Published:Updated:

நதிகள் இணைக்கப்பட்டு, விவசாயப் பிரச்னை தீர்க்கப்பட்டு... நடிகர் சங்கத் தேர்தல் அட்ராசிட்டிகள்!

நடிகர் சங்கத் தேர்தல் -  விஷால் அணியினர்
நடிகர் சங்கத் தேர்தல் - விஷால் அணியினர்

ஒரு நடிகர் குறித்த துறைசார்ந்த தகவல்கள் தொடங்கி, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை வரை இங்கே அத்தனையும் செய்தியாக்கப்படுகின்றன. ஒரு நடிகர் குறித்த செய்திக்கே அவ்வளவு இருக்குமானால், ஒட்டுமொத்த திரையுலகமே சம்பந்தப்படும் தேர்தலுக்கு இவ்வளவு கவனம் சேர்ந்திருப்பதில் எந்த வியப்புமில்லை.

`ஊர் இரண்டுபட்டால் கூத்தாடும் கலைஞர்களுக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். இங்கே கலைஞர்கள் இரண்டுபட்டு நிற்கிறார்கள், ஊரே அதைப் பெரும் செய்தியாகப் பார்க்கிறது என்றே சொல்லலாம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டம், செயற்பாடு, வாக்குப்பதிவு, களப்பணி என ஐந்தாண்டுக்கு ஒருமுறை பார்த்து, கேட்டு, கண்களும் காதுகளும் தேய்ந்துவிட்ட நிலையில் தற்போது, மூன்றாண்டுக்கு ஒருமுறை வந்து ஒருநாள் பரபரப்பை மக்களுக்குத் தருகிறது, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்.

Nassar, Vishal and Karthi during a press meet
Nassar, Vishal and Karthi during a press meet

காவல் துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பு, செய்தித் தொலைக்காட்சிகளின் தொடர் நேரலை, நொடிக்கு நொடி சமூக வலைதளங்களில் வந்த கருத்துகள், விமர்சனங்கள், பத்திரிகையாளர் சந்திப்பு, நீதிமன்ற வழக்கு, கடைசி நேரத் தீர்ப்பு, ஒருவர் ஓட்டை மற்றொருவர் போடுவது, மொழி சார்ந்த பிரிவினை, சாதி சார்ந்த பிரிவினை என ஒரு பொதுத் தேர்தலுக்குச் சமமாக எல்லா விதமான பரபரப்பையும் கொண்டுவந்து கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது, நடிகர் சங்கத் தேர்தல். தமிழ் நாடக உலகம், திரையுலகம் சார்ந்த 3,171 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் ஒரு தேர்தலுக்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது? தண்ணீர்ப் பிரச்னை, சூழலியல் பிரச்னை, வெயில், அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னை என இத்தனை சிக்கல் இருக்கும்போது, இது ஏன் பேசுபொருளாக்கப்படுகிறது என்ற கேள்விகளும் பெருவாரியான மக்களிடையே எழுப்பப்படுகின்றன.

பொதுவாகவே திரைத்துறை சார்ந்தோர் குறித்த செய்திகளுக்குத் தனி கவனம் மக்களிடையே இருக்கிறது. ஒரு நடிகர் அல்லது நடிகையின் அடுத்த படம், என்ன கதாபாத்திரம், என்ன விருது, பொதுவாழ்க்கை எனத் தொழில் சார்ந்த செய்திகள் தொடங்கி, அவர்களுடைய திருமணம், காதல், குடும்பம் எனத் தனிப்பட்ட வாழ்க்கை வரை இங்கே அத்தனையும் செய்தியாக்கப்படுகின்றன. ஒரு நடிகர் அல்லது நடிகை குறித்த செய்திக்கே அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமானால், ஒட்டுமொத்தத் திரையுலகமே சம்பந்தப்படும், அதுவும் இரு பிரிவிவாகப் பிளவுபட்டு போட்டிப்போடும் ஒரு தேர்தலுக்கு இவ்வளவு கவனம் சேர்ந்திருப்பதில் எந்த வியப்புமில்லை.

Water scarcity
Water scarcity

ஆனால், `இது தேவைதானா' என்றால், இல்லை என்பதே பல நடிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது. நடிகர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த நாசர்கூட தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``எவ்வளவோ பிரச்னை இருக்கு. நீங்க ஏன் இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீங்க?" என்பதுபோலக் கேட்டார். அவர் கேட்டதற்குக் காரணமும் உள்ளது. தேர்தல் நாளான ஜூன் 23 அன்று, சில செய்தித் தொலைக்காட்சிகள், வாக்குப்பதிவு நடந்த பள்ளிக்கே சென்று அரங்கம் அமைத்து அரை மணி நேரத்துக்கு ஒன்று என்ற வகையில், தேர்தலில் போட்டியிட்ட இரு பிரிவு நடிகர்களையும் வைத்து விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

என்றாலும், ஒருவகையில் இதற்குக் காரணம் நடிகர் சங்கத்தினரே என்றும் சொல்லலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன், நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் சேர்ந்து உருவாக்கிய `பாண்டவர் அணி'தான் நடிகர் சங்கப் பிரச்னையைப் பொதுவெளிக்கு எடுத்து வந்தனர். அதற்கு முன்னர் நிர்வாகிகளாக இருந்த சரத்குமார், ராதாரவி தலைமையிலிருந்த அணி சரியாகச் செயல்படவில்லை, சில முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டுகளை பல ஊர்களுக்குச் சென்று பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி, தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டனர்.

நடிகர் சங்கம் பொதுக்கூட்டம்
நடிகர் சங்கம் பொதுக்கூட்டம்

தமிழகம் முழுக்கப் பல நிலையில் நலிந்த திரைக் கலைஞர்கள் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலரை நேரில் சென்று சந்தித்து எதிரணியினர் குறித்த குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறி, பரப்புரை செய்வதற்குப் பதிலாக ஊடகம் வாயிலாக அதை மேற்கொண்டது 'பாண்டவர் அணி'. அதன் வாயிலாக தேர்தலில் வெற்றியடைந்த பின்னரும், அவர்களுடைய செயற்பாடுகள் ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டன.

இந்நிலையில், விஷால் சில நிர்வாக ரீதியிலான முடிவுகளையும் முன்னெடுப்புகளையும் எடுக்கும்போது தொட்ட காரியத்தை உடனே செய்துமுடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதுமே இருக்கும் எனப் பல நடிகர் சங்க உறுப்பினர்களாலேயே புகழப்பட்டார். ஆனால், எந்தச் செயலையும் அப்படி ஒரே இரவில் நிகழ்த்திவிட முடியாது என்ற இயல்பை விஷால் ஏற்க மறுக்கிறார் என்பதையும் அவர்களே விமர்சனமாக வைத்தனர். நடிகர் சங்கக் கட்டடத்தை உடனடியாகக் கட்டி முடிக்கவேண்டும் என விஷால் மும்முரமாக ஆர்வம் காட்டியதும் அதனால்தான் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனாலேயே நடிகர் சங்கம் பொதுவெளியின் கவனத்தில் இருந்துகொண்டே இருந்தது.

Karthi, Nassar in a press meet
Karthi, Nassar in a press meet

அந்த வரிசையில், 'பாண்டவர் அணி'யின் செயற்பாடுகள் மீது பெரும் நாட்டமில்லாதவர்கள் ஓர் அணியாகத் திரளத் தொடங்கினர். ஐசரி கணேஷ், பாக்யராஜ், பிரசாந்த் எனப் பல நடிகர்கள் ஒரு பக்கம் சேர, மீண்டும் பிளவுபட்டது. மொழி உள்ளிட்ட வேறு சில காரணங்களும் கொண்டுவரப்பட்டன. தமிழ்த் திரையுலகின் நடிகர் சங்கத்தை நிர்வகிப்பவர்களில் பெரும்பாலானோர் வேற்று மொழிக்காரர்கள் என்றும், தென்னிந்தியாவின் மற்ற மூன்று மொழி சார்ந்த திரையுலகங்களின் நடிகர்கள் தங்களுக்கென ஒரு சங்கம் அமைத்துக்கொண்ட பிறகும் இன்னமும் ஏன் தமிழ்த் திரையுலகின் சங்கம் மட்டும் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது என்ற கேள்வியும் பல உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது. மொழி, மற்றும் இனம் சார்ந்த அரசியல் தலைதூக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் கலையுலகத்தில் இப்படியொரு விவாதம் எழுந்ததால், மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றது, நடிகர் சங்கம்.

இதற்கிடையில், 'ஐசரி கணேஷ் என்ன படத்தில் நடித்துவிட்டார் என அவர் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்? தற்போது தேர்தலிலும் போட்டியிடுகிறார்?' எனவும் கேட்கப்பட்டது. அவர் ஒரு பணம் படைத்த உறுப்பினர், அதனால் பொருளாதார அடிப்படையில் அவர் இருக்கும் 'சுவாமி சங்கரதாஸ் அணி' எளிதாக நலிந்த கலைஞர்களைக் கவர்ந்துவிடும் என அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

Nassar, Karthi and Isari Ganesh
Nassar, Karthi and Isari Ganesh

இந்தச் சிக்கல் தொடங்கிய நாள் தொட்டு ஏதோவொரு பிரச்னை, பரபரப்பு, தீர்வு எனத் தொடர்ந்துகொண்டே இருந்ததால், அவை குறித்த செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. பொதுவாக எந்தத் தொழிலாளர்களாக இருந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து ஓர் இயக்கமாகி சங்கமாகச் செயல்படுவது இயல்புதான். அதில் பெரும்பான்மையான சங்கங்களில் இதே போன்ற போட்டி, பிளவு, தலைமைக்கான சண்டை என எல்லாமே நடந்தும் வருகின்றன. ஆனால், இதுதான் நடிகர் சங்கம் ஆயிற்றே! 'தனக்குப் பிடித்த நடிகர் யார் பக்கம், குறிப்பாக, தனக்குப் பிடிக்காத நடிகர் எதிர் பக்கம்தானா?!' என்ற கேள்விகளெல்லாம் மக்களிடையே இருக்கும் வரை இது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதனால் ஒன்றும் மாறிவிடப்போவதும் இல்லை.

"இது நாட்டுக்கு முக்கியமான தேர்தல். இதனால் நதிகள் இணைக்கப்பட்டு, விவசாயப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, ஜி.எஸ்.டி ஒழிக்கப்பட்டு, எல்லாப் பிரச்னைகளும் முடிவுக்கு வரும்" எனத் தன் வாக்கைப் பதிந்துவிட்டு, தன்னை நோக்கிப் படையெடுத்துவந்த ஊடகத்தினரிடம் நக்கலாகப் பதிலளித்தார், ஆர்ஜே பாலாஜி. அதே நக்கலோடு பேசிய மிர்ச்சி சிவா, "உங்க முகத்தையெல்லாம் பார்த்தா ஒண்ணு நல்லா தெரியுது. உங்க வீட்டுல எல்லாம் நல்லா தண்ணி வருதுபோல. இத்தனை பிரச்னைக்கு நடுவுல இதையெல்லாம் வந்து கவர் பண்றீங்க!" என்பதுபோலப் பேசினார்.

நதிகள் இணைக்கப்பட்டு, விவசாயப் பிரச்னை தீர்க்கப்பட்டு... நடிகர் சங்கத் தேர்தல் அட்ராசிட்டிகள்!

இந்த நிலை குறித்து, நடிகர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றனர். ஊடகமோ, மக்களின் மனநிலையின் பிம்பமாகத்தான் இருக்கிறது. அவர்கள் பெருவாரியாகப் பார்க்க விரும்புவதை அவர்கள் பிரதிபலிப்பார்கள். அப்படியென்றால், இதன் நுகரும் முனையில் இருக்கும் மக்களுக்கோ தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளைக் காண்பதில், கேட்பதில், அறிந்துகொள்வதில் விருப்பம் மிகுதியாக இருக்கிறது என்றல்லவா பொருள்?!

அடுத்த கட்டுரைக்கு