தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!
பிரீமியம் ஸ்டோரி
News
மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

கலர்ஃபுல் க்வில்ட் திருவிழா

மீபத்தில் சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது, கிட்டத்தட்ட 4,000 பேர் கண்டுகளித்த ஒரு வண்ணமயமான திருவிழா... பல நூறு பெண்களின் கற்பனைத் திறனும் கைத்திறனும் கலைநயமும் சேர்ந்து வெளிப்பட்ட ‘இந்தியா க்வில்ட் ஃபெஸ்டிவல்!’

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

சென்னையைச் சேர்ந்த வர்ஷா சுந்தர் ராஜன் மற்றும் டீனா கத்வால், கீதா கண்டெல்வால் ஆகிய மூவரும்தான் இந்த சர்வதேச திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். ‘` ‘க்வில்ட்’ என்பது மேலே ஒரு லேயர் துணி, கீழே ஒரு லேயர் துணி, நடுவில் பஞ்சு அல்லது பாலியஸ்டர்னு மூணு அடுக்குகள் கொண்ட விரிப்பு. தரையில் விரிச்சுப் படுக்கறதுக்கு, குழந்தைக்கு விரிக்கிறதுக்கு, போர்த்திக்கிறதுக்கு, சுவர் அலங்காரத்துக்குன்னு பல வகையில் பயன்படுகிற இந்த ‘க்வில்ட்’, கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, கனடா, கொரியா, ஜப்பான்  போன்ற நாடுகளில் அதிகமான உபயோகத்தில் இருக்கு. அதனால அங்கேயெல்லாம் வீடுகளிலேயே பெண்கள் சர்வசாதாரணமாக விதவிதமான விரிப்புகளைத் தைச்சுக்கிறாங்க.

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

ஆஸ்திரேலியாவிலில் வசித்த நான், சென்னை வந்த பிறகு திருவான்மியூர்ல டீனா கத்வால் நடத்தும் ‘தி ஸ்கொயர் இன்ச்’ என்கிற க்வில்ட் க்ளாஸில் சேர்ந்தேன். ஒருநாள், டீனா மற்றும் கீதாவோடு பேசுறப்போ, ‘க்வில்ட் ஃபெஸ்டிவல்’ பத்தின ஐடியா வந்தது. நம்ம நாட்டுப் பெண்களின் க்வில்ட்டிங் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கணும்கிறதுதான் எங்க நோக்கமே’’ - தொடர்ந்து விழாவைச் செயல்படுத்தியது குறித்து விவரிக்கிறார் வர்ஷா.

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

‘‘இந்தத் திருவிழாவுக்காக நாங்க கிட்டத்தட்ட ஒன்றரை வருஷங்கள் வேலை பார்த்தோம். மாடர்ன் டிசைன், பாரம்பர்யம், கலை, நாவிஸ், தீமாட்டிக்... இப்படி எட்டு தலைப்புகளில் போட்டி அறிவிச்சோம். இதில் சிறப்பான விஷயம், காரைக்குடி பக்கமிருக்கும் நாட்டரசன்கோட்டை என்ற கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவிகள் சேர்ந்து, இன்டர்நெட் பார்த்து, ஒரு க்வில்ட் தைச்சு அனுப்பியிருந்ததுதான். எங்க   சந்தோஷத்துக்கு அளவே இல்லை’’ என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் வர்ஷா.

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

‘`11 நாடுகளில் இருந்து, 161 கலைஞர்கள் தைத்து அனுப்பிய 290 விரிப்புகளில், மொத்தம் 28 பேருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதுவரை இருந்த சாதனையை முறியடிக்கும்விதமாக ஒரு பிரமாதமான விரிப்பு, புனேவிலிருந்து வந்திருந்தது. 20 அடி நீளம், 8 அடி உயரம் இருந்த அதில் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவை மிகத் தத்ரூபமாக எம்ப்ராய்டரி செய்திருந்தாங்க. அதில் இன்னும் சுவாரஸ்யம் என்னன்னா, ரெண்டு ஆங்கிலேயர்கள் சிவாஜி மகாராஜாவுக்குத் தலைவணங்கி நிற்கிற மாதிரி போட்டிருந்ததுதான். சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘மீ டூ’, அப்புறம், `எதையும் ‘வேஸ்ட்’னு  தூக்கிப்போடாதீங்க'னு சொல்ற விதத்தில் துண்டுத்துணிகளை வெச்சே தைத்த விரிப்பு... இப்படி பல தீம்களில் நம்ம பெண்கள் அசத்திட்டாங்க!’’ என்றார்.

மன அழுத்தம் போக்கும் மாயக் கலை!

இவ்விழாவில் எகிப்திலிருந்து வந்திருந்த கலைஞர்கள் கூடாரங்களுக்குள் செய்யும் வேலைப்பாடுகளைச் செய்து காண்பித்தனர். தர்மபுரி அருகில் இருக்கும் சித்திலிங்கியைச் சேர்ந்த பழங்குடி மக்களின் எம்ப்ராய்டரி, நீலகிரி தோடர் இன மக்களின் எம்ப்ராய்டரி மற்றும் கைகளாலேயே மிக அழகிய லேஸ் தைக்கும் நர்சாப்பூர் கலைஞர்கள், அந்தக் காலத்து அரதப் பழைய மெஷினை வைத்துக்கொண்டு அநாயாசமாக அற்புதமான எம்ப்ராய்டரி டிசைன் போடும், ‘நீடில் மேன் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படும் பாட்டியாலாவின் அருண் பஜாஜ் என்று கலந்துகட்டிய கைவண்ணங்கள், பார்வையாளர்களின் கண்களுக்கும் மனசுக்கும் விருந்து.

‘‘இது வெறும் தையல்கலை மட்டுமே இல்லை. மன அழுத்தத்துக்கு நல்ல மருந்து. அதனாலதான் டாக்டர்கள் முதல் குழந்தைகள் வரை இந்தப் பயிற்சிக்கு வர்றாங்க. இந்தக் கலை மறைஞ்சு போயிடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படணும்’’ என்கிறார் வர்ஷா, அக்கறையுடன்.

- பிரேமா நாராயணன்  

சீர் கொடுக்கும் விரிப்புக்குள் சோறு!

கர்நாடக மாநிலத்தில் ஒரு பிரிவினர் தைக்கும் விரிப்புகளில், பாரம்பர்ய வழக்கப்படி விரிப்பைத் தைத்து முடிக்கும்போது, உள்ளே ஓர் உருண்டை சோறு வைத்து மூடுகின்றனர். எப்போதும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்வார்களாம். மகள்களுக்குச் சீர் கொடுக்கும்போது, இப்படிச் சோறுவைத்துத் தைத்த விரிப்பைத்தான் கொடுத்து அனுப்புவார்களாம்!