Published:Updated:

``கொரோனாவால முந்தைய தலைமுறை ஆள்களும் OTT-க்கு வந்தாச்சு!" - என்ன சொல்கிறார்கள் OTT இயக்குநர்கள்?!

Representational Image
Representational Image

கொரோனோ காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடியிருக்கும் நிலையில் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிக அளவில் OTT பக்கம் வரலாம் என்கின்றன செய்திகள்.

கொரோனா பீதி எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கியிருக்கிறது. மால், பீச், மார்க்கெட், வணிக வளாகங்கள், ரயில் நிலையம், கடை வீதி என மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி இருக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றான திரையரங்குகள் அனைத்தும் `கொரோனா’வால் மூடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு என இந்திய சினிமாவின் முக்கிய மொழிப்படங்களுக்கான படப்பிடிப்பும் இந்த மாத இறுதிவரை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

இந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகவிருந்த பல பெரிய படங்களின் ரிலீஸும் தள்ளிப்போகிறது. நிலைமை இப்படியிருக்க, வீட்டில் அடைந்திருக்கும் மக்களுக்கான பொழுதுபோக்காக, மொபைல் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக OTT பிளாட்ஃபார்ம் பக்கம் மக்கள் நகர்ந்திருக்கிறார்கள் என டாக் வர, களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள OTT தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இயக்குநர்கள் சிலரிடம் பேசினோம்,

`திருதிரு துறுதுறு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நந்தினி. தமிழின் முதல் வெப் சீரிஸான `நிலா நிலா ஓடிவா’வை இயக்கியவர், இப்போது வேறொரு வெப்சீரிஸில் பிஸி. முழுக்க வெப் சீரிஸ் பக்கம் கவனம் திருப்பியிருக்கும் இவரிடம் இந்த நிலை குறித்து அறிய தொடர்புகொண்டோம், ``கொரானா காய்ச்சல் பரவுதுங்கிறதைத் தாண்டி, அது தொடர்பான வந்ததிகளும் தவறான தகவல்களும்தான் அதிகம் பரவிக்கிட்டிருக்கு. அதனால, தேவையான சரியான தகவல்களை மக்கள் தெரிஞ்சு வெச்சுக்கணும்கிறது அவசியமானது. இதனால குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ், வேலை வீட்டுல இருந்து பாக்குறதுனு குடும்பமா மக்கள் ஒண்ணு சேர்ந்திருக்கதுக்கான வாய்ப்பாவும் இதைச் சொல்லுவேன். நீங்க கேட்டமாதிரி, நல்லதுலையும் ஒரு கெட்டதுன்னா கொரானாவால தியேட்டர்கள் மூடப்பட்ட இந்த சமயத்துல வெளியாகியிருக்க பல நல்ல படங்கள் அப்படியே முடங்கியிருக்கதுதான்."

இயக்குநர் நந்தினி
இயக்குநர் நந்தினி

``மக்களுக்கான பொழுதுபோக்கும் வீட்டுக்குள்ள பெருசா இல்லாத இந்த சமயத்துல, OTT நோக்கி மக்கள் வர்றது ஓரளவுக்கு அதிகமாகிருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொரோனோ சமயத்துல வெளியாகி முடங்கியிருக்க படங்களை OTTல ரிலீஸ் பண்ணலாம். OTTனாலே என்னான்னு தெரியாம, இல்ல இதை அதிகம் பயன்படுத்தாத மக்களை இங்க எடுத்துக்கிட்டு வர்றதுக்கான வாய்ப்பாவும் இதைப் பயன்படுத்திக்கலாம். அதுக்குப் பிறகுகூட தியேட்டர்ல ரீ-ரிலீஸ் பண்ணணும்னா சூழலைப் பொறுத்து பண்ணலாம். OTT, தியேட்டர் ரெண்டுமே வேற வேற மீடியம்கிறதால இங்க ரிலீஸ் பண்ணப் படத்தை தியேட்டர்ல திரும்பவும் ரிலீஸ் பண்ணக்கூடாதுங்கிற மாதிரியான எந்த கண்டிஷனும் இல்லை. OTT-ல பார்த்தாச்சு, திரும்பவும் தியேட்டர்ல ரிலீஸ்னா மக்கள் வருவாங்களான்னு கேட்டா, நல்ல படங்களுக்குக் கண்டிப்பா வருவாங்க. இன்னைக்கு வரைக்கும் தியேட்டர்ல படம் பார்க்குற அனுபவத்தை OTTயால தர முடியலங்கிறதுதான் உண்மை. மத்தபடி மொபைல், தொலைக்காட்சி தாண்டியும் மக்களோட பொழுதுபோக்கு சாதனமா OTT இருக்கது உண்மைதான். அந்த எண்ணிக்கை இந்த சமயத்துல அதிகமாகும்கிறது என்னோட எண்ணம்.''

`குயின்’ வெப் சீரிஸின் இயக்குநர்களில் ஒருவரான பிரசாந்த் முருகேசனைத் தொடர்புகொண்டோம், ``கண்டிப்பா, பெரும்பான்மையான மக்களுக்கான பொழுதுபோக்கு மீடியமா இருந்த திரையரங்குகள் மூடியிருக்கதால, அதுக்கு அடுத்து எதுல வாய்ப்பிருக்குனு மக்களோட கவனம் திரும்புறது இயல்பு. இன்னிக்கு அந்த இடத்துல மொபைல், தொலைக்காட்சிக்கு அடுத்ததா, OTT இருக்குறது உண்மைதான். ஆனாலும், இந்த நேரத்துல OTTல இருக்க வெப்சீரிஸ், படங்கள் எல்லாம் மக்களுக்கு பிடிச்ச கன்டென்ட்டா இருக்காங்கிறதும் கவனத்துல வெச்சிக்க வேண்டிய ஒரு விஷயம்."

பிரசாந்த் முருகேசன்
பிரசாந்த் முருகேசன்

``ஏன்னா, மொபைல் தொலைக்காட்சி மாதிரியான விஷயம் பெரும்பாலான மக்களோட பொழுதுபோக்குக்கு போதும்னு இருக்கிறப்ப, OTT-க்கு வரணும்ன்னா அங்க கன்டென்ட்டும் ஹிட்டா இருக்கணும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி பொழுது போக்குக்கு வேற வாய்ப்பில்லைங்கிற பட்சத்துல OTT தளத்தை எக்ஸ்பிரிமென்ட் பண்ணி பார்க்கணும்னு நினைக்கிறவங்க எண்ணிக்கை கணிசமா அதிகமாகும். மத்தபடி, இந்த சந்தர்ப்பத்துல OTT-ல இருக்க எல்லா கன்டென்ட்டும் ஹிட் ஆகுமான்னு கேட்டா அது கேள்விக்குறிதான்.”

விரைவில் வெளியாவிற்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் பணியாற்றி வரும் கேபிள் சங்கரிடம் இது குறித்து பேசினோம், ``ஒரு காலத்துல மக்கள் அதிகம் பார்க்கிற டிவி சேனல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தது. ஆனா, வழக்கமான பேட்டர்ன்ல இருந்து மக்கள் வெளிய வந்து OTT பக்கம் திரும்பி ரொம்ப நாளாச்சு. அதனாலதான், எல்லா பெரிய சேனல்களும் தங்களோட நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும், வெப்சீரிஸ்களையும் OTT தளத்துக்கு முன்னாடியே கொண்டு வந்துட்டு இருக்காங்க. அதேமாதிரி, பல நல்ல படங்கள் தியேட்டர்ல மக்கள் பார்க்குற எண்ணிக்கையவிட, `OTTல எப்ப இந்த படம் வரும்?’னு கேட்டுப் பார்க்குற எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. அதுவும் இந்த கொரோனோ சமயத்துல அதிக அளவிலான மக்கள் OTT பக்கம் வருவாங்க."

கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
`செம்பருத்தி’, `பாண்டியன் ஸ்டோர்ஸ்’லாம் இன்னும் 3 நாள்கள்தானா?! - என்ன சொல்கிறது சேனல்கள்

OTTல மக்களோட தனிப்பட்ட ரசனைக்கான படங்கள், நம்ம வசதிக்கு ஏற்ற மாதிரி நிகழ்ச்சிகளும் எப்ப வேணாலும் பார்த்துக்கலாம், எல்லா மொழி படங்களும் இருக்குனு இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் இதோட ப்ளஸ். முதல்ல, டிவில மட்டுமே சீரியல் பார்த்த தலைமுறை ஆட்களும் இப்ப OTT பக்கம் வந்துட்டாங்க. உதாரணத்துக்கு, ஒரு வீட்ல ரெண்டு டிவி இருந்தா அதுல ஒண்ணு கேபிளும் இன்னொண்ணு OTTயும்தான் பார்க்குறாங்க. அந்த அளவுக்கு எல்லாமே மாறிடுச்சு. மக்கள் வீட்ல அதிகம் இருக்க இந்தச் சமயத்துல இதுவரை பார்க்கலாம்னு இருந்த படங்கள், அதிகம் பேசப்பட்ட வெப்சீரிஸ்னு இவையெல்லாம் கண்டிப்பா பார்க்க ஆரம்பிப்பாங்க. OTT-க்கு மக்கள் பழக்கப்பட்டுட்டாங்கன்னா வருங்காலத்துல தியேட்டர்ல படங்கள் வெளிவர்றது பிரச்னை இருக்குமானா, கண்டிப்பா அந்த சமயத்துல தியேட்டர்க்கு மக்களை எடுத்துக்கிட்டு வர்ற மாதிரி படங்கள், தியேட்டர்களோட பேட்டர்ன் மாறியிருக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு