிறான் என்பது கடைசி இரு சீசன்களுக்கான ஒன்லைன். 

வைக்கிங்ஸ்
வைக்கிங்ஸ்

ரக்னாரின் முயற்சிகளால்தான் முதல்முறையாக மேற்கு திசையில் ஒரு சிறிய வைக்கிங்ஸ் குழு படையெடுக்கிறது. புயல் மழை கடந்து இந்தக் குழு அன்றைய இங்கிலாந்தைச் சென்றடைகிறது. அதன்பின் ரக்னார் தொடுவதெல்லாம் வெற்றிதான். இப்படிப் புகழின் உச்சத்தைத் தொட்ட ரக்னாரின் நிழலில் வளரும் மகன்களில் யார் ரக்னாரின் வாரிசு, வைக்கிங்ஸ் சாம்ராஜ்யமே மொத்தமாகச் சரிகிறதா என்பதுதான் இந்த சீசன்.

இந்தப் புனைவுக் கதை வழியே வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே பொதிந்திருக்கும் வைக்கிங்ஸ் வாழ்க்கையை நேர்த்தியான நடிகர்கள் தேர்வு, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம், கலை இயக்கம் மூலம் தத்துரூபமாகப் படைக்கிறது இந்தத் தொடர். இதைச் சிறப்பாகச் செய்வதிலேயே பாதிக் கிணற்றைக் கடக்கவும் செய்கின்றனர். வைக்கிங்ஸின் நார்ஸ் மத வழிபாடு, சடங்குகள், உறவுமுறை என அவர்களது ரத்தம் தெறிக்கும் வித்தியாச வாழ்க்கைமுறையும் நம்முன் எடுத்துவருவதிலும் குறை வைக்கவில்லை. முக்கியமாக இன்று மார்வெல் படங்களில் பார்க்கும் தோர் எவ்வளவு சீரியஸான கடவுளாக வழிபடப்பட்டார் என்பது இந்தத் தொடர் பார்த்தால் பலருக்கும் தெரியவரும். பிற்போக்குத்தனங்கள் நிறைய இருந்தாலும் அன்றைய ஐரோப்பாவில் பெண்களைச் சமமாக நடத்திய ஓர் இனம் வைக்கிங்ஸ். பாத்திரப் படைப்பிலேயே அதை அநாயாசமாக உணர்த்தி விடுகின்றனர். இந்தத் தொடரில் வாள் வீசும் பெண்ணும் உண்டு, அமைதியாக அரியணை அருகே உட்கார்ந்துகொண்டே சதித்திட்டம் தீட்டும் பெண்ணும் உண்டு. இத்தனை வலுவான மாறுபட்ட பெண் கதாபாத்திரங்கள் கொண்ட வரலாற்றுத் தொடர்கள் மிகவும் சொற்பம்தான். 

வைக்கிங்ஸ்
வைக்கிங்ஸ்

ஐரோப்பாவில் கிறிஸ்துவம் தழைக்கத்தொடங்கியிருந்த காலம் என்பதால் நம்பிக்கை ரீதியான மோதல்கள் அன்று எப்படி இருந்தன என்பதையும் ஒளிவுமறைவின்றிக் காட்சிப் படுத்தியிருக்கின்றனர். ‘அட’ சொல்லவைக்கும் வியூகங்கள், மிரளவைக்கும் ஆக்‌ஷன் எனப் போர்க் காட்சிகள் அனைத்துமே தரமான சம்பவங்கள்.

நான்காவது சீசனிலிருந்து சீசனுக்கு 20 எபிசோடுகள் வெளியாகின. இவை ஏ, பி என இரு பிரிவுகளாக வருடத்தின் முதல் பாதியில் 10 எபிசோடுகளும் பின் பாதியில் 10 எபிசோடுகளும் வெளிவருவது வழக்கம். அப்படிக் கடைசி சீசனின் முதல் பாதிதான் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்துள்ளது. இது வெப்-சீரிஸா இல்லை வரலாற்றுப் புத்தகமா என்ற குழப்பமே வந்துவிடும் அளவுக்கு அத்தனை எபிசோடுகள் இதுவரை வெளிவந்துள்ளன. இதனால் ஒரு வாரத்தில் பார்த்துவிடலாம் என்று ஆழம் தெரியாமல் யாரும் காலை விட்டுவிட வேண்டாம். பொறுமையாக நாளுக்கு ஒரு எபிசோடு எனப் பார்ப்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ‘வைக்கிங்ஸ்’ பொழுதுபோக்குத் துணையாக நிச்சயம் இருக்கும். ஆனால், ‘என்னப்பா சண்டையே வரல’ என முதல் சில எபிசோடு களிலேயே கிளம்பி விடாமல் சூடுபிடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். 

வைக்கிங்ஸ்
வைக்கிங்ஸ்

கடந்த வருடம்தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ முடிவடைந்தது என்பதால் அந்தத் தொடரின் பிரமாண்ட போர்க் காட்சிகளை மிஸ் பண்ணுபவர்களுக்கு ‘வைக்கிங்ஸ்’ நிச்சயம் தீனி போடும். என்ன, டிராகன்ஸ் மட்டும் இருக்காது!