தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா!

மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா!
பிரீமியம் ஸ்டோரி
News
மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா!

சோனியா ஆச்சார்யா

“சில இசைக் கருவிகளைப் பெண் களிடமிருந்து விலக்கிவைத்திருந்த காலத்தை முடித்துவைக்க உருவானதே எங்களின் இசைக்குழு’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார் சோனியா ஆச்சார்யா. பதின்மூன்றுக்கும் மேற்பட்ட பெண் வாத்திய இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, இசை நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களைப் பிரமிக்க வைப்பவர். மும்பையில் வசிக்கும் சோனியாவிடம் பேசினோம்.

மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா!

‘`வயலின், பியானோ, நடனம் மற்றும் வாய்ப்பாட்டு இவற்றைத் தாண்டி பல இசைக் கருவிகளை வாசிப்பதற்கு இன்றும்கூட பெண்களை அனுமதிப்பதில் இசைக் கலைஞர்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. பெண்களின் விரல்கள் மிக மென்மையானவை, எடை அதிகம்கொண்ட பல இசைக் கருவிகளைக் கையாள்வது கடினம், இசைக் கருவியிலிருந்து பொருத்தமான இசையை எழுப்புவது பெண்களால் இயலாத காரியம் எனப் பல சங்கீத வித்வான்கள் நினைக்கின்றனர். எனவே, பல நூற்றாண்டுகளாக ஆண்கள் மட்டுமே வாத்திய இசையில் புகழ்பெற முடிந்தது. பல சங்கீத விழாக்களில், பெண் வாத்தியக் கலைஞர்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுகிறார்கள். உரிய அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்றி பெண்களும் சாரங்கி, சித்தார், கிடார், டோல்கி, தபலா, கடம், மிருதங்கம் போன்ற வாத்தியக் கருவிகளில் சாதிக்க முடியும் என்ற எண்ணம் மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதே என் நோக்கம்.

மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா!

பாலினப் பாகுபாடு, போட்டி, பொறாமை, வறுமை மற்றும் பல சவால்களை எதிர்கொண்டு சாதனை படைக்கத் துடிக்கும் பெண் வாத்திய இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, `Women of Rhythm’ என்ற அமைப்பை 2016-ம் ஆண்டு ஏற்படுத்தினோம். பெண் வாத்திய இசைக் கலைஞர்களிடம் ஒளிந்துகிடக்கும் திறமையை வெளிக்கொணரவும், இசைக் கச்சேரிகளில் உற்சாகமாகப் பங்குபெறச் செய்யவும் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, பட்டை தீட்டவும் இந்த அமைப்பு உதவுகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக மகளிர் வாத்திய இசைக் கலைஞர்களுக்கென சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கடந்த நவம்பர் 2018-ல் நடத்திய நிகழ்ச்சியில், பல பெண் வாத்தியக் கலைஞர்களை முதன்முறையாக மேடையேற்றிச் சிறப்பித்தேன். அவர்கள் தாங்கள் சவால்களை எதிர்கொண்ட விதம் குறித்து சக பெண் வாத்தியக் கலைஞர்களிடம் பகிர்ந்துகொண்டனர். பலர் தனி ஆவர்த்தனம் செய்யும் அளவுக்கு தன்னம்பிக்கைபெற்றது வியப்பளித்தது.

மகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா!

எங்கள் ‘மகளிர் மட்டும் வாத்தியக் குழு’ நிகழ்ச்சியை நடத்த ஸ்பான்சர்களை அணுகுவதிலிருந்து பொருத்தமான அரங்கைத் தேர்ந்தெடுப்பதுவரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தும், ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட் விற்கவில்லை. மனம் தளராது சொந்தப் பணத்தைச் செலவழித்தேன். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கியும் சமாளித்தேன். நிகழ்ச்சியில் பெண் வாத்தியக் கலைஞர்கள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி, புதிய உத்திகளைக் கையாண்டு, ஈடுபாட்டுடன் இசை ரசிகர்களை மகிழ்வித்தனர். கைதட்டல்கள், எங்களுக்கு தோள்தட்டிக்கொடுத்தன.

இதுவரை மும்பையில் மட்டும் `மகளிர் மட்டும்' நிகழ்ச்சியை நடத்தினோம். அடுத்த கட்டமாக பெங்களூரு மற்றும் டெல்லியில் மூன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். பெண் வாத்தியக் கலைஞர்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதே என் லட்சியம்!” என்கிறார் சோனியா ஆச்சார்யா.

-ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்