Published:Updated:

லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!

லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!
பிரீமியம் ஸ்டோரி
லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!

பாடலாசிரியர் அருண்பாரதி - எழுத்தாளர் பத்மாவதி

லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!

பாடலாசிரியர் அருண்பாரதி - எழுத்தாளர் பத்மாவதி

Published:Updated:
லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!
பிரீமியம் ஸ்டோரி
லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!

‘இதயத்தின் மையப்பகுதியில்
இருக்கை விரித்து அமர்ந்தாய்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்’

- இது ‘காளி’ திரைப்படத்தில் ‘நூறாய் யுகம் நூறாய்’ பாடலில் இடம்பெற்ற வரிகள். இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர், பாடலாசிரியர் அருண் பாரதி. ‘`இது, நாங்க காதலிக்கும்போது இவங்களுக்காக எழுதினது’’ என்று தன் மனைவி பத்மாவதியை அறிமுகப்படுத்துகிறார் அருண். புத்தகம், சீரியல் வசனம் என்று பத்மாவதிக்கும் பேனாதான் பணி.

லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!

‘`தேனி மாவட்டம் உத்தமபாளையம் என் சொந்த ஊர். மழையும் வெயிலும் கைகோத்து, கவிதைகள் விளைவிக்கும் நிலப்பரப்பு. ஒருகட்டத்தில் சினிமாவில் பாட்டு எழுத ஆசைப்பட்டுச் சென்னை வந்தேன். பாட்டு எழுதணும்னா நிறைய கத்துக்கணும்னு பல விஷயங்களைத் தேடித் தேடிக் கற்றுக்கொண்டிருந்தேன். அப்போதான் பத்மாவதி எனக்கு அறிமுகமானாங்க. அவங்க என் கவிதைகளை மனப்பாடமா சொன்னப்போ, சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டேன். இவ்வளவுக்கும் அது காதல் கவிதை இல்லை... மண் சார்ந்த கவிதை’’ என மனைவியின் கரம்பற்ற, பத்மாவதி தொடர்ந்தார்.

‘`சொந்த ஊர் திருச்சி. படிப்பு முடிஞ்சதும் ஐ.டி வேலை. இன்னொரு பக்கம், எழுத்து மேல ஒரு தீராக்காதல் இருந்துட்டே இருந்தது. நிறைய பயணங்கள் மேற்கொள்ளும் நான், அப்போ சந்திக்கிற மனிதர்கள், அவர்களுடைய பிரச்னைகளை மையமா வெச்சு எழுதுவேன். அப்படித்தான் கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்கிற பெண்களை மையமா வெச்சு ஒரு புத்தகம் எழுதியிருந்தேன். அதை வெளியிடுவதில் பல சிக்கல்கள். முதல் சந்திப்பிலேயே, அருண்கிட்ட அதைப் பகிர்ந்துகிட்டேன். என் புத்தகம் வெளிவர அவர் உதவி செஞ்சார். 2010-ல் நண்பர்களாக எங்களுடைய பயணம் ஆரம்பிச்சது.

ரெண்டு பேரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கோம். ‘புரட்சியின் உச்சகட்டம்’ என்ற என்னுடைய இரண்டாவது புத்தகத்தை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியிட்டோம். திருமணமானபிறகு பிள்ளைங்க பெற்றோரை ஏதேதோ காரணம் சொல்லி, காசிக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அப்புறம் அங்கேயே அவங்களை விட்டுட்டுப் போயிடுவாங்க. அந்த முதியோர் காசி மடத்துல தங்கி உயிர்விடும் வரை தங்கள் வாழ்நாளை அங்கேயே கழிப்பாங்க. இந்த உண்மையை அடிப்படையாக வெச்சு ‘வாரணாசி’ன்னு ஒரு நாவல் எழுதினேன். இப்படி நான் எடுக்குற எல்லா முயற்சிகளிலும் அருண்தான் எனக்குப் பலமாயிருக்கார்’’ என்கிற பத்மாவதியிடம், ‘சரி, புரபோஸ் பண்ணின கதையை இன்னும் சொல்லலையே..?’ என்றதும் இருவரும் சிரிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!

‘`பத்மாவதி சென்னை வந்துட்டு திருச்சிக்குப் போகும்போது, வழியனுப்ப மனசில்லாம நானும் அவங்ககூட கொஞ்ச தூரம் பஸ்ல போயிட்டு, அப்புறம் பாதியில இறங்கி சென்னைக்குத் திரும்புவேன். ஒருநாள் பத்மா என்கிட்ட, ‘உங்களுக்கு என்னைப் பிடிக்கும்தானே? நீங்க என்னை லவ் பண்றீங்க தானே?’னு கேட்ட நிமிஷம் பார்த்து, என் போன்ல வேலிடிட்டி முடிஞ்சு கால் கட் ஆகிடுச்சு. அடிச்சுப் பிடிச்சு ஓடிப்போய் கடையைத் தேடி ரீசார்ஜ் செய்து அவங்களுக்கு கால் பண்ணி, ‘ஏதோ சொன்னீங்களே... போன் கட் ஆகிடுச்சு’னு கேட்டேன். அவங்க மறுபடியும் சொல்ல, நானும் என் காதலைச் சொல்ல, வசந்தகாலம் ஆரம்பமானது. என்றாலும், அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடிதான் என் பயமா இருந்தது’’ என்றதும் பத்மாவதி தொடர்ந்தார்...

‘` `செட்டில் ஆனபிறகுதான் திருமணம் செய்யணுமா? திருமணம் செஞ்சுட்டு செட்டில் ஆகலாம்’னு சொன்னேன். எங்கம்மா அப்பா ரெண்டு பேரும் கோர்ட்டில் வேலை பார்க்குறவங்கங்கிறதால, பல விவாகரத்து கேஸ்களைப் பார்த்தவங்க. அதனால, பணம், ஸ்டேட்டஸ் எல்லாம் முக்கியமில்ல, மனசுதான் முக்கியம்னு நான் சொன்னதைப் புரிஞ்சுக் கிட்டாங்க’’ என அருண்பாரதியின் தோள் சாய்கிறார் பத்மாவதி.

‘`கல்யாணத்துக்கு அப்புறம்தான் நான் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத ஆரம்பிச்சேன். ‘அண்ணாதுரை’, ‘காளி’, ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’, ‘சண்டைக்கோழி 2’, ‘களவாணி 2’, ‘தில்லுக்கு துட்டு 2’ ‘விஸ்வாசம்’ போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கேன். பொருளாதாரப் பிரச்னைகள், தொழில்ரீதியான நெருக்கடிகள்னு என் கடினப் பாதைகளையெல்லாம் கடந்து வரும்போது தெம்பும் அன்பும் கொடுக்குறது பத்மாதான். நாங்க எப்பவும் வலியைச் சுமந்து செல்றது கிடையாது. அதை அப்பப்போ இறக்கிவெச்சிடுவோம். அதனாலதான் புறக்கணிப்புகளையும் ஏமாற்றங்களையும் கடந்துவர முடிஞ்சிருக்கு’’ என்றதும் பத்மாவதி தொடர்ந்தார்...

‘`நான் என் ஐ.டி வேலையில் இருக்கும்போதே ‘பாசமலர்’, ‘மகாலட்சுமி’, ‘கல்யாணமாம் கல்யாணம்’, ‘கைராசிக் குடும்பம்’ போன்ற சீரியல்களுக்கு வசனம் எழுதிட்டிருந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி வேலையை விட்டுட்டு, முழுநேர எழுத்தாளரா மாறிட்டேன். இப்போ விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘அரண்மனைக்கிளி’ ஆகிய இரண்டு சீரியல்களுக்கும் வசனம் எழுதிட்டிருக்கேன். கல்லூரிகளில் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கிறேன். சைபர் க்ரைம் துறை மூலமா என்னென்ன உதவிகள் பெறலாம் எனப் பெண்களுக்கு  வழிகாட்டுதல் வழங்கறேன். வேலைக்குப் போற பெண்களுக்கு ஏற்படுகிற பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கவுன்சலிங் கொடுக்குறேன்.

நானும் சரி, அருணும் சரி... ஒருத்தருடைய வேலையில் மத்தவங்க தலையிடுறது இல்ல. நான் ராத்திரி முழுக்க எழுதிட்டிருந்தா, அவர் எனக்காக காபி போட்டுக் கொடுப்பார். அவர் விழிச்சு வேலை பார்க்குறப்போ நான் அவருக்கு காபி போட்டுக் கொடுப்பேன். ரெண்டு பேரும் கண்விழிச்சு வேலை பார்க்கும் இரவுகளில், திடீர்னு வெளியே கிளம்பிப் போய் டீ குடிச்சிட்டு வருவோம். ராத்திரி ரெண்டு மணிக்கு டிராவல் பண்ணி டீ குடிக்கிறதெல்லாம் வேற லெவல் ஃபீலிங்! நான் எழுதுற கதாபாத்திரங்களுக்கு நிச்சயமா ‘அருண்’னு பெயர் வெச்சிடுவேன். அவர் எழுதுற பாடல் வரிகளில் சில என்னை நினைச்சு எழுதினதா இருக்கும்’’ எனும்போது கொஞ்சம் வெட்கம் பத்மாவதிக்கு.

‘`நாங்க ரெண்டு பேரும் போற பாதையில காதல்தான் வெளிச்சமா வருது!” - நெகிழ்ந்து சொல்கிறார்கள் இந்த எழுத்துத் தம்பதி!

காதல் கடிதம்!

‘’கடிதங்கள் எழுதினது இல்ல. நான் ஒருமுறை சிங்கப்பூர் போயிருந்தேன். அப்போ கேமரா போன்லாம் இல்ல. ‘இத்தனை மணிக்கு மெயிலில் பேசலாம்’னு அவர்கிட்ட சொல்லிடுவேன். அந்த அந்த நேரத்துக்கு ஒரு பிரவுஸிங் சென்டரைத் தேடி ரெடியா உட்கார்ந்திடுவார். மணிக்கணக்கா மெயிலில் சாட் பண்ணியிருக்கோம். அஞ்சலில் காதலிக்காத குறையை மின்னஞ்சல் தீர்த்துவைத்தது” என்கிறார் பத்மாவதி.

-வெ. வித்யா காயத்ரி 

படங்கள் : பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism