தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்!” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா

``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்!” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்!” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா

கடைசி வாரிசு

‘‘விராலிமலை முருகன் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டப்போ, எனக்கு ஏழு வயசு. கோயில்ல நடக்கற பூஜைகளுக்கு, என்னோடு இருந்த 32 தேவதாசிகளும் சேவகம் செய்வோம். கோயில் திருவிழான்னா, நாங்க ஆடும் சதிராட்டத்தைப் பார்க்கவே கூட்டம் ஜேஜேனு வரும்’’ எனத் தனது கடந்த கால நினைவுகளை அசைபோடும் 80 வயது முத்துக்கண்ணம்மா, பரதநாட்டியத்தின் முன்னோடியான தேவதாசிகளின் சதிராட்டக் கலையின் கடைசி சாட்சியம்.

‘‘விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயிலைச் சுற்றி 200-க்கும் அதிகமான இசை வேளாளர் குடும்பங்கள் இருந்தன. எங்கப்பா ராமச்சந்திரன் நட்டுவனார் சதிராட்டம், குறவஞ்சி உள்ளிட்ட கலைகள்ல பிரபலமாயிருந்தவர். தமிழ்நாடு முழுக்க பல்வேறு கலைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். பிரபல பரதநாட்டியக் கலைஞரான பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அவர்கிட்ட கலை கத்துக்கிட்டாங்க. முருகனுக்கு சேவகம் செய்வதில் மிகுந்த ஈடுபாடுகொண்ட குடும்பம் என்பதால், எங்க வீட்டின் ஏழு தலைமுறைப் பெண்களும் சதிராட்டம் ஆடினவங்கதான். வீட்டில் ஐந்தாவதா பிறந்த என்னை, விராலிமலை முருகன் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்ட நிகழ்ச்சியை, ஒரு திருமணம்போல விமரிசையா நடத்துனாங்க.  ‘நித்திய சுமங்கலி’யா கடவுளுக்காக வாழ்வதுதான் என் வாழ்க்கையா மாறிச்சு.

``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்!” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா

1947-ம் ஆண்டு, தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகு, கோயில்ல பெண்கள் நடனமாடுறது நிறுத்தப்பட்டது. வருஷங்களும் ஓடிருச்சு. நினைவுதெரிஞ்ச நாள்லயிருந்து கடவுள் முன்னாடி ஆடிவந்த எனக்கு, இப்போது மலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியலை. வயசாகிடுச்சு. அதனால கீழயிருந்தே வேண்டிக்கிறேன்.

பொட்டுக்கட்டி விடப்பட்ட யாரும் அடுத்து தாலிகட்டி திருமணம் செய்துக்க மாட்டாங்க. ஆனா, சேர்ந்து வாழ விரும்புறவங்ககூட வாழ்வோம். அப்படி, விராலிமலையில அப்போதிருந்த டூரிங் டாக்கீஸில் மேனேஜரா வேலைபார்த்த என் கணவர் தண்டபாணி, என்கூட சேர்ந்துவாழ விரும்பினார். எங்களுக்கு ஒரு மகளும் ரெண்டு மகன்களும் பிறந்தாங்க. சில வருஷங்களுக்கு முன், அவரும் என் மூத்த மகனும் இறந்துட்டாங்க.  இப்போது என் மகள் கண்மணி வீட்ல இருக்கேன்.

``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்!” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா


தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்குப் பிறகு, மன்னர் எங்களுக்கு வழங்கிய நிலங்களுக்கு அரசு தீர்வை கட்டச் சொன்னது. அதனால, பல பேர் நிலத்தை விற்றுத் தீர்வை கட்டினாங்க. கலையைக் கைவிட்டுவிட்டு, விவசாயம் பார்க்கப் போயிட்டாங்க. அதனால எங்க வாழ்க்கையே நலிந்துபோச்சு. என்னோடு பொட்டுக்கட்டி விடப்பட்ட 32 பேரில், நான் மட்டும்தான் இப்போ உயிரோட இருக்கேன்.

ஒரு பாடலுக்கு ஆடாம, அந்தப் பாடலாவே நம்மை மாத்திக்கிட்டு, முகபாவம், உடலசைவுகளுடன் ஆடுறதுதான் சதிர். மனசு, உடம்பு, சிந்தனை எல்லாம் ஒன்றாய் இருந்தாதான் சதிர் ஆட முடியும். சதிராட்டம் பத்தி ஆய்வுசெய்த சொர்ணமால்யா, என்கிட்ட சதிர் கலையைக் கத்துக்கிட்டாங்க. நிறைய விருதுகள், பாராட்டுக் கூட்டங்கள் எல்லாம் கிடைச்சிருந்தாலும், இப்போ மூத்த கலைஞருக்கான உதவித்தொகை 1,500 ரூபாயில்தான் வாழ்க்கையை நடத்துறேன். கஷ்ட ஜீவனம்தான்’’ - முத்துக்கண்ணம்மாவின் குரலை வேதனை கவ்வுகிறது. சில நொடிகளில் தலைசிலுப்பி புன்னகைத்தவர், சட்டென சில அடவுகளைச் சொல்லி ஆடுகிறார். பாதங்கள் நின்ற பின், மௌனத்துடன் அமர்ந்துகொள்கிறார்.

‘`பரதநாட்டியத்துக்கு முந்தைய கலையான சதிராட்டத்தின் கடைசி வாரிசான அம்மாவுக்கு, அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கணும்’’ என்று அவரின் வாரிசுகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

முத்துக்கண்ணம்மாவின் பாதங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டியவையே!

சி.ய.ஆனந்தகுமார் - படம் : தே.தீட்ஷித்