Published:Updated:

"18 வருஷமா ஜோக்கரா இருக்கேன்... ஆனா, நான் பட்ட வலிகள்...?!" வீ.ஜே அர்ச்சனா

"18 வருஷமா ஜோக்கரா இருக்கேன்... ஆனா, நான் பட்ட வலிகள்...?!" வீ.ஜே அர்ச்சனா
"18 வருஷமா ஜோக்கரா இருக்கேன்... ஆனா, நான் பட்ட வலிகள்...?!" வீ.ஜே அர்ச்சனா

"18 வருஷமா ஜோக்கரா இருக்கேன்... ஆனா, நான் பட்ட வலிகள்...?!" வீ.ஜே அர்ச்சனா


 

"18 வருஷங்களாகத் தொகுப்பாளரா இருக்கேன். என் திறமைக்கு எப்போதாவது அங்கீகாரம் கிடைக்கும்னு நம்பிக்கையோடு உழைச்சேன். இன்னிக்கு அது நிறைவேறியிருக்குது" - உற்சாகமாகப் பேசுகிறார், அர்ச்சனா. ஜீ தமிழ் 'சரிகமப' இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 

"தொகுப்பாளராக இருந்தாலும், பர்ஃபார்மன்ஸூம் நிறைய பண்றீங்களே..." 

"நடன நிகழ்ச்சியோ, இசை நிகழ்ச்சியோ, அதனை ரசிக்கவைக்க, வித்தியாசமான முயற்சிகளைச் செய்யணும். முன்னாடி ஒரு தொகுப்பாளர் என்பவர், அறிவிப்பாளரா மட்டுமே இருந்தார். இன்னிக்கு பர்ஃபார்மராகவும் இருந்தால்தான் மக்களை இம்ப்ரஸ் பண்ண முடியும். அப்படித்தான் நானும் பாட்டுப் பாடறேன்; டான்ஸ் ஆடறேன்; நடிக்கவும் செய்யறேன். மக்களும் ரசிச்சு பாராட்டறாங்க." 

"ஒவ்வொரு எபிசோடுக்கும் உங்களை எப்படித் தயார்படுத்திக்கிறீங்க?" 

"போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவாங்க. நடுவர்கள் சிறப்பான கமென்ட்ஸ் சொல்வாங்க. அந்த இடத்தில், எனக்கான ரோலை 15 நிமிஷத்துக்கு ஒருமுறை பதிவுசெய்துடணும். அதுவும் தனி ஒருத்தியாக. சர்க்கஸில் பல கலைஞர்கள் சாகசம் பண்ணுவாங்க. ஆனால், மூக்கில் சிவப்பு கலர் பந்துடன் வரும் ஜோக்கர், ஆடியன்ஸை சிரிக்கவெச்சு அதிக கைத்தட்டல் வாங்குவார். அப்படித்தான் நானும். ரசிகர்களைச் சிரிக்கவைக்கிறது என் முதல் நோக்கம். அதில் மத்தவங்க மனசு புண்படாமல் பார்த்துப்பேன். என் பர்ஃபார்மன்ஸில், நிறையச் சாப்பிடுவேன்; கீழே விழுந்து புரள்வேன்; நடுவர்களிடம் இசை பழகுவேன்; பாடுவேன்; வித்தியாசமான காஸ்டியூம் பயன்படுத்துவேன். நடுவரான பின்னணிப் பாடகர் கார்த்திக்கை, 'ஜாக் மாமா'னு கிண்டல் பண்ணுவேன்; ஜூரி மெம்பர்ஸ் மற்றும் போட்டியாளர்களை பர்ஃபார்ம் பண்ண வைப்பேன். இதில், என் செயல்பாடுகளைப் பார்த்து பலரும் 'கோமாளி'னு சொல்லலாம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் முன்னைவிட அதிகமா நேயர்களைச் சிரிக்கவைக்கிறது எப்படி என்றே யோசிப்பேன். அதுக்காக நிறையப் படிப்பேன்; மற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்; பலரின் கருத்துகளை உன்னிப்பாகக் கவனிப்பேன்.'' 

"உங்க மீடியா வளர்ச்சி எளிதாக இருந்ததா?" 

"ஸ்கூலில் படிக்கிறப்போ, கல்சுரல் செகரட்டரியா இருந்தேன். நல்லா ஆங்கிலம் பேசுவேன். அதனால், ஜெயா டிவியின் 'ஆங்கில நியூஸ் ரீடர் வேலையில் சேர்ந்தேன். அங்கேயே ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரா மாறினேன். அடுத்து ராஜ் டிவி. 2000-ம் வருஷம் சன் டிவிக்கு வந்தேன். 'இளமை புதுமை' மற்றும் 'காமெடி டைம்' நிகழ்ச்சிகள் நல்ல அடையாளம் கொடுத்துச்சு. பல சேனல்களில் வொர்க் பண்ணிட்டேன். எனக்கான அடையாளத்தை தக்கவைச்சுக்க நிறைய உழைச்சேன். இப்போ, ஜீ தமிழில் என் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுக்கு முந்தைய காலங்களில் எனக்குச் சிறப்பான களம் கிடைக்கலை. நடிகையோ, தொகுப்பாளினியோ, கல்யாணம் பண்ணிட்டு குழந்தை பெற்றுவிட்டாலே முன்பெல்லாம் வாய்ப்பு கொடுக்க தயங்குவாங்க. ஆனால், அந்த நிலை இப்போ சின்னத்திரையில் மாறிட்டிருக்கு. அதனால்தான் குழந்தை பெற்று 30 வயதுக்குப் பிறகும் என்னால் சிறப்பா வொர்க் பண்ணமுடியுது." 

"ஸ்கிரிப்ட்டை தாண்டி, உங்க தனிப்பட்ட முயற்சிகள் என்னவாக இருக்கும்?'' 

"ஸ்கிரிப்ட் என்பது ஒன் லைன்தான். அதை பல மணி நேரத்துக்கு விரிவுபடுத்தி ஆடியன்ஸ் ரசிக்கிற மாதிரி பண்றது பெரிய டாஸ்க். இந்த ஃபீல்டை நேசிச்சு பண்றதால் எதுவுமே சிரமமா தெரியலை. எனக்கு ஆங்கிலம் நல்லா தெரியும். ஆனாலும், முடிஞ்சவரை தவிர்ப்பேன். அழகுத் தமிழில்தான் என் ஆரம்பக்கால மீடியா பயணம் இருந்துச்சு. இப்பவும் அப்படித்தான். ஏன்னா, பல லட்சம் பேர் பார்க்கும் விஷயத்தை எளிமையா எல்லோருக்கும் புரியற மாதிரி கொடுக்கணும். நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினரைப் பற்றி நிறைய தெரிஞ்சுப்பேன். அவரின் முந்தைய பேட்டிகளைத் தெரிஞ்சுப்பேன். அப்போதுதான் நிறைய புதிய விஷயங்களைப் பேசவைக்க முடியும். கால மாற்றத்தை உணர்ந்து, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் என்னை வித்தியாசப்படுத்தி காட்டிப்பேன்." 

"நடுவர் அனுபவம் எப்படி இருந்தது?" 

"ஜீ தமிழ் 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியின் ரென்டு சீசனுக்கு நடுவரா இருந்தேன். அது பெரிய பொறுப்பு. குழந்தைகள் மற்றும் பெற்றோர் மனசு புண்படாமல் கமென்ட்ஸ் சொல்லி ஊக்கப்படுத்தணும். அதேசமயம், குழந்தைகளைச் சிறப்பா பர்ஃபார்ம் பண்ணவைக்கணும். குஷ்பு மேடம், பாக்கியராஜ் சார், ரோஜா மேடம் ஆகியோருடன் நானும் ஒரு நடுவர். மிகப் பிரபலமான அவங்களோடு, என் இருப்பையும் அடையாளப்படுத்தணும். அதை நிறைவாகச் செய்ததா நினைக்கிறேன். பல குழந்தைகள் என்னை 'அச்சும்மா'னு கூப்பிட்டு, அன்பை பொழிஞ்சதை மறக்கமுடியாது." 

"உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துப்பீங்க?" 

"முன்பெல்லாம் கடந்துபோறவங்க, காதுபட ஏதாவது பேசுவாங்க. அல்லது பல காதுகளைக் கடந்து நம்ம காதுக்கு ஒரு செய்தி வரும். சோஷியல் மீடியா வந்ததும், கண்கூட நிறைய விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். நடுவராக வரும் பாடகர் கார்த்திக்கை, 'மாமா, ஜாக்கி'னு கிண்டல் பண்ணுவேன். அது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்துக்காக மட்டுமே. நாங்க ரெண்டு பேரும் 18 வருஷ நண்பர்கள். இது தெரியாமல் பலரும் என்னைக் கிண்டல் பண்றாங்க. என் தோற்றம், வயது, செயல்பாடுகள் பற்றி விமர்சனம் பண்றாங்க. அதுக்கெலலம் பதில் கொடுக்கிறதில்லை. ஏன்னா, என் பதிலைப் பார்த்தாலும் அவங்க திருந்திடப்போறதில்லை. இன்னிக்கு, பல சேனல்கள். பல நூறு நிகழ்ச்சிகள் என ஆடியன்ஸூக்கு ஏகப்பட்ட சாய்ஸ். ஒரு விளம்பர நேரத்தில் அவங்க ரசனை மாறிடுது. அவங்களை எங்க பக்கம் வரவைக்கும் பொறுப்பில் இருக்கோம். 'கலர்ஃபுல் டிரஸ். கேரவன் வசதி. புரொடக்‌ஷன் சாப்பாடு. வியர்வை வராத வேலை'னு எங்களைப் பலவிதமா பேசலாம். ஒவ்வொரு வேலையின் கஷ்டமும் அதைச் செய்றவங்களுக்குத்தான் தெரியும். ஒரு வாரம் ஒரு எபிசோடு சரியா போகலைன்னா, அடுத்த வாரம் அதிக சிரத்தை எடுத்தாகணும். விமர்சனம் செய்றவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?'' 

"உங்களுக்கான ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு?'' 

"ஃபேமிலி சப்போர்ட் இல்லாமல் என் பயணம் சாத்தியமில்லை. 2000-ம் வருஷம் என் அப்பா இறந்துட்டார். அப்புறம்தான் மீடியாவுக்கே வந்தேன். அப்போ, மீடியாவுக்குப் போக வேணாம்னு நிறைய எதிர்ப்பு வந்தபோது, அம்மாதான் சப்போர்ட் பண்ணினாங்க. 2004-ம் வருஷம் கல்யாணம் ஆச்சு. மீடியாவைப் பற்றி பெரிசா தெரியாதவரா இருந்தாலும் என் கணவர் எனக்கு ஊக்கம் கொடுத்தார். என் எல்லா நிகழ்ச்சிகளையும் கைத்தட்டி வாழ்த்தும் முதல் ரசிகை என் பொண்ணு சாரா இருக்கிறாள். இவங்க சப்போர்ட்டில்தான், 18 வருஷங்களாக ஃபீல்டில் இருக்கேன். இப்போ, 'சரிகமப' டைரக்டர் விஜயகுமார், புரோகிராம் ஹெட் தமிழ்தாசன் கொடுக்கும் ஒத்துழைப்பு பெரிசு. அத்தனை பேருக்கும் நன்றி!'' 

அடுத்த கட்டுரைக்கு