Published:Updated:

ஆத்மராகம் - சிறுகதை

ஆத்மராகம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஆத்மராகம் - சிறுகதை

சுபஸ்ரீ முரளிதரன், ஓவியம் : ஸ்யாம்

ஆத்மராகம் - சிறுகதை

சுபஸ்ரீ முரளிதரன், ஓவியம் : ஸ்யாம்

Published:Updated:
ஆத்மராகம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஆத்மராகம் - சிறுகதை

ஹா அக்காவை நான் அங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. முதலில் அது அவள்தான் என்றே தெரியவில்லை என்றாலும், அவள் உதடும் என் உள்ளுணர்வும் அவளைப் பற்றிய விவரங்களைத் தேடத் தூண்டின. கிடைத்த விவரங்கள், எனக்குள் அதிர்ச்சியையும் மனபாரத்தையும் ஏற்றின.

அங்கிருந்த செவிலியிடம், ``இவங்களை யாரு, எப்போ இங்கே சேர்த்துவிட்டாங்க?’’ என்றேன்.

ஆத்மராகம் - சிறுகதை

``ஒரு வாரம் ஆச்சும்மா. ஒரு பொண்ணு கூட்டிவந்துச்சு. இப்போ வேலைக்குப் போயிருக்கு’’ என்றாள்.

``வேலைக்கா?’’ என்றேன்.

``ஆமாம்மா. எங்கேயோ திருச்சி பக்கமாம். இந்த அம்மாவோட மகதான் கூட்டிட்டுவந்துச்சு. நம்ம சென்டரைப் பற்றி யாரோ சொன்னாங்களாம். இங்கே வந்துட்டாங்க. அந்தப் பொண்ணை இங்கே தங்கவைக்க முடியாதுல்ல. அதுதான் `ஏதாவது வேலைக்கும் ஹாஸ்டலுக்கும் ஏற்பாடு செய்ய முடியுமா?’னு கேட்டுச்சு. நம்ம டாக்டரம்மாதான் அவங்க ஃப்ரெண்டு ஆபீஸ்ல வேலைக்கும், பக்கத்துலேயே தங்கவும் ஏற்பாடு செஞ்சாங்க. பாவம்மா... சின்ன வயசு, இருபது இருபத்தொண்ணுதான் இருக்கும். யாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்துடக் கூடாதுல்ல. வேலைய முடிச்சுட்டு இப்ப வர்ற நேரம்தான். வந்து அம்மா பக்கத்துலேயே உட்கார்ந்து இருந்துட்டு எட்டு மணிக்கு ஹாஸ்டலுக்குப் போயிடும்’’ என்றாள்.

நான் என் வேலையை முடிக்கவேண்டி, ``எல்லாரும் ரெடியா... பயிற்சி ஆரம்பிக்கலாமா?’’ என்றேன்.

மூச்சுப் பயிற்சியும் யோகாவும் முடிந்த வுடன் அந்த அறையைக் கடக்கும்போது, அக்காவின் கட்டில் அருகே அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நேரமானதாலும் மன உளைச்சலாக இருந்ததாலும் நாளை பேசிக்கொள்ளலாம் என வெளியேறிவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆத்மராகம் - சிறுகதை

முப்பது வருடங்களுக்கு முன்னால், நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். புதிய வீட்டுக்குக் குடிபுகுந்திருந்தோம். அப்போதுதான் அந்த அக்காவை முதன்முதலில் பார்த்தேன். கறுத்த ஒல்லியான தேகம். வயதென்னவோ இருபது இருக்கும். சிரித்த முகம். பெரிய வாய், துறுதுறுவென்ற கண்கள். உதடு மிக அழகாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில், பின்னால் ஊக்குவைத்த ஜாக்கெட் போடுபவளாக அவளை மட்டுமே பார்த்திருக்கிறேன். தெருவில் யாரோடும் அவ்வளவாகப் பேச மாட்டாள். இரண்டு வீடு தள்ளி இருக்கும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க வருவாள். மின்சாரம் இல்லாத வீடு என்பதால், மாலை நேரங்களில் சிறிது நேரம் வெளியே உட்கார்ந்து கூடை பின்னுவாள். சில நாள் ஏதாவது நாவல் படித்துக்கொண்டிருப்பாள். எனக்கு அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிக்கொண்டிருந்தது. மெள்ள பேச்சுக் கொடுத்தேன்.

``அக்கா, எனக்கும் கூடை பின்ன சொல்லித் தர்றீங்களா?’’ என்றேன்.

என்னைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தாள். என் முயற்சியில் வெற்றி. அவளிடம் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அக்காவுக்கு அம்மாவும் அண்ணனும் உண்டு. அம்மா வீட்டு வேலை செய்பவர். அங்கேயே சாப்பிட்டுவிடுவார்போல.  அந்த வீடுகளிலிருந்து ஏதாவது எடுத்துவந்து அக்காவுக்குக் கொடுத்தாலும் அதையெல்லாம் தொட மாட்டாள். தானாகவே ஏதாவது சமைப்பாள். அவளும் அவள் அம்மாவும் அவ்வளவாகப் பேசிப்பார்த்ததேயில்லை.

அண்ணன் எப்போதாவது வீட்டுக்கு வருவான். அவனைப் பார்த்தால் எனக்கு பயம். அரசியல் கட்சி ஒன்றின் தீவிரத்தொண்டன். அவனும் தாயிடமோ, தங்கையிடமோ பேசிப்பார்த்ததில்லை. யாரும் இல்லாத நேரத்தில், அக்கா பாத்திரம் கழுவும்போதும் சமைக்கும்போதும் அவர்கள் வீட்டுக்குள் சென்று பேசிக்கொண்டிருப்பேன். அதை வீடு என்பதைவிட, ஓர் அறை என்றே சொல்லலாம். நுழைந்தவுடன் வலதுபக்க ஓரத்தில் அடுப்பும் அருகிலேயே பாத்திரம் கழுவ முற்றமும் இருக்கும். அக்கா அங்கேதான் குளிப்பாள்.

கூரை வேயப்பட்ட அதன் முட்டுக்குச்சியில் கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். அறையின் கோடியில் ஒரு டிரங்க் பெட்டியும் இரண்டு பானைகளும் இருக்கும். அந்தப் பானைக்குள்தான் காசை பத்திரப்படுத்தியிருப்பாள் அக்கா. டிரங்க் பெட்டியில் பத்து நைலக்ஸ் புடவைகள், ஸ்னோ டப்பா, பவுடர் மற்றும் ஜாக்கெட்டுகளும் இருக்கும். அவளின் ஜாக்கெட்டுகள் சிக்கென்றும் பின்கழுத்து இறங்கியும் ஊக்குகள் வைக்கப்பட்டதாகவும் இருக்கும். அவள் உடை உடுத்தும் நேர்த்தி, பிறரைக் கவரச்செய்யும்.

அவளின் புடவைகளா, அதை உடுத்தும் நேர்த்தியா, தனக்கானவற்றைத் தானே செய்துகொள்ளும் குணமா, அவளின் சிரிப்பா... ஏதோ ஒன்று என்னை அவள்பால் ஈர்த்தது. அவள் வீட்டில் விவித்பாரதியும் இலங்கை வானொலியும் ஒலித்துக்கொண்டிருக்கும். மொத்தத்தில் மஹாக்கா, என் ஆதர்ச பெண். ஆனால், அவள் என்னை ஒருமுறையேனும் `சாப்பிடுகிறாயா?’ எனக் கேட்டதுமில்லை; நான் அதை எதிர்ப்பார்த்ததுமில்லை.

மாதம் ஓரிரு முறை அழகாக உடுத்திக்கொண்டு மதியம் கிளம்பிச் செல்வாள். மறுநாள் மதியவாக்கில் வீடு வருவாள். `தோழியுடன் சினிமாவுக்குச் சென்றேன்’ என்பாள். மிகவும் மகிழ்வாகக் காணப்படுவாள். என் அம்மாவும் பாட்டியும் சன்னமாக ஏதோ பேசிக்கொண்டார்கள். அவள் அண்ணன், அவளை ஒருமுறை அடித்திருக்கிறான். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அந்த வீட்டில் நாங்கள் ஆறேழு மாதங்கள் மட்டுமே குடியிருந்தோம். என் நினைவுகள் அவளைச் சுற்றியவண்ணமே இருந்தன.

பின்னர் ஒருநாள் அந்தத் தெருவுக்குச் சென்றபோது அவள் அங்கு இல்லை. யாரோ லாரி டிரைவருடன் ஓடிப்போனதாகப் பேசிக்கொண்டார்கள். `அந்திமழை பொழிகிறது... ஆத்துமேட்டுல... ஓரம் போ... ஓரம் போ ருக்குமணி வண்டி வருது...’ போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அவளின் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கும்.

ப்படியான என் அன்பிற்குரியவளான, என் ஆதர்சமான பெண்ணாக மனம் நிறைந்தவளை இப்படி யான நிலையில் பார்த்தது என் மனதை வாட்டியெடுத்தது.

நினைவுகளில் பயணிக்கத் தொடங்கி ஒரு மணி நேரம் ஆனதை உணரும்போது வீட்டுக்கு வந்திருந்தேன்.

வாட்டமான என் முகத்தைப் பார்த்த என் கணவர் ``என்னாச்சு?’’ என்றார்.

``மஹா அக்காவைப் பார்த்தேன்’’ என்றேன். நான் அவளைப் பற்றி பலமுறை பேசியிருந்தபடியால் அவருக்கும் அவளைத் தெரியும். ``நான் யோகா பயிற்சியளிக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஹோமில் அதுவும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில்...’’ என்று சொல்லும்போதே அழுகை வந்துவிட்டது.

அன்றைய இரவு, கனத்த கணங் களுடனேயே  நீடித்தது. தூக்கம் தொலைத்த வளாக விடிந்தவுடன் அந்த ஹோமுக்குச் சென்றேன்.

காலை நேரம் என்னை எதிர்பார்த்திராத அந்தச் செவிலி ஆச்சர்யமாக என்னைப் பார்த்து , ``நேத்து ஒரு கேஸைப் பற்றிச் சொன்னேன்ல, அது செத்துடுச்சும்மா” என்றாள். கண்ணீர் முட்டியது.

``அவங்க பொண்ணு?’’ என்றேன்.

``இப்பதாம்மா ஹாஸ்டலுக்கு போன் செஞ்சிருக்கோம்’’ என்றாள்.

ஆத்மராகம் - சிறுகதை

அந்தப் பெண் வந்தாள். இது எந்த நொடியிலும் நேர்ந்துவிடும் என எதிர் பார்த்திருந்தவளாகப் பெரிய சலனம் ஏதுமின்றி கண்ணீர் வடிய நின்றிருந்தாள். பேச்சுக் கொடுத்தேன்.

``எங்கம்மா கூடை பின்னித்தான் என்னை வளர்த்தாங்க. நான் குழந்தையா இருக்கும்போதே அப்பாவுக்கு ஏதோ சீக்கு வந்து இறந்துட்டார். பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். `மேல படிக்க மாட்டேன்’னுட்டேன். எங்க அம்மா அடிக்கடி சோர்ந்துபோயிடுவாங்க. அவங்களே ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வருவாங்க. எனக்கு ரொம்ப கவலையானதால `நான் வேலைக்குப் போறேன்’னு சொல்லி, படிப்பை நிறுத்திட்டேன்.

போன வருஷம்தான் தெரிஞ்சது அவங்களுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு. எங்களுக்குன்னு யாரும் இல்லை. இந்த நிலைமையில, என்னால  அம்மாவை விட்டுட்டு வேலைக்கும் போக முடியலை; குடிசை வாடகையும் கட்ட முடியலை. அப்பதான், இந்த ஹோம் பற்றிக் கேள்விப்பட்டுக் கூட்டிட்டு வந்தேன்’’ என்றாள்.

என் கணவருக்கு போன் செய்து வரச் சொன்னேன். மாலை வாங்கிப் போட்டேன். ஹோமிலேயே அடக்கத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. எல்லாம் முடியும் வரை அந்தப் பெண்ணோடு இருந்தேன்.

``நீ ஹாஸ்டலை காலி பண்ணிட்டு என்னோடயே இரு’’ என்றேன். என் கணவர் புரிந்துகொண்டார். முதுகைத் தட்டி எனக்கான சம்மதத்தைக் கொடுத்தார். அந்தப் பெண், என்னை சற்று விநோதமாகப் பார்த்தாள்.

``நானும் உங்க ஊர்தான். உன் அம்மாவை சிறு வயதிலிருந்தே தெரியும்’’ என்றேன்.

ஆச்சர்யத்தோடு என்னுடன் கிளம்பத் தயாரானவளிடம், ``உன் பேரென்னம்மா?’’ என்றேன்.

அவள் சொன்னது என் பெயர்.