Published:Updated:

எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி

எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி
பிரீமியம் ஸ்டோரி
எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி

சேர்த்து வைத்த செல்வம்வெ.வித்யா காயத்ரி - படம் : எஸ்.ரவிக்குமார்

எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி

சேர்த்து வைத்த செல்வம்வெ.வித்யா காயத்ரி - படம் : எஸ்.ரவிக்குமார்

Published:Updated:
எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி
பிரீமியம் ஸ்டோரி
எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி

‘`என்னையும் தம்பியையும் வளர்க்கிறதுக்கு எங்கம்மா பட்ட கஷ்டங்களையெல்லாம் பார்த்து, உணர்ந்ததனாலதான், இன்னிக்கு நாங்க அம்மா மனசைக் குளிரவைக்கிற பிள்ளைங்களா வாழ்ந்துட்டிருக்கோம்’’ - தன் அம்மா நளினியின் கழுத்தைக் கட்டிக்கொள்கிறார் அருணா. அந்த சந்தோஷத் தருணத்தில் இணைந்துகொள்கிறார், அருணாவின் சகோதரர் அருண்.  

எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி

16 வயதில் சினிமாவுக்கு நடிக்கவந்து, 80-களில் டாப் ஹீரோயின் பட்டியலில் இடம்பிடித்து, ராமராஜனைக் கரம்பிடித்து, ஒரு கட்டத்தில் அந்த மண உறவிலிருந்து விவாகரத்து பெற்று, மீண்டும் சீரியல் என்ட்ரி கொடுத்து... நளினியின் இந்த வாழ்க்கைப் பக்கங்கள் அனைத்தையும்விட அழகானது, அர்த்தம் நிறைந்தது சிங்கிள் பேரன்ட்டாக அவர் தன் இரட்டைக் குழந்தைகளை வளர்த்தெடுத்த விதம்.

‘`அம்மா எனக்கும் என் தம்பிக்கும் சொல்லிக்கிட்டே இருக்கிற ஒரே விஷயம்... ‘படிப்புதான் எல்லாம்’. வீட்டுல நாங்க மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து பேசினா, அது படிப்பைப் பற்றித்தான் இருக்கும். நான் அஞ்சு டிகிரி முடிச்சுட்டேன். என் தம்பி என்னையே ஓவர்டேக் பண்ணிட்டான். எங்க வீட்டு போர்டுல, என் தம்பி பேருக்குப் பின்னாடி அவன் படிச்ச டிகிரிகளைப் போட இடமே இல்லை. கல்யாணமான நாலாவது நாள், நான் எக்ஸாம் எழுதப் போனேன். என் தம்பி அவனுக்குக் குழந்தை பிறந்திருந்தப்போகூட டிகிரி எக்ஸாம் எழுதிட்டிருந்தான். அந்தளவுக்கு எங்களுக்குப் படிப்புதான் ஃபர்ஸ்ட். ஃபேமிலி, சென்டிமென்ட் எல்லாம் நெக்ஸ்ட்தான்’’ என்றவர், ‘`ஆஹா... படிப்பைப் பத்தி பேசி ஞாபகப்படுத்திட்டேனா..? இப்போ எந்தக் கோர்ஸும் படிக்காம இருக்கேன்னு அம்மா திட்ட ஆரம்பிச்சிருவாங்களே’’ என்று சிரிக்கிறார் அருணா.

‘`சொந்த ஊர் கேரளா. கூடப்பிறந்தவங்க எட்டுப் பேர். நான் ஐந்தாவது பொண்ணு. எனக்கு நல்லா படிச்சு டீச்சராகணும்னு கனவு. ஆனா, நிர்பந்தம் காரணமா நடிக்க வந்துட்டேன்; படிப்பு நிராசை ஆகிடுச்சு. கல்வி என்ற பிடிமானம் இல்லாததால, நிறையக் கஷ்டங்களை அனுபவிச்சேன். அதனாலேயே, என் பசங்களுக்கு சொத்துசேர்க்கிறதைவிட, அவங்களை நிறைய படிக்கவைக்கிறதுதான் முக்கியம்னு ஒரு வைராக்கியம் என் மனசுக்குள்ள வந்துச்சு. நான் ஆசைப்பட்ட மாதிரியே, என் பொண்ணு வழக்கறிஞராகிட்டா. என் பையன் 21 வயசுல, முதல் முயற்சியிலேயே சி.ஏ பாஸாகி, வெளிநாட்டு வேலைக்குப் போயிட்டான்’' என்கிறபோது, நளினியின் கண்களில் ஆனந்தச் சாரல்.

‘`வீட்டில ரெண்டு பேருக்குமே காதல் திருமணம்தான். என் மாப்பிள்ளையும் வழக்கறிஞர். என் மருமகள், என் மகனோடு போட்டிபோட்டுப் படிச்சு டிகிரிக்கு மேல டிகிரி வாங்கிட்டு இருக்காங்க. ஒரு பேரன்... எங்க குடும்பத்தின் மொத்த சந்தோஷமும் அவன்தான். அவனுக்கும் கல்விச் செல்வத்தைத்தான் நிறைய நிறையக் கொடுக்கணும்’’ என்று நளினி சொல்ல, நிதானமான குரலில் தொடர்கிறார் அருணா...

‘`பிறந்ததுல இருந்து கஷ்டம்னா என்னன்னே எங்களுக்குத் தெரியாது. செலிப்ரிட்டி பசங்க படிக்கிற ஸ்கூல்ல படிச்சோம். தினமும் ஸ்கூலுக்குப் போகும்போது எங்க காருக்கு முன்னாடியும் பின்னாடியும் பாடிகார்ட்ஸ் வருவாங்க. ஒருநாள் அப்பாகிட்ட, ‘அப்பா, ஸ்கூலுக்கு சிலர் ஆட்டோல வர்றாங்க. எங்களுக்கும் ஆட்டோல போகணும்னு ஆசையா இருக்கு’னு கேட்டேன். மறுநாளே அப்பா ஓர் ஆட்டோ வாங்கி, அதில் எங்களை ஸ்கூலுக்கு அனுப்பினார். அந்தளவுக்குச் செல்லமா வளர்ந்தோம். அந்த ஸ்கூல்ல அகாடமிக்ஸுக்கு சமமா எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதனால, நாங்க ஜாலியா ஸ்கூலுக்குப் போயிட்டு வருவோம். ஆனாலும் அம்மா, ஆரம்பத்துல இருந்தே படிப்பு விஷயத்துல ஸ்ட்ரிக்ட். அப்பா, படிப்பு விஷயத்துல தலையிடமாட்டார். அவர் எங்ககிட்ட எதிர்பார்க்குற ஒரே விஷயம், நல்ல பழக்க வழக்கங்கள். வீட்டுக்கு, நாம விரும்பாத ஒருத்தர் வந்தாலும் எழுந்து நின்னு, கைகூப்பி வணக்கம் சொல்லி அவங்களை வரவேற்கணும் என்பதில் இருந்து, ஒரு நல்ல மனுஷனா நாங்க வளர்றதுக்கான விஷயங்களைத்தான் அவர் எதிர்பார்ப்பார்’’ என்கிற அருணா, அழகான புன்னகையுடன் அம்மாவைப் பார்க்கிறார்.

‘`நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டது எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்கல. திருமணத்துக்கு அப்புறம் எங்க வீட்டுல யார்கூடவும் பேசலை. என் கணவர்,  குழந்தைங்கதான் என் உலகமா இருந்தாங்க. என் பசங்க பத்தாவது படிக்கும்போது நானும் என் கணவரும் விவாகரத்து வாங்கவேண்டியதா போச்சு. குழந்தைங்களைக் கூட்டிட்டு வீட்டைவிட்டு வந்தப்போ வரிசைகட்டி நின்ன பிரச்னைகளையெல்லாம் எதிர்கொள்ள முதல்ல மனதளவில் என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். ஒரு சின்ன வீட்டுல குடியேறினப்போ, அங்கே ஏதோ லீவுக்கு வந்திருக்கிறதா நினைச்சு, ‘எப்போம்மா நம்ம வீட்டுக்குப் போவோம்?’னு பசங்க கேட்டுட்டே இருப்பாங்க. அவங்ககிட்ட, ‘இனிமே இங்கதான், இதுதான் வாழ்க்கை’னு யதார்த்தத்தை வெளிப்படையா, பக்குவமா சொன்னேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லா அம்மாக்களின் கதையும் இதுதான்! - மகள் அருணா - அம்மா நளினி

என் பிள்ளைங்களை, அஹோபிலம் மடம் பள்ளியில் சேர்த்தேன். அது கிட்டத்தட்ட அரசுப் பள்ளி மாதிரிதான். நான் சீரியல், ஷூட்டிங்னு உழைக்க ஆரம்பிச்சேன். ஆனாலும், என் பசங்களுக்காக வெளியூர் ஷூட்டிங் மட்டும் தவிர்த்துடுவேன். காலையில் பசங்க ஸ்கூலுக்குப் போனதுக்கு அப்புறம் நடிக்க போயிட்டு, சாயங்காலம் அவங்க வர்ற நேரத்துக்கு நானும் வீடு திரும்பிடுவேன். என் பசங்களுக்கு மாசத்துக்கு ஆளுக்கு 100 ரூபாய் பாக்கெட் மணி கொடுப்பேன். பேப்பர், பேனானு அவங்களுக்குத் தேவையானதை அதுலதான் வாங்கிக்கணும். ஒருநாள் என் பையன் என்கிட்ட வந்து, ‘அம்மா, ஸ்கூல்ல ஒரு பையனுக்குச் செருப்பு வாங்கக்கூடக் காசு இல்லையாம். அவன் பிறந்த நாளுக்கு நான் செருப்பு வாங்கித் தரப் போறேன்’னு சொன்னான். அந்த நிலையிலும் மத்தவங்களோட வலியையும் அவன் புரிஞ்சுக்கிட்டதை நினைச்சப்போ, ‘இவன் நல்லா வந்துடுவான்’னு ஒரு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்பட்டுச்சு’’ என்கிற நளினிக்கு, பேச்சில் பொங்கிய நெகிழ்வு ஓர் இடைவெளி கணத்தை உண்டாக்க, அருணாவின் குரல் அந்த இடைவெளியை நிரப்பத் தொடங்கியது.

‘`அந்த ஸ்கூல்ல படிச்ச ரெண்டு வருஷம்தான், வாழ்க்கையை நாங்க புரிஞ்சுக்கிட்டோம். கூடப் படிச்ச பசங்களோட கஷ்டத்தைப் பார்த்தப்போ, எங்க கஷ்டம் எங்களுக்குப் பெருசா தெரியலை. அந்த இக்கட்டான நாள்களில், உறவினர்களின் உண்மை முகங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். நமக்கு ஏதாவது கஷ்டம்னா கூட நிக்கிறது ஃப்ரெண்ட்ஸ்தான்னு உணர்ந்தோம். ஒரு காலத்தில் பஸ், ரயிலெல்லாம் போறதுனா என்னன்னே தெரியாம இருந்த நாங்க, இன்னிக்கு நடந்தேகூட எங்கேயும் போவோம். அந்தளவுக்கு யதார்த்தத்தைக் கத்துக்கிட்டோம். எல்லாக் காலகட்டத்திலும், அம்மா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்குனு வளர்ந்தோம். இப்போகூட, மாடியிலிருந்து கீழே குதிங்கன்னு அம்மா சொன்னாங்கன்னா... ஏன், எதுக்குன்னு கேட்காம நானும் தம்பியும் குதிச்சிடுவோம்’’ - அந்நொடி அன்பின் கணமாக மாறி, அழகாகத் தொடர்ந்தது.

‘’இது நளினியோட வாழ்க்கை மட்டுமில்லை. கஷ்டத்திலும் குழந்தைகளை அன்பா, அக்கறையா வளர்க்கிற எல்லா அம்மாக்களின் கதையும்தான். அதைப் புரிஞ்சுக்கிட்டு, பிள்ளைங்க பொறுப்போடு வளர்ந்து, முன்னேறி நிக்கும்போது, வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களில் தோற்றுப்போயிருந்தாலும், ஓர் அம்மாவா ஜெயிக்கிற அந்த சந்தோஷத்தைவிட பெரிய கிரீடம் எதுவும் இல்லை அவளுக்கு!” - சொல்லும்போதே ஈன்றபொழுதினும் பெரிதுவக்கும் பேரின்பம் நளினியின் குரலில். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism