பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சாவின் சாவிகள்!

காமிக்ஸ் கதைகளைக் கொண்ட வெப் சீரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
காமிக்ஸ் கதைகளைக் கொண்ட வெப் சீரிஸ்

இந்த சீரிஸில் பயன்படுத்தப்பட்ட ஃபேன்டஸி விஷயங்கள் அனைத்தும் சிறப்பாய் வொர்க்அவுட் ஆகியிருக்கின்றன.

காமிக்ஸ் கதைகளைக் கொண்ட வெப் சீரிஸ் இப்போதைய டிரெண்ட். அந்த வரிசையில் 2008-ல் காமிக்ஸ் தொடராக வெளிவந்த `லாக் அண்டு கீ’யைத் தழுவி, நெட்ஃப்ளிக்ஸில் வெப்சீரிஸாக வெளியிட்டிருக்கிறார்கள்.

சாவின் சாவிகள்!
சாவின் சாவிகள்!

ஜோ ஹில்லும், கேப்ரியல் ரொட்ரீகஸும் இணைந்து உருவாக்கிய காமிக்ஸை, கார்ல்டன், மெரிடித், ஆரோன் ஆகிய மூவரும் மெருகேற்றி வெப் சீரிஸாக உருவாக்கியுள்ளனர். அமைதியாய் வாழ்ந்துகொண்டிருக்கும் `லாக்’ குடும்பத்துக்குள் நுழையும் விருந்தாளி ஒருவர், `அந்த கீ ஹவுஸ் எங்க இருக்கு’ என்ற ஒற்றைக் கேள்வியை மட்டும் கேட்டு, குடும்பத் தலைவனைச் சுட்டுக்கொன்று விடுகிறார். அதன் பின்னணியை ஃபேன்டஸி கலந்து எடுத்துச் சொல்வதே கதை. முதல் சீசன் மொத்தம் 10 எபிசோடுகளாக வந்திருக்கிறது.

குடும்பத் தலைவரான ரெண்டல் லாக் கொலைசெய்யப்பட்டதையடுத்து, லாக் குடும்பம், சியாட்டலில் இருந்து மாத்திசன் எனும் இடத்திலிருக்கும் அவரது பூர்வீக வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிடுகிறது. குடும்பத் தலைவி நீனா லாக், மூத்த மகன் டைலர் லாக், இரண்டாவது மகள் கின்சி லாக், கடைக்குட்டி போடி லாக் என இதுதான் லாக் குடும்பம். `கீ ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அந்த வீட்டை அவர்கள் தங்குவதற்காகத் தயார்செய்து கொடுக்கிறார் ரெண்டல் லாக்கின் தம்பி டங்கன் லாக். புது இடம், புது வீடு, புது ஸ்கூல் எனக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாய் நாள்களைக் கடத்துகிறார்கள்.

லாக் குடும்பத்தின் கடைக்குட்டியான போடிக்கு மட்டும் அவ்வப்போது வீட்டுக்குள்ளே ரீங்கார ஒலி கேட்கிறது. ஒவ்வொரு முறையும் அதைப் பின்பற்றிப் போகும் போடிக்கு, வெவ்வேறு முத்திரைகள்கொண்ட பல்வேறு சாவிகள் கிடைக்கின்றன. இன்னொரு பக்கம் அந்தச் சாவிகளைத் தேடி டாட்ஜ் எனும் அமானுஷ்யப் பெண்ணொருத்தி வெறித்தனமாய் வேட்டையாடி இவர்களது வாழ்க்கைக்குள் வருகிறாள். `சாவியைக் கொடுக்காவிட்டால் கொன்றுவிடுவேன்’ என்று போடியையும் மிரட்டுகிறாள். டைலருக்கும், கின்சிக்கும் மொத்த விஷயமும் தெரியவர, தந்தை இறப்புக்குப் பின்னாலிருக்கும் மர்மங்களையும், டாட்ஜ் என்ற அமானுஷ்யப் பெண் யார் என்ற விவரத்தையும் தங்களுக்குக் கிடைக்கும் மேஜிக் சாவிகளைக்கொண்டு திறக்கிறது லாக் குடும்பம்.

இந்த சீரிஸில் பயன்படுத்தப்பட்ட ஃபேன்டஸி விஷயங்கள் அனைத்தும் சிறப்பாய் வொர்க்அவுட் ஆகியிருக்கின்றன. படத்தின் விஷுவலையும், சவுண்ட் மிக்ஸையும் டால்பி விஷன் மற்றும் அட்மாஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள். இதையுணர்ந்த ஒளிப்பதிவாளர்களான டிகோ மற்றும் கோலின் அதற்கேற்ப அபார உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். மாத்யூ, லில்லி, பால், ஆண்ட்ரூ, ஃபிலிப் என ஐந்து எடிட்டர்களும் தங்களுடைய பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

ரெண்டல் லாக் இறந்துபோனதால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதைச் சிறப்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ஐந்து நடிகர்களும். அதிலும், கணவரை இழந்த மனைவியாக நீனா லாக் வெளிப்படுத்தும் நடிப்பு அபாரம்.

சிம்பிளாகப் பார்த்தால், ஒரு கதவு... அதன் இருபக்கமும் நடக்கும் நிகழ்வுகள். திரைக்கதை உத்திக்காக வெவ்வேறு சூழலில் காட்டப்படுகின்றன. காரணமின்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்குமான பதில்கள், எபிசோடுகளின் இறுதியில் சொல்லப்படுகின்றன. இதை மீறி சில க்ளிஷேக்களும், லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கின்றன. கடைசி மூன்று எபிசோடுகளில் கொண்டு வந்திருந்த பரபரப்பை, சீசனின் பாதியிலிருந்தே கடத்தியிருக்கலாம்.

ஒரு பக்கா விஷுவல் டிரீட்டையும், சின்னதாக குடும்ப சென்டிமென்ட்டை அனுபவிக்கவும் `லாக் அண்டு கீ’யைக் கட்டாயம் விளையாடிப் பார்க்கலாம்!