கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

வெப் சீரிஸ் ரவுண்டப்!

Upload - 2020
பிரீமியம் ஸ்டோரி
News
Upload - 2020

இணையம்

அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களின் இந்திய வருகையால் ஆங்கில வெப் சீரிஸ்கள்/டிவி சீரிஸ்கள் பல தமிழ்கூறு நல்லுலகில் `டாக் ஆப் தி டவுன்' ஆகிவருகின்றன. கேம் ஆப் த்ரோன்ஸ், பிரேக்கிங் பேட், பிரசன் பிரேக், மணி ஹெய்ஸ்ட், ப்ரெண்ட்ஸ் போன்ற பிரபலமான பல தொடர்கள் தவிர்த்து சமீப காலத்தில் கவனம் ஈர்த்த சில தொடர்களை இங்கே பார்ப்போம். இவற்றையெல்லாம் மிஸ் பண்ணாம பார்த்துடுங்க மக்களே!
வெப் சீரிஸ் ரவுண்டப்!

Upload - 2020

வருடம் 2033... கோர விபத்தில் சிக்்குகிறார் ஹீரோ நேதன் பிரவுன். உயிர்பிழைப்பாரா, தெரியவில்லை. அவர்முன் இருப்பது இரண்டு வாய்ப்புகள். ரிஸ்க் எடுத்து உயிர்வாழப் போராடுவது, இல்லை, டிஜிட்டல் சொர்க்கத்தில் ‘அப்லோடு’ ஆவது. ஆம், வருங்கால உலகில் சொர்க்கமும் டிஜிட்டல்தான். சுய நினைவை மொத்தமாக டிஜிட்டல் சொர்க்கத் துக்கு அப்லோடு செய்ய முடியும். நேதன் இரண்டாவது ஆப்ஷனை டிக் அடிக்கிறார். ஆனால் அது சொர்க்கமாக இல்லை, ஏதோ சிறையில் அடைபட்டதாக உணர்கிறார். அங்கு வேலைசெய்யும் நோராவுடன் காதல் மலர்கிறது. தொலைந்துபோன நினைவுகளை நேதனுக்காகத் தேடுகிறார் நோரா. நேதன் உண்மையில் விபத்துக்குள்ளானாரா, இல்லை அது கொலையா எனப் பல கேள்விகள். அனைத்துக்கும் விடைதேடுவதுதான் முதல் சீசனின் கதை. ‘தி ஆபீஸ்’ தொடரை உருவாக்கிய கிரெக் டேனியல்ஸின் மற்றொரு ஜாலி படைப்புதான் இந்த ‘அப்லோடு!’

Altered Carbon - 2018-2020

வாழ்வதற்கு பூமியைத் தவிர பல கிரகங்கள் இருக்கும் எதிர்காலம். செயற்கை நுண்ணறிவுக்கு மனிதத் தன்மை வந்துவிட்டது, விர்ச்சுவல் ரியாலிட்டி, ரியாலிட்டியை மிஞ்சிவிட்டது. மனிதனும் மரணமில்லாதவனாக மாறிவிட்டான். இன்று கூகுள் டிரைவில் பைல்களைச் சேமிப்பதுபோல ஒரு மனிதனின் மொத்த சுய நினைவையும் ஸ்டோர் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆனால், உலகிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மட்டும் மறையவில்லை. மனிதனின் அட்டூழியங்களும் குறையவில்லை. இப்படியான ஒரு உலகில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்தான் ‘ஆல்டெர்டு கார்பன்.’ விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தாலும் பட்ஜெட்டுக்கான பார்வையாளர்கள் இல்லையென இதற்கு இப்போதே எண்டு கார்டு போட்டுவிட்டது நெட்ப்ளிக்ஸ்.

வெப் சீரிஸ் ரவுண்டப்!

The Crown - 2016

இரண்டாம் உலகப்போர் முடிந்து, 1952-ம் ஆண்டு பிரிட்டன் மன்னராக இருந்த, ஆறாம் ஜார்ஜ் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைய, ஆண் வாரிசு யாரும் இல்லாத காரணத்தால் 26-வது வயதிலேயே பிரிட்டனின் ராணியாகப் பதவியேற்கிறார் எலிசபெத். இன்று வரை இவர்தான் பிரிட்டனின் ராணி. இப்போது வயது 94. இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்றைய பிரிட்டன் எப்படி இருந்தது, நவீன மாற்றங்களுக்கு நடுவே அரச குடும்ப வாழ்க்கை எப்படியானதாக மாறிக்கொண்டே வந்தது என்பதைக் காட்ட பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஒரு ராயல் ட்ரிப் கூட்டிச்செல்லும் ஹை-பட்ஜெட் முயற்சி ‘தி க்ரௌன்.’ அந்தக் காலத்தை அப்படியே திரையில் பிரதிபலிக்க பெரும் பொருட்செலவில் இதைத் தயாரித்துவருகிறது நெட்ப்ளிக்ஸ்.

