Published:Updated:

"டிக்டாக் பயன்படுத்தும் பெண்கள், குழந்தைகள் கவனத்திற்கு!" #TikTok

"டிக்டாக் பயன்படுத்தும் பெண்கள், குழந்தைகள் கவனத்திற்கு!" #TikTok
"டிக்டாக் பயன்படுத்தும் பெண்கள், குழந்தைகள் கவனத்திற்கு!" #TikTok

இன்று சமூகவலைதளங்களில் எந்தப்பக்கம் திரும்பினாலும் டிக்டாக் வீடியோக்கள்தான். மற்றவர்கள் செய்யும் க்யூட்டான விஷயங்களைப் பார்த்து நாமும் ஏன் டிரை பண்ணக் கூடாது எனக் களம் இறங்கினேன். நாளாக, நாளாக அதிலேயே நேரம் செலவழிப்பதைப் போன்று உணர்ந்தேன். சாதாரணமாக நாம் எடுக்கிற வீடியோவிற்கு பல லைக்ஸ், கமென்ட்ஸ் குவியும்போது தொடர்ந்து வீடியோக்களில் நடிக்கும் எண்ணம் இயல்பாகவே தோன்றிடுது. இந்த வகையான டிக்டாக் வீடியோக்களைப் பயன்படுத்தி பிரபலம் ஆனவர்களுடைய பட்டியல் கணக்கில் அடங்காதவை. அடப்பாவிங்களா.. இப்படிக் கூடவா டிக்டாக் வீடியோ பண்ணுவீங்கன்னு போட்டிப்போட்டு பண்ற ஆட்களும் உண்டு. 18+ வீடியோக்களும் இவற்றுள் அடங்கும். காதலர்கள், தம்பதிகள், குழந்தைகள் அட! கர்ப்பிணிகளில் பலரும்கூட இந்த வீடியோக்களை எடுப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். 

ஒரு காதல் ஜோடி டிக்டாக் வீடியோ எடுத்து அதில் பிரபலமும் ஆகிறார்கள். அவர்களுடைய திருமணத்தைக் கூட டிக்டாக் வீடியோவிலேயே நடத்தி முடித்தார்கள். பின்னர் இருவரும் சேர்ந்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு நாள் அந்தப் பெண், மியூசிக்கலி வீடியோவில், 'நான் காதலிச்சு எங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, என் கணவருக்கு வேறு பெண்ணோட தொடர்பு இருக்கு. நான் ஏமாந்துட்டேன். என் கணவரை மீட்டுத்தர சொல்லி போலீஸில் புகார் கொடுத்துருக்கேன்னு' பேசுறாங்க. அந்த வீடியோவுக்கு பலரும் ரெஸ்பான்ஸ் பண்றாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, அந்தப் பொண்ணும் அந்தப் பையனும் மியூசிக்கலி வீடியோவில், 'இவர் தப்பு பண்ணார். இப்போ திருந்திட்டாரு! அந்தத் தப்பை மறுபடி பண்ண மாட்டேன்னு சொன்னார். இப்போ நாங்க சேர்ந்து சந்தோஷமா வாழுறோம். எங்களுக்கு சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றி!'ன்னு சொல்றாங்க. மியூசிக்கலியைத் தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து நிச்சயம் தெரிந்திருக்கும்.

அதே போன்று,'கலையரசன்' என்பவர் திருநங்கை போல வீடியோ பண்ணுவதாகக் கூறி தொடர்ந்து அவருடைய பக்கத்தில் ஆபாசமாக கமென்ட்டுகளைப் போட்டிருக்கிறார்கள். அவற்றைப் படித்து மனமுடைந்து கலையரசன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

இதே போன்று பல சம்பவங்கள் டிக்டாக் வீடியோவில் நடந்துவிட்டது. நடிகரைப் போன்று ஸ்டைல் காட்டுவதாக நினைத்து விளையாட்டாய் செய்த வீடியோ வினையாக மாறிய காட்சிகளும் இருக்கின்றன.  இந்த வீடியோக்களின் மூலம் பிரபலமாகி சினிமாத் துறைக்குள் நுழைபவர்கள் சொற்ப சதவிகிதம்தான். சிலர் புகழ் மழையில் நனையவும் செய்கிறார்கள். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த டிக்டாக் மாய உலகத்திற்குள் நுழைய விரும்புகிறார்கள். ஒருவகையில் அதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் தான் காரணம் என்றாலும் ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் டீன்ஏஜ் வசனங்களைக் குழந்தைகள் மனப்பாடம் செய்து பேசுகிறார்கள் என்பது எவ்வளவு அபத்தமான மனநிலை. இதனால், தெரிந்தோ தெரியாமலோ குழந்தை மனதிற்குள் நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மனரீதியாக மியூசிக்கலி ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து மனநல மருத்துவர் ஸ்வாதிக்கிடம் பேசினோம்.

