
ஐயோ இந்தக் கையாலயா ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சோம் என தோனி திரும்ப ரிட்டையர்டு ஆகவும் வாய்ப்பிருக்கிறது.
தோனி ஓய்வுபெற்றதிலிருந்து அவரை வைத்து ஆளாளுக்கு மைலேஜ் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ‘கொஞ்சம் கொஞ்சம் டமில் தெர்யும்’ சுப்ரமணியன் சுவாமி, ‘தோனி அரசியலுக்கு வரவேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கிறார். மற்றொரு பக்கம் தூக்கத்தில்கூட மக்கள் நலனுக்காக ரேடியோ உரையாற்றும் பிரதமர் மோடி பணிச்சுமைக்கு நடுவிலும் உட்கார்ந்து தோனிக்காக இரண்டு பக்கத்திற்குக் கடிதம் எழுதுகிறார். சும்மாவே தோனி பா.ஜ.க-வில் சேரப்போகிறார் என்ற தகவல்கள் பறக்கின்றன. ஒருவேளை நிஜமாகவே சேர்ந்து சென்னைக்கும் அவருக்குமான நெருக்கத்தில் தமிழக பா.ஜ.க-வுக்கே பொறுப்பாளராக வந்துவிட்டால் என்ன நடக்கும்?
கட்சியில் சேர்ந்த தோனிக்கும் ஐ.சி.சி தொடர்களில் அவரது சாதனைகளுக்கும் மரியாதை செலுத்துகிறோம் என்கிற பெயரில் தோனியின் போஸ்டரும் ஐ.பி.எல் கோப்பையின் பேனரும் வைத்து சல்யூட் அடிப்பார்கள் தமிழக பா.ஜ.க-வினர். ‘ஐ.பி.எல் கப் எல்லாம் ஐ.சி.சி சாதனைகளில் வராதே’ என யாராவது லாஜிக்காகக் கேள்வி கேட்டால், ‘தாமரை கூடத்தான் இன்னும் ரெண்டு தலைமுறைக்கு மலராது. நாங்க சொல்லிகிட்டுத் திரியலையா? பா.ஜ.க-ன்னு தெரிஞ்சும் லாஜிக் எல்லாம் எதிர்பார்த்துகிட்டு... போங்க தம்பி!’ எனத் தோளில் தட்டி அனுப்பிவிடுவார்கள்.

கட்சிக்குள்ளேயே ஒரு அணி, ‘தோனியோட தாத்தாவும் சாவர்க்கரும் ஒரே ஸ்கூலில் படித்தவர்கள். ஆனால் அது அவர் தாத்தாவுக்கும் தெரியாது, சாவர்க்கருக்கும் தெரியாது. மோடி பிரதமரானது 2014 மே மாதம். தோனி டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற்றது 2014 டிசம்பரில். ‘நாட்டைக் காப்பாத்துற பொறுப்புக்குத்தான் நீங்க வந்துட்டீங்களே. இனி நான் எதுக்கு’ என பிரதமருக்கு மரியாதை செலுத்தும்வகையில்தான் ஓய்வுபெற்றார்’ என வாட்ஸப்பில் வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும். இன்னொரு குரூப்போ, ‘தோனி ஐ.பி.எல்ல விஜய்கூட நிக்கிறாரு. விஜய் ஒரு ஆன்டி இந்தியன். அவர் நடிச்ச கில்லி படம் மாசத்துக்கொரு முறை சன்டிவில வருது. அது தி.மு.க டிவி. ஆக, தோனி அவங்காளுதான்’ என வீடியோவில் குழிபறித்துக்கொண்டிருக்கும்.
‘நாம எல்லாரும் நேஷனல் டியூட்டில இருக்கோம்’ எனச் சொல்லித்தான் மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்கினார் தோனி. ஃபார்ம் அவுட் ஆனவர்களுக்கே அந்த நிலைமை என்றால் ஃபார்ம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழக பா.ஜ.க-வினர் நிலைமை? ‘இந்தா இவரு வாயை வெச்சுக்கிட்டு சும்மா இல்லாம என்னத்தயாவது பேசி விழுற நாலு ஓட்டுக்கும் வேட்டு வைக்குறாரு. இந்தா இவரு உலகத்துல என்ன நடந்தாலும் மத்தியான மெனுவுக்கு பொங்கல் சாப்பிட்டமாதிரிதான் இருக்காரு. கடைசியா இந்தா இவரு யாருன்னு யாருக்குமே தெரியல. விசாரிச்சா பால்பாக்கெட் போடவந்தவருக்கு கட்சில போஸ்ட் கொடுத்து உக்கார வெச்சிருக்காங்க. இவங்களையெல்லாம் நீக்குங்க’ என ஜூம் மீட்டிங்கில் அதிரடிப்பார்.
தோனியின் அரசியல் என்ட்ரியை ஒட்டி, ‘சி.எஸ்.கேவின் 11 வீரர்களாகவும் நானே நடித்து ‘தசாவதாரம்+1’ எனப் படம் எடுக்கவிருந்தேன். ஆனால் அணியில் எல்லாரும் 30 வயதைத் தாண்டியவர்கள் என்பதால் என் இளமைக்கு சரிவராது என விட்டுவிட்டேன். ‘மாயா மச்சீந்திரா’ பாடலில் சிங்கமாக மாறி அதன்பின் மஞ்சளுடையில் மனிதனாகத் தோன்றுவேன். அது அன்றே சி.எஸ்.கேவிற்காக நீங்கள் வைத்த குறியீடு’ என உங்களில் சிலர் சொல்லலாம். அதை நான் மறுத்தாலும் பணிவாக ஏற்றுக்கொள்கிறேன். நல்வரவு தோனி’ எனத் தன்னடக்கத்தோடு ட்விட்டரில் பகிர்வார் உலக நாயகன். ‘ஆண்டவரே, ஆர்.சி.பி லோகோல கூட சிங்கம் இருக்குமே’ என யாராவது கேட்டால், ‘அந்தக் கன்டென்ட்டை கோலி ரிட்டையர்டு ஆகுறப்போ பேச வெச்சிருக்கேன்’ என ப்ரைவேட் மெசேஜ் அனுப்புவார்.

‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ராஞ்சியின் வேங்கையை மனதார வரவேற்கிறது. அவர் ஆளலாமா கூடாதா என்பது வேறு. ஆனால் அன்புத்தம்பி, என் ‘தம்பி’ படத்தின் நாயகனைப் பார்த்து கவரப்பட்டுத்தான் அதே முறையில் முடிவளர்க்கத் தொடங்கியதாகவும் களத்தில் கோபத்தை வரித்துக்கொண்டதாகவும் ஒருமுறை குறிப்பிட்டார். பதிலுக்கு நன்றியுரைக்கும்விதமாக நான் சிறுவயதில் கற்றுக்கொண்ட சிலம்பத்தை அவருக்குச் செய்து காட்டினேன். அசந்துபோன அவர், ‘இதை நான் பயன்படுத்திக்கொள்ளலாமா?’ எனக் கேட்டார். நான் ஆமோதிக்க அந்தக் கணத்தில் பிறந்ததுதான் அவரின் உலங்கு வானூர்தி அடி’ என சீமான் சிலிர்ப்பார். ‘ஐயோ இந்தக் கையாலயா ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சோம்’ என தோனி திரும்ப ரிட்டையர்டு ஆகவும் வாய்ப்பிருக்கிறது.
தோனி ஐ.பி.எல் இன்னும் மூன்று ஆண்டுகள் ஆடி அதன்பின் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு ஐந்தாண்டுகள் பதவி வகித்து அதுவும் சரிப்படாது எனத் தோன்றி அங்கிருந்தும் ஒதுங்கிய பின்னர் ஒருமாதம் கழித்து, போயஸ்கார்டனில் ஒரு வீட்டின் கேட் திறக்கும். வெளியே வருபவர், ‘தோனி அரசியலுக்கு வரது நல்ல விஷயம். அவர நான் வரவேற்கிறேன். அவர் தேர்தல்ல நிக்கணும்னு சொல்லி நான் கேட்டுக்குறேன். நான் எப்போ தேர்தல்ல நிப்பேன்னு நீங்க கேட்கலாம். சீக்கிரமே அதுக்கு பதில் சொல்றேன்’ எனச் சொல்லிவிட்டுத் திரும்ப வீட்டுக்குள் போய்விடுவார்.