
வெப் சீரிஸ்
கொரோனா உலகம் முழுக்க கிரிக்கெட்டுக்குத் தடைபோட, இப்போது விளையாட்டைவிட, ‘The Test - A new era of Australian cricket’ என்ற அமேசான் வெப் சீரிஸ் டிரெண்டிங்கில் இருக்கிறது.
கேப் டவுன் சம்பவத்துக்குப் பிறகு ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளரானதில் தொடங்கும் தொடர், ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் வெற்றியில் முடிகிறது. ஸ்மித், வார்னர் இல்லாத ஒரு புதிய சகாப்தத்திற்கு ஆஸ்திரேலிய அணி எப்படித் தயாரானது, தொடர் தோல்விகளிலிருந்து எப்படி மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்பியது, மீண்டும் தங்கள் மக்களின் நன்மதிப்பை எப்படிப் பெற்றது என்பதை மிகவும் நேர்த்தியாகத் திரைக்குள் கொண்டுவந்திருக்கிறது படக்குழு.

ரசிகனின் பார்வையில்!
இத்தனை காலம் கிரிக்கெட் என்பது வெறும் வீரர்களின் விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கால்பந்தைப் போல் பயிற்சியாளர்களுக்கோ, டெக்னிக்கல் டீமுக்கோ இங்கு போதிய அங்கிகாரம் கொடுக்கப்பட்டதில்லை. அவர்களின் பங்களிப்பைத் திரையில் காட்டியிருப்பதுதான் இந்தத் தொடரைப் பாராட்டவேண்டியதற்கான முதல் காரணம். டெக்னிக்கல் அனலிஸ்ட் எத்தனை போட்டிகளை மீண்டும் மீண்டும் பார்த்து ஆராய்ச்சிகள் செய்யவேண்டியிருக்கிறது, விளையாட்டு ஆலோசகர்கள் வரலாற்றைப் புரட்டி தரவுகள் திரட் டவேண்டியிருக்கிறது, ஒவ்வொரு போட்டிக்குத் தயாராவதற்கும் எக்கச்சக்க டிஜிட்டல் பிரசன்டேஷன்கள் செய்யவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு தரவையும் அலசி, ஆலோசித்து, விவாதித்து… கிரிக்கெட் வெறும் பேட்டும் பந்தும் கொண்டு ஆடப்படும் விளையாட்டு இல்லை என்பது ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறது இந்தத் தொடர்.
வெறும் டெக்னிக்கல் பக்கங்கள் மட்டுமல்லாமல், வீரர்களின், அணியின் உணர்வுகளையும் அப்படியே காட்டியிருப்பது இந்த வெப்சீரிஸை ஜீவனுள்ளதாக மாற்றியிருக்கிறது.
ஆஷஸ் தொடரில் ரன் அவுட்டால் வெற்றியைத் தவறவிட்ட லயான், உலகக் கோப்பைப் போட்டியில் காயமடைந்து வெளியேறிய கவாஜா, ஷான் மார்ஷின் காயத்தைப் பற்றிப் பேசிய கூல்டர்நைல்… இவர்களின் அழுகை ஒரு நிமிடம் ஒவ்வொரு வரையும் உறைய வைக்கும். அறிமுக வீரர் களுக்கான தொப்பியை வழங்கும் அந்தச் சில நிமிடக் காட்சிகள், ‘இவற்றையெல்லாம் ஏன் தொலைக்காட்சியில் காட்டு வதில்லை’ என்ற கேள்வியை எழுப்பும். லாங்கர், தான் ஆஸ்திரேலியத் தொப்பியைப் பற்றிப் பேசும் சில நொடிகள் இந்தத் தொடரின் மிகச் சிறந்த பகுதி. ஒரு வீரன் தன் கனவுகள் நனவாகும் அந்தத் தருணத்தின் உச்சபட்ச மகிழ்ச்சியைக் கண்களில் வெளிப்படுத்தியிருப்பார் ஆஸி பயிற்சியாளர்.

ஆஸ்திரேலியர்களின் பார்வையில்!
“It wasn’t about damage to a ball. It was about damage to a brand” என்று இந்தத் தொடரின் முதல் எபிசோடில் சொல்வார் பத்திரிகையாளர் பீட்டர் லேலர். மிகவும் பொருத்தமான வார்த்தைகள். மொத்த உலகமும் வியந்த, பொறாமைப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒரு கேலிப் பொருளாக மாறியதை அந்த நாடு அவமானமாகவே கருதியது. ஏனெனில், இந்த விளையாட்டுதான் அவர்களின் அடையாளமாகக் கருதப்பட்டது. அந்த மோசமான நிலையில் இருந்த அணி, இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்று, உலகக் கோப்பையின் அரையிறுதிக்குச் சென்று, இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வென்றது சாதாரண விஷயமில்லை. இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நடந்த டிராமாக்களை அழகாக, உணர்ச்சிபூர்வமாகப் படைத்திருக்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணி இருந்த அதே சூழ்நிலையில்தான் இந்த ஆஸ்திரேலிய அணியும் இருந்து, இப்போது மீண்டிருக்கிறது. கங்குலியின் பங்களிப்பை எப்படி இந்திய ரசிகர்கள் இன்னும் கொண்டாடு கிறார்களோ, அதுபோல் ஒரு கேப்டனாக டிம் பெய்னின் பங்களிப்பை ஆஸ்திரேலி யர்கள் கட்டாயம் கொண்டாட வேண்டும். சொல்லப்போனால், இந்திய அணி சரிந்தபோது அது மற்றுமொரு அணி. அவ்வளவுதான். ஆனால், பெய்ன் வழிநடத்த வேண்டி யிருந்தது உலக சாம்பியனை. எதிர்பார்ப்பு, நெருக்கடி, விமர்சனம் எல்லாமே பன்மடங்கு அதிகம். இருந்தும் அதை அற்புதமாகச் செய்தி ருக்கிறார் அவர் - அதற்கான முழு அங்கீகாரம் இல்லாமல். இந்த வெப் சீரிஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் எழுச்சியில் அவரது பங்களிப்பைத் தெளிவாக உணர்த்துகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் போராடித் தோல்வியைத் தவிர்த்தது, கையில் அடிபட்டும் பின்வாங்காமல் அணியை வழிநடத்தியது, மொத்த அணியும் கோலியிடமிருந்தும் அவரது மைண்ட் கேம்களிலிருந்தும் விலகியிருந்தபோது, ஸ்லெட்ஜிங்கின் மெல்லிய கோடுகளைத் தாண்டாமல் கோலியோடு மைண்ட் கேம் ஆடியது, ஆஷஸ் தொடரின் முக்கியமான நேரங்களில் முக்கியமான முடிவுகள் எடுத்தது எனத் தன்னிடம் யாரும் எதிர்பார்க்காத விஷயங்களை, தேவையான நேரங்களில் வெளிப்படுத்தினார் பெய்ன். ஆஸ்திரேலிய அணியிடம் எதிர்பார்க்கப்படும் ஈகோவையும், விரும்பப்படாத ஆக்ரோஷத்தையும் சரியான அளவில் கையாண்டது அட்டகாசம். ஸ்மித்தின் கம்பேக், லாபுஷேனின் எழுச்சி என இந்தத் தொடர் முதன்மைப்படுத்திய விஷயங்களில் ஆஸ்திரேலியர்கள் மறக்கக்கூடாத பகுதி இது!
இந்த அணியின் எழுச்சிக்காகக் கடுமையாக உழைத்த லாங்கர், தங்கள் நண்பனுக்காக உடன் வந்து உதவிய முன்னாள் வீரர்கள் (ஸ்டீவ் வாஹ், பான்ட்டிங், கில்கிறிஸ்ட், ஹெய்டன்), காயம் பட்டும் அசராமல் போராடிய வீரர்கள் என ஆஸ்திரேலியர்கள் உச்சிமுகர நிறையவே இருக்கின்றன இந்த எட்டு எபிசோடுகளில்.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும்போது ரசிகர்களால் இகழப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், கடைசிப் போட்டியில அவுட்டாகி வெளியேறும்போது மொத்த இங்கிலாந்தும் ஸ்டாண்டிங் ஒவேஷன் கொடுக்கும். அந்த இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டும் எழுந்து நின்றிருக்கும். இந்த மாற்றங்களைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் இந்தத் தொடர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிகமுக்கிய ஆவணம்.