Vikings - 2013-2020

ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் பதினொன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை ஐரோப்பிய வரலாற்றில் வைக்கிங் காலம் (Viking Age) என்று குறிப்பிடும் அளவுக்கு மொத்த ஐரோப்பாவிலும் ஆதிக்கம் செலுத்திவந்தது வைக்கிங்ஸ் இனம். நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய ஸ்காண்டினாவியா பகுதிகளில் வாழ்ந்துவந்த இந்த இனம் அதன் மேம்பட்ட கப்பல் படைகளைக் கொண்டும், போர் வியூகங்களைக் கொண்டும் மொத்த ஐரோப்பாவிற்கும் தண்ணிகாட்டியது. இந்தக் கதையைப் புனைவாகச் சொல்லும் சீரிஸ்தான் ‘வைக்கிங்ஸ்.’ 2013 முதல் வெளிவந்துகொண்டிருக்கும் இந்தத் தொடரின் கடைசி சீசன் இந்த ஆண்டின் இறுதியில் வெளிவரவுள்ளது.

வெப் சீரிஸ் ரவுண்டப்!

Big Little Lies - 2017-2019

நம்மூரில் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா என டாப் ஹீரோயின்ஸ் அனைவரும் சேர்ந்து ஒரே வெப்சீரிஸில் நடித்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஆங்கில சீரிஸ்தான் ‘பிக் லிட்டில் லைஸ்.’ ரீஸ் விதர்ஸ்பூன், நிக்கோல் கிட்மேன், லாரா டெர்ன் என முக்கிய ஹாலிவுட் நடிகைகள் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடர் இது. ஐந்து தாய்கள், தங்கள் குழந்தைகளை ஒரு பள்ளியில் சேர்க்கின்றனர். எப்படி ஒரு சம்பவம் இவர்கள் வாழ்க்கையை ஒரு புள்ளியில் இணைக்கிறது என்பதுதான் கதை. முதலில் ஒரு சீசனாக மட்டும் திட்டமிடப்பட்ட இந்த சீரிஸ், விருதுகள், மக்கள் ஆதரவு என எதிர்பார்த்ததைவிடப் பெரிய வரவேற்பைப் பெற இன்னொரு சீசனுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த சீசனில் இந்த நட்சத்திரக் கூட்டணியுடன் 40 ஆண்டுகளாக வெள்ளித்திரையை ஆண்டுவரும் ஆளுமையான மெரில் ஸ்ட்ரீப்பும் இணைந்தார்.

வெப் சீரிஸ் ரவுண்டப்!

Better Call Saul- 2015

‘நீதிடா, நேர்மைடா’ என இருந்த ஒரு லாயர் எப்படி குற்றவாளிகள் விரும்பும் தில்லாலங்கடி கிரிமினல் லாயர் ஆகிறார் என்பதுதான் ஒன்லைன். அதன் வழி சிறந்த டிவி தொடர்/வெப்சீரிஸாகக் கருதப்படும் ‘பிரேக்கிங் பேட்’-ல் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கான பின் கதையையும் சொல்கிறார்கள். ஆம், ‘பிரேக்கிங் பேட்’-ன் ஸ்பின்-ஆஃப் சீரிஸ்தான் இது. அதில் வரும் சால் குட்மன் கதாபாத்திரத்தின் பின்கதைதான் இந்தத் தொடர். களம் வேறு என்றாலும் எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்துமே ‘பிரேக்கிங் பேட்’ பதத்தில் இருக்கின்றன. ஆனால், ஹியூமர்தான் இந்தத் தொடரின் முக்கிய பலம். ‘பிரேக்கிங் பேட்’-ல் வந்த சில முன்னணி கதாபாத்திரங்கள் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கதாபாத்திரங்களுக்குமே இந்த கதையிலும் வேலையிருக்கிறது.