
WEB SERIES
மனிதர்களை ஜோம்பிகளாக்கும் ஒரு செடி... அதை வைத்து சாகாவரம் பெற விரும்பும் அரச குடும்பம்... இந்த ஆசை, ஒரு நாட்டையே எப்படி நிர்மூலமாக்குகிறது என்பதை த்ரில்லர், ஹீரோயிசம், ஹாரர், சென்டிமென்ட், சாகசம், யூகிக்க முடியாத திருப்பங்கள் என எல்லாவற்றையும் சரியான விகிதத்தில் கலந்து சுவாரஸ்யமாகச் சொல்கிறது நெட்ஃப்ளிக்ஸின் முதல் கொரிய வெப்சீரிஸான ‘கிங்டம்’. ‘தி கிங்டம் ஆஃப் தி காட்ஸ்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இது கிட்டத்தட்ட நம் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’சில் ஜோம்பி புகுந்த கதைதான்.
பெரும்பாலான ஜோம்பி கதைகளின் அரசியல் ஒன்றுதான். கொடூர வைரஸ் தாக்கி ஜோம்பி ஆகிவிட்ட மனிதர்களை மீட்கவே முடியாது. அவர்களைக் கொன்றால் மட்டுமே மீதியிருக்கும் மனித இனத்தைக் காக்க முடியும். இது சரிதானா என்று தர்க்கங்கள் பேசும் இவ்வகைப் படங்கள் மற்றும் தொடர்களில் பொழுதுபோக்குக்கும் பஞ்சம் இருக்காது. ‘தி வாக்கிங் டெட்’ தொடர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இதைத் தாண்டி ‘ஜோம்பிலேண்டு’ போன்று பொழுதுபோக்கை மட்டுமே மையமாக வைத்து வெளியாகும் ரத்தம் தெறிக்கும் ஜோம்பி காமெடி டிராமா படங்களும் உண்டு. ஜோம்பி என்ற ஜானர், இதைத் தாண்டி பெரிதாக விரிவடைந்தது இல்லை. ‘கிங்டம்’ அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறது.கொரியாவைக் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் ஆண்ட ஜோசியான் வம்சத்தின் காலத்தில் நடக்கிறது ‘கிங்டம்’ கதை.

நாட்டை ஆளும் அரசன் தற்போது ஒரு ஜோம்பி. முடிசூடக் காத்திருக்கும் இளவரசனை ஓரங்கட்டி, தனக்குப் பிறக்கப்போகும் மகனை அரசனாக்க சூழ்ச்சி செய்கிறாள் அரசனின் இரண்டாவது மனைவி. தான் கர்ப்பம் தரித்திருப்பதால், குழந்தை பிறக்கும் வரை, அரசன் ஜோம்பியானதை மறைத்துவிட்டால் மகுடம் கிடைத்துவிடும் என்பது அவளின் எண்ணம். இதை உடைத்து, தன் தந்தையின் உண்மை நிலையறிய ஒற்றைக் காவலனுடன் தெற்கு நோக்கிப் புறப்படுகிறான் இளவரசன். அரசனிடம் ஆரம்பித்த ஜோம்பி வியாதி தன் நாடு முழுவதும் பரவுவதைக் கண்கூடாகப் பார்க்கும் இளவரசன் அடுத்தடுத்து சந்திக்கும் சவால்களும், அதற்கு அரசியல் ரீதியாகவும் அறத்தின்படியும் அவன் எடுக்கும் முடிவுகளும் முன்வைக்கும் பதில்களும்தான் ‘கிங்டம்’மின் கதை சாராம்சம்.

எல்லா ஜோம்பி கதைகளிலும் இருக்கும் ஒரு சுவாரஸ்ய முடிச்சு, முதன்முதலில் இந்த வைரஸைப் பரப்பியது அல்லது தொற்றைப் பெற்றது யார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான். இங்கு அதைத் தெளிவாக அரசன்தான் என முதலிலேயே சொல்லிவிட்டாலும், அதன் பின்னர் இந்த முதல் பரவலுக்கு முன், பின் கதைகளையும் பொருத்தி சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார்கள். அதிலும் ஒரு சிலரின் அலட்சியத்தால் அது ஊர் முழுக்க எப்படிப் பரவுகிறது என்பது இந்தக் கொரோனா காலத்திற்கான பாலபாடம். ஜோம்பி கதைகளின் வழக்கமான மசாலாக்களை தாண்டி ஆகப்பெரும் அரசியல் கதை ஒன்றும் விரிகிறது. அரியணை ஆசை என்னவெல்லாம் செய்யும், மாநில சுயாட்சி vs மத்திய அரசாட்சி, ராஜ வம்சப் பெருமைகள் சரியா, எல்லா மனித உயிர்களும் ஒன்றுதான் எனப் பல வாதங்களைத் தொட்டுச் செல்கிறது இந்தத் தொடர்.
தொடரின் பலம் இளவரசன் ஜீ சாங்கின் கதாபாத்திரம். அவன் எடுக்கும் பல முடிவுகள்தான் கதையையே அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன. அதே சமயம் முழுக்க முழுக்க ஒரே கதாபாத்திரத்தின் மேல் எல்லாவற்றையும் திணிக்காமல், பேராசை இளையராணி, ஜோம்பி வைரஸின் வரலாற்றை அறிந்து அதை ஒழிக்கப்போராடும் பெண் மருத்துவர், இளவரசனின் கட்டளையே சாசனம் எனச் செல்லும் அவனின் காவலன், இளவர சனுக்குப் பக்கபலமாக நிற்கும் அவனின் குரு என, துணைக் கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இளவரசனுக்கு அடுத்து ஸ்கோர் செய்வது முன்னாள் போர் வீரன் யோங்-சின் கதாபாத்திரம். அரசர்களின் பேராசைக்கு வீரர்களின் உயிரை எல்லைக்கோட்டில் பணயம் வைக்கும் போர் அரசியலையும் பார்ப்பவர்களைக் கலங்கடிக்கும் வகையில் இந்தப் பாத்திரம் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் டிக் அடித்த ‘கிங்டம்’ சொதப்பியது என்னவோ இரண்டாம் சீசனின் பிற்பாதியில்தான். திரைக்கதையில் ட்விஸ்ட்கள் எல்லாம் முடிந்த பின்னரும் ‘போர், ஆமாம் போர்’ மோடிலேயே 2 எபிசோடுகள் வரை ஓடுவது ஏன் என்பதுதான் புரியவில்லை. இதுவரை 2 சீசன்களாக (12 எபிசோடுகள்) வந்திருக்கும் ‘கிங்டம்’ தொடர், கடைசியாக 3-வது சீசனுக்கும் லீடு கொடுத்து முடிந்திருக்கிறது. ஜோம்பி அட்டகாசம் தொடரட்டும்!