விமர்சனப் பார்வையில்!
ஒரு கட்டத்தில் “ஆட்டத்துக்கு முன் பயிற்சி செய்ய கிரவுண்டுக்குள் சென்றால் ஒரு இன்ச் கூட இடமில்லாமல் அத்தனை கேமராக்கள் இருக்கின்றன. ஒரு கிரிக்கெட் போட்டி தொடங்கப்போகிறது என்பதையே மறந்து விடுவார்கள் போல” என்று சிரித்துக்கொண்டே சொல்வார் கம்மின்ஸ். அதைச் சிரித்துக் கொண்டேதான் சொல்லவேண்டும் என்பது அவருக் கான கட்டாயம். ஆனால், இந்த விளையாட்டில் ஒளிபரப்பாளர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான உதாரணம் அது.

ஒரே நாளில் பாதாளம் தொட்ட அணி மீண்டும் எப்படி தங்களின் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றியது என்ற ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான ஒன்லைனை, அதே கமர்ஷியல் மசாலாக்கள் சேர்த்துப் படைத்திருக்கிறது இந்தத் தொடர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் மரியாதையை மீட்ட கதையின் ஆவணம் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அந்த மரியாதையை மீட்கும் ஆபரே ஷனின் முக்கிய ஆயுதமாகவே இதைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா தோற்றுவிட்டது. மோசமான பேட்டிங்கும், மிகமோசமான பௌலிங்கும் அதற்கான காரணங்கள். ஆனால், லீக் போட்டியின்போது கவாஜாவுக்கு ஏற்பட்ட காயம், அதற்கு முன்னால் ஷான் மார்ஷுக்கு ஏற்பட்ட காயம் போன்றவற்றையெல்லாம் அந்தத் தோல்விக்கான முக்கிய காரணங்களாக முடிச்சுப்போடுகிறார்கள். தொடரின் ஆரம்ப எபிசோடுகளில் வார்னர், ஸ்மித் ஆகியோரின் முகம் வரும்போதெல்லாம் பரிதாபம் தொற்றிக்கொள்ளும் வகையில் ஸ்கிரிப்டை எழுதியிருக்கிறார்கள்.
என்னதான் சில இடங்களில் கொத்தாளத் தேவனின் பார்வையில் அன்னலட்சுமியின் கதையைக் கேட்பதுபோல் இருந்தாலும் அவை அபத்தம் என்று சொல்லுமளவுக்கு இல்லை. ஆனால், இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்க கோலியைக் கொஞ்சம் அதிகமாகத் துதிபாடியதுதான் உறுத்தல். “அவர்தான் உலகின் சிறந்த வீரர்” என ஆஸ்திரேலியாவின் அனைத்துப் பயிற்சியாளர்களும் ஒருமுறையாவது சொல்லிவிடுகிறார்கள். லாங்கர் கொஞ்சம் அதிகமாகவே சொல்கிறார். உலகக் கோப்பை, ஆஷஸ் போன்ற தொடர்களில் எதிரணிக்கு எதிராகத் தீட்டப்பட்ட திட்டங்கள் எதுவும் காட்டப்படவில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலியைக் கையாளத் தீட்டிய திட்டங்கள் பல காட்சிகளில் காட்டப்படுகின்றன. அப்போதெல்லாம் ஆஸி டிரஸ்ஸிங் ரூமிலிருக்கும் ஒவ்வொருவரும் ‘விவேகம்’ பட விவேக் ஓபராயாகத்தான் தெரிகிறார்கள்.

இதுபோன்ற சில விஷயங்களைத் தவிர்த்து இந்தத் தொடரில் குறை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. அந்த அளவுக்குத் தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறது படக்குழு.