Published:Updated:

`நான் கவர்ச்சி நடிகையாம்; அவர் விருது வாங்கிய நடிகராம்!’ - `காலா’ வில்லன் மீது நடிகை பாலியல் புகார்

`நான் கவர்ச்சி நடிகையாம்; அவர் விருது வாங்கிய நடிகராம்!’ - `காலா’ வில்லன் மீது நடிகை பாலியல் புகார்
`நான் கவர்ச்சி நடிகையாம்; அவர் விருது வாங்கிய நடிகராம்!’ - `காலா’ வில்லன் மீது நடிகை பாலியல் புகார்

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, தமிழில் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர். அண்மையில், இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த  தனுஸ்ரீ, நானா படேகர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நானா படேகர், காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர். 


 

நானா படேகர் குறித்து தனுஸ்ரீ பேசியது பின்வருமாறு, `கடந்த 2008-ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' (Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் நான் மட்டும் நடனம் ஆட வேண்டிய பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படும்போது,  நானா படேகர் தேவையில்லாமல் வந்து தொந்தரவு செய்தார். நடனம் சொல்லிகொடுப்பதாகக் கூறி என்னிடம் கடினமாக நடந்துகொண்டார். தகாத இடங்களில் கை வைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். இது நான் மட்டுமே இடம்பெறும் பாடல் காட்சி, என்று அவரை நான் கண்டித்தபோது, நானா படேகர் என்னிடம் திமிராக பதில் கூறினார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நான் அப்படிதான் செய்வேன் என்று சத்தமாக கூறினார். நானா படேகர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதை  படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என அனைவரிடமும் முறையிட்டேன். ஆனால், அவர்கள் அனைவரும் நானா-வுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். பின்னர் அந்தப் பாடலுக்கு எனக்கு பதில் வேறொருவர் நடனம் ஆடினார்.  அதன்பின் நானா என்னை ஆள் வைத்து மிரட்டினார். 

நானா குறித்து கடந்த 20 ஆண்டுகளாக நான் நிறைய விஷயங்கள் கேள்விப்படுகிறேன். அவர் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது பாலிவுட் வட்டாரத்தில் அனைவருக்குமே தெரியும். ஆனால், யாரும் வாய் திறக்க மாட்டார்கள். நான் அவர் மீது பாலியல் புகார் கூறினால் என்னை வேறு மாதிரி பார்க்கிறார்கள். எனக்கு கவர்ச்சி நடிகை, முத்தக்காட்சிகளில் நடித்த நடிகை, ஆசிஃப் பனாய அப்னே நடிகை என்றெல்லாம் பட்டம் கொடுக்கிறார்கள். நான் எந்த விருதும் வாங்கவில்லையாம். அவரோ  பழம்பெரும் நடிகர், மூத்த நடிகர், விருது பெற்ற நடிகர் என்று புகழ்கிறார்கள். இவ்வாறான ஒப்பீடுகளை தயவு செய்து விட்டுவிடுங்கள். என் தரப்பு நியாயங்களைப் பாருங்கள். பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் போன்றவர்கள் நானா படேகர் போன்றவர்களுடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இயக்குநர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது’ என்று காட்டமாகத் தெரிவித்தார்.

தனுஸ்ரீ முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து Mirror என்ற ஊடகம் நானா படேகரிடம் கேள்வியெழுப்பியது. நிருபரின் கேள்விக்குப் பதில் அளித்த நானா படேகர் `நான் பாலியல் தொல்லை கொடுத்தேனா?’ என்று கூறி சிரித்துள்ளார். மேலும் பேசிய அவர் ’அன்று படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் செட்டில் இருந்தனர். அத்தனை பேர் முன்னிலையில் நான் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறுவது அபத்தம். இதைப் பற்றி பேசுவது தேவையற்றது’ என்று பேச்சை நிறுத்திக்கொண்டார்.