Published:Updated:

`சொன்னா உங்களுக்குப் புரியாது; இட்ஸ் எ கேர்ள் திங்!' - இந்த காதல்காரிகளில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

தமிழ் சினிமாவில், பெண்களுடைய காதலை அழகியலோடு காட்டிய படங்களும், கதாபாத்திரங்களும்...

தமிழ் சினிமாவையும் அது கரம்பற்றியிருக்கும் காதல் கதைகளையும் பிரிக்க முடியாது. கண்டதும் காதல், பார்க்காமல் காதல், பழகாமல் காதல், பயணக் காதல், இன்டர்நெட் காதல், இன்ஸ்டாகிராம் காதல் எனக் காதல்கள், தமிழ் சினிமாவில் வெவ்வேறு விதத்தில் வலம் வந்திருக்கின்றன.

ஏனோ தெரியவில்லை... காதலித்தவர்களிடம் காதலைச் சொல்லும் பொறுப்பு பெரும்பாலும் ஹீரோக்களுக்கே வாய்க்கிறது. நம் ஹீரோக்களும் அதை உருகி, மறுகி, போர் தொடுத்து, ஊர் கடந்து என விதவிதமாய் காதலைச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களையும் டாமினேட் செய்திருக்கும் காதல்காரிகளைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

2
Kaakha Kaakha

காக்க காக்க - மாயா

பார்த்த மறு கணமே கவரக்கூடிய காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர், ஸ்கூல் டீச்சர் மாயா. `எனக்கு பசங்களுக்கு பாடம் சொல்லித் தரதான் பிடிச்சிருக்கு’ என வெளிப்படையாகவே பேசும் மாயா, அன்புச்செல்வன் மீது கொண்ட காதலையும் சட்டெனச் சொல்லிவிடுவார். `நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்; மூணு குழைந்தங்க பெத்துக்கணும்; உங்ககூட சிரிச்சுப் பேசணும்; சண்டை போடணும்; தோள்ல சாஞ்சு அழணும்' என்ற இந்த வசனம், கல் நெஞ்சக்காரனுக்கும் காதல் வரச் செய்யும் வார்த்தைகள். `ஒய் மீ?' என அன்புச் செல்வன் கேட்கும்போது, `சொன்னா உங்களுக்குப் புரியாது... இட்ஸ் எ கேர்ள் திங்' என நேர்மையுடன் பதில் சொல்வார், மாயா.

3
Poo

பூ - மாரி

`பெரியவளானதும் என்னவாகப் போற?' எனக் கேட்கும் வாத்தியாரிடம், `தங்கராசுக்கு பொண்டாட்டி ஆகப் போறேன் சார்', என்ற `பூ' மாரியின் வெள்ளந்தியான வார்த்தைகள்தான் அவளுக்குத் தெரிந்த காதல் முறை. மாமா தங்கராசுவின் போன் நம்பரை மறந்த தவிப்பு, மாமவைத் தவறாகப் பேசிய தோழியின் மண்டையைப் பிளக்கும் கோபம், தனக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்த பின்னும் மாமா மீதிருக்கும் அக்கறை போன்ற அனைத்திலும் காதலைத் தெளித்திருப்பார் மாரி. `தங்கராசு உனக்கு இல்லைனு ஆனதுக்குப் பிறகும் அதே பாசத்தோடு எப்படி மாரி உன்னால இருக்க முடியுது' என்ற தன் தோழியின் கேள்விக்கு, அதற்கு முந்தைய காட்சியில் ஆட்டுக்குட்டிமீது அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாசமே பதில்!

4
Vaaranam Aayiram

வாரணம் ஆயிரம் - ப்ரியா

பக்கத்து வீட்டுப் பொண்ணு, தங்கையின் தோழியென பதின்பருவ வயதிலிருந்தே சூர்யாவுக்கு ப்ரியாவைத் தெரியும். மேக்னா கொடுத்த வலியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் சூர்யாவின் கரம்பிடித்து அரவணைக்கிறது, ப்ரியாவின் நட்பு. அடுத்த கட்டத்துக்குச் செல்லும் இவர்களது நட்பு, `ரொம்ப நாளாவே... உனக்கு 17, எனக்கு 15... அப்போ இருந்தே' என்ற ப்ரியாவின் வார்த்தைகளின் மூலம் இவர்களது உறவு காதலாக மாறுகிறது. தான் மேக்னாவுக்காகச் செய்ததை, ப்ரியா தனக்காகச் செய்யும்போதே சூர்யா இம்ப்ரஸ் ஆகிறான். இதுவே இவர்களை திருமணம் வரை அழைத்துச் சென்றிருக்கலாம். வீ ஆல்வேஸ் லவ் யூ கய்ஸ்!

5
Paruthiveeran

பருத்திவீரன் - முத்தழகு

லந்தான, ரகையான பெண்தான் முத்தழகு. தன் அப்பாவிடம் முரட்டுத் தனமாய் அடி வாங்கிய பின்னர், `ஏய் கிழவி... வா வந்து கறியை எடுத்து வை' என இவர் சொல்லும் இடமெல்லாம் ராவடி. பருத்திவீரனின் சண்டியர் தனத்தை அடித்து உட்காரவைப்பது முத்தழகின் அன்புதான். பருத்திவீரனுக்கு, `ஏய் முத்தழகு...' என்ற வசனமென்றால், முத்தழகுக்கு `எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா... எனக்கு நீதான் டா வேணும்' என்ற வசனம்தான் ஹைலைட். எத்தனை கிராமத்துக் காதல்களைத் தமிழ் சினிமா கேட்டிருந்தாலும் பருத்திவீரன் - முத்தழகு ஜோடியின் காதல் கதையை யாராலும் மறக்க முடியாது.

6
Neethane En Ponvasantham

நீதானே என் பொன்வசந்தம்- நித்யா

பள்ளிப் பருவத்திலிருந்தே வருணுக்கும் நித்யாவுக்கும் காதல். நித்யாவுக்கு வருணையும், வருணுக்கு நித்யாவையும் இன்ச் பை இன்ச் தெரிந்திருந்ததால் தவிப்பு, ஈகோ, ஊடல், காதல், பரிவு, பிரிவு என எல்லாமுமே அதிகப்படியாய் இருக்கும். இந்த மொத்த அத்தியாயத்தின் தொகுப்பே, `நீதானே என் பொன்வசந்தம்'. தான் காதலித்த ஒருவன் வேறொருத்தியுடன் கரம் கோக்கப்போகும் போதும், இறுதியில் தன்னுடைய முடிவில்லா காதலை வருணிடம் சொல்லி உருகும்போது, நித்யா நம்மையும் ஏதோ செய்கிறார்.

7
Thani Oruvan

தனி ஒருவன் - மஹிமா

முத்தழகின் மார்டன் வெர்ஷனே மஹிமா. அந்த லந்து, திமிர், ரகளையென எல்லாமே மஹிமாவிடமும் இருக்கும். இருப்பினும் காதல் இவரது வாழ்க்கையில் கிரிக்கெட் ஆடும்போதுதான் காதலிக்கும் மித்ரனிடம் அடக்கியே வாசிக்கிறார். அந்த செல்லக் கோபமும், மெல்லிய காதலும்தான் மஹிமா மீது காதல் வயப்பட வைக்கிறது. படத்தில் இன்னொருவருக்கு பதிலாய் இவரை வைத்து ஆள்மாறாட்டம் நடக்கும்போது, `உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்னு சொன்னேன். அதுக்காக என் உயிரை மட்டுமே கேட்பியா டா' என்று இவர் சொல்வது க்யூட்டோ க்யூட்.

8
Mayakkam Enna

மயக்கம் என்ன - யாமினி

`தி லைஃப் ஆஃப் கார்த்தி'தான் `மயக்கம் என்ன' படத்தோட களம். மனதில் கனவோடும், கையில் கேமராவோடும் தனக்கான அடையாளத்தைத் தேடியலையும் `ஜீனியஸ்' கார்த்திக்கிற்கு, உற்ற துணைவியாக உடன் நின்று போராடுவது, யாமினியும் அவளது காதலும்தான். வெறுமையைப் பயன்படுத்தி தப்பான கண்ணோட்டத்துடன் வரும் கார்த்திக்கின் நண்பனிடம் கூறும் யாமினியின் வார்த்தைகளே, அவளுடைய மெச்சூரிட்டியை எடுத்துச்சொல்கிறது. கார்த்திக்கிற்கு கேமரா மீது காதல். ஆனால், அந்த கார்த்திக்கின் மீது யாமினுக்குக் காதல். இதனாலே எந்தவொரு சூழலிலும் விட்டுச்செல்லாமல் கார்த்திக்கை இறுக அணைத்துக்கொள்கிறாள், யாமினி. உண்மையிலேயே யாமினி இரும்பு மனுஷிதான்.

அடுத்த கட்டுரைக்கு