தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் அரங்கேறும் இந்த விடுமுறை நாள்களை, எப்படி குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவது, அவர்களுடன் உற்சாகமாக இருக்க என்னென்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.

கவலையை விடுங்கள்... நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆனந்தமாக இருக்க, 10 ஐடியாக் களை வழங்குகிறோம். குறைவில்லாமல் கொண்டாடி மகிழலாமே!

உற்சாகம் தரும் ஸ்விம் அவுட்டிங்!

குழந்தைகளுக்குப் பேரானந்தம் தரக்கூடிய இடங்களில் மிக முக்கியமானவை நீர்நிலைகள். சென்னை மாதிரியான மெட்ரோ நகரங்களில் நீச்சல் குளங்கள் நிறையவே உண்டு. அதுவே கிராமம் என்றால், அருவி, ஆறு, குளம், வாய்க்கால் என நீர்நிலைகள் குறைவில்லாமல் இருக்கும். வெயில் வாட்டிவதைக்கும் கோடை விடுமுறை நாள்களுக்கு இதுபோன்ற இடங்கள்தான் சரியான தேர்வு. வசிக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் நீச்சல் குளங்கள் அல்லது இதர நீர்நிலைகளைத் தேடி, குடும்ப உறுப்பினர்களுடன் சென்றுவருவது, கோடைக்காலத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

குழந்தைகளை அங்கே விளையாட விடும்போது, பெரியவர்கள் துணையிருப்பது மிக முக்கியம்.

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

கண்ணுக்கு குளிர்ச்சியாக கார்டனிங்!

அயர்ந்துபோன கண்களுடன் வீட்டுக்குள் நுழையும்போது, வீடெங்கிலும் பசுமை படர்ந்து இருந்தால்... நினைத்துப்பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறதல்லவா! கோடை விடுமுறை நாளில், குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால், வீட்டுக்கு வெளியே மட்டுமல்ல, உள்ளேயும் பசுமையைப் படரச் செய்யலாம். நல்ல தூக்கத்துக்கு உதவும், காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் இண்டோர் மற்றும் அவுட்டோர் தாவரங்கள் இப்போது ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டை அழகுப்படுத்தலாம். வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் மரம் நடுதல் பணிகளை, குடும்ப உறுப்பினர்களாகச் சேர்ந்து மேற்கொள்ளலாம். இதனால், மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை குழந்தைகளும் புரிந்துகொள்வார்கள்.
 
லைவ் வித் ஜங்கிள்!

கேரளா போன்ற இயற்கை கொஞ்சி விளையாடும் மாநிலங்களில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவே காடுகளுக்கு நடுவில் இருக்கும் உயரமான மரங்களின் மீது, ட்ரீ ஹவுஸ் அமைத்திருக்கிறார்கள். கோடை விடுமுறை நாள்களில், இதுபோன்ற வித்தியாசமான இடங்களுக்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லலாம். வனவிலங்குகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைப் பார்ப்பது த்ரில்லிங்காகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

குழந்தைகளை விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்களுக்கு அழைத்துச் செல்வதும், விலங்குகள் மீதான அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

சின்னதாக ஒரு பார்ட்டி!

இன்றைய கார்ப்பரேட் காலத்தில் சொந்தபந்தங்களையோ, நண்பர்களையோ, அவ்வளவு ஏன்... பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக்கூட பார்த்துப் பேச நேரம் இருப்பதில்லை. அதனால், பள்ளிக்கு விடுமுறை ஆரம்பித்த முதல் வாரத்தில், உறவுக்காரர்கள், பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரையும் அழைத்து ஒரு பார்ட்டி வைத்து, கோடை நாள்களை உற்சாகமாகத் தொடங்குங்கள்.

ஒரு நாளை சந்தோஷமாகத் தொடங்கும்போது, அந்த நாள் முழுவதும் ஆனந்தமாக அமைகிறது. அப்படித்தான், விடுமுறையின் தொடக்கத்திலேயே அனைவரையும் அழைத்து பார்ட்டிவைப்பது, கோடை விடுமுறை நாள்களை இனிமையானதாக மாற்றும். அதுவரை எப்படியோ தெரியவில்லை... பார்ட்டி முடிந்து போகும்போது ஒவ்வொருவரின் இதயத் திலும், `பாசங்கள் நேசங்கள் ஏதும் இன்றி... வாழ்கின்ற வாழ்க்கையோ வாழ்க்கை இல்லை’ என்ற பாடல் மெளன ராகமாக ஒலித்துக் கொண்டிருக்கும்!

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

சுகாதாரமான சந்தோஷம்!

குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஓர் இடத்தைத் தத்தெடுத்துக்கொள்ளுங்கள். அது, வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க், பீச், வசிக்கும் ஏரியா அல்லது கோயில் என எதுவாகவும் இருக்கலாம். அந்த இடங்களைச் சுத்தம் செய்வதுதான் உங்களின் இலக்கு. வீட்டை சுத்தம் செய்வதிலும், பொது இடங்களைச் சுத்தம் செய்வதிலும் என்ன சந்தோஷம் கிடைத்துவிடப்போகிறது என நினைப்பவராக நீங்கள் இருந்தால்... இப்போதே குடும்ப உறுப்பினர்களுடன் சுத்தம் செய்யும் பணியில் களமிறங்குங்கள். எந்த ஒரு விஷயத்தையும் அனுபவிக்கும்போதுதான் அதில் இருக்கும் ஆனந்தம் புரியும். இந்தக் கொண்டாட்டத்தில் பொதுநலனும் கலந்திருப்பதால், சந்தோஷமும் உற்சாகமும் அவரவர்களுடன் நின்றுவிடாமல், அடுத்தவர்களுக்கும் பரவும்.

ஜாலி சைக்கிளிங்!

அதிகாலை நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்வதில் சைக்கிளிஸ்ட்டுகளின் பங்கு அதிகம். ஏனெனில், இன்று நிறைய பேர் சைக்கிளிங் செய்யத் தொடங்கியுள்ளனர். சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை போன்ற  பெருநகர வீதிகளில் சைக்கிளிங் செய்பவர்களை நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது.

இதுவரை தனியாகவோ, குழுவாகவோ பயணித்தவர்கள் (பயணிக்காதவர்களும்கூட!) இந்தக் கோடை விடுமுறை நாளில் குடும்ப உறுப்பினர் களுடன் பயணிக்கத் தயாராகுங்கள். சைக்கிள் பயணத்துக்கு அவர்களையும் தயார்படுத்துங்கள். காரில் சென்று ஊர் சுற்றிப் பார்ப்பதைவிட, சைக்கிளில் ஊர் சுற்றுவது அலாதியானது. பிறந்து வளர்ந்த ஊராக இருந்தாலும், அதை சைக்கிளில் சென்று பார்க்கும்போது பல இடங்கள் புதிதாகத் தெரியும்!

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

தீம் பார்க் கொண்டாட்டங்கள்!

கோடை விடுமுறை ஆரம்பித்ததுமே, தீம் பார்க் போகலாம் என எல்லோரும் யோசிப்பது வழக்கம்.

ஏனெனில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடிப்பாடி மகிழ, சிறந்த இடமாக இருப்பவை தீம் பார்க்குகளே. அங்கு செல்ல விருப்பமில்லாதவர்கள், வசிக்கும் பகுதியில் அல்லது வீட்டுக்குள்ளேயே விளையாடலாம