'டிக்டாக்' அடிக்‌ஷன்னு நான் சொல்ல மாட்டேன். சிகரெட், மது மாதிரியான விஷயம் இது இல்லை. ஆனாலும், இந்த ஆப் மூலமா தேவையில்லாம அவங்களுடைய நேரத்தைச் செலவழிக்கிறாங்க. மூளை, நேரம்னு எல்லாமே இதுக்காகச் செலவழிக்குறப்போ அவங்களுடைய இயல்பான வாழ்க்கை முறை பாதிப்படையும். 'டிக்டாக்'னு எல்லோரும் பேசும்போது நாமலும் அக்கவுண்ட் கிரியேட் பண்ணனும்,  வீடியோஸைப் போஸ்ட் பண்ணனுங்குற எண்ணம் இயல்பாகவே வந்துடும். இப்போ அதுதான் டிரெண்ட்ங்குறப்போ, நானும் அவனை / அவளை மாதிரி பேமஸ் ஆகணும், எல்லோரும் என்னைப் பற்றி பேசணுங்குற எண்ணம் எழ ஆரம்பிச்சிடுது. சமூக வலைதளங்களில் பொதுவாக புகைப்படங்கள் அப்லோடு பண்ணும்போது நம்மகிட்ட இருக்கிற ஃபோட்டோவில் பெஸ்ட்டான ஃபோட்டோவைத்தான் பதிவிடணும்னு நினைப்போம். அந்த மாதிரிதான் இங்கேயும் பெஸ்ட்டான வீடியோவைப் பதிவிடணும்னு நினைப்பாங்க. இப்படித்தான் நம்மளை அழகாக் காட்டிக்கணுங்குற மாதிரியான எண்ணங்கள் வந்துடும். போலியான பிம்பத்தைத் தெரிஞ்சோ, தெரியாமலேயோ கிரியேட் பண்ணிடுவாங்க. ஒருதடவை பண்ணும்போது நிறைய லைக்ஸ், கமென்ட்ஸ் வாங்கியிருப்பாங்க. இன்னொரு தடவை பண்றப்போ, கம்மியான லைக்ஸ் வாங்கியிருப்பாங்க. நம்மளை யாருக்கும் பிடிக்கலையா, நாம அழகா இல்லையாங்குற மாதிரியான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். லைக்ஸ், கமெண்ட்டில் மட்டுமே அவங்களுடைய கவனம் இருக்கும். இது அவங்க மனநிலையைப் பாதிக்கும்.

கொஞ்ச நாளிலேயே ஹிட் ஆகிட்டாங்க அப்படின்னா அடுத்த வீடியோவை இதை விட பெஸ்ட்டா பண்ணனும்னு நினைப்பாங்க. சிலர், வீடியோ பண்றப்போ ரிஸ்க் எடுக்க நினைப்பாங்க. சிலர் கவர்ச்சி மூலமா ஹிட் அடிக்கணும்னு நினைப்பாங்க. டிக்டாக் வீடியோவை பப்ளிக்ல போஸ்ட் பண்றீங்கங்குறப்போ அதை உலகத்துல உள்ள யார்னாலும் பார்க்கலாம். யார்னாலும் பார்க்கலாம் என்பதால அதை ஈஸியா வெவ்வேறு தளங்கிள் பரப்பவும் பண்ணலாம். ஓர் ஆர்வத்துல அப்லோடு பண்ணிட்டு அதை டெலிட் பண்ணிடலாம்னு நினைச்சா கூட அதுக்கு இடைப்பட்ட நேரத்துல எத்தனை பேர் அதை ஷேர் செஞ்சிருப்பாங்கன்னு கேட்டா அது கேள்விக்குறி தான்! அக்கவுண்டை கூட டெலிட் பண்ணிடலாம் அந்த வீடியோக்களை டெலிட் பண்ண முடியாது. அதனாலேயே மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கு. 

இந்த மாதிரியான அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யுறப்போ நம்ம ஆதார் கார்டுலாம் கொடுத்து நேர்மையான அக்கவுண்ட் வைச்சிட்டு இல்லங்க. யார்னாலும் போலியான அக்கவுண்ட் கிரியேட் பண்ண முடியும். ஈஸியா ஆபத்துல சிக்கிட முடியும். இதில் அதிக நேரம் செலவழிக்கிறதுனால குடும்ப பந்தத்தில் நிறைய விரிசல். கருவிகள் கூடவே பேசிட்டு அதுலேயே மூழ்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுது. 

குழந்தைங்களுக்கு இந்த மாதிரியான ஆப்களைப் பயன்படுத்தக் கொடுக்கும்போது, இத்தனை மணி நேரம் தான் குழந்தைங்க பார்க்கணும், ரெஸ்டிரிக்‌ஷன் மோட் போட்டு கவர்ச்சியான வீடியோக்களை கட் செய்து பிரைவஸி விஷயங்களை ஆன் செய்துவிட்டு கொடுங்கள். இது பயன்படுத்தாதேன்னு சொல்றதை விட இதுல உள்ள பிரச்னைகளை உட்கார வைச்சு அவங்ககிட்ட சொல்லும்போது அவங்களே அதை விரும்பமாட்டாங்க என்றார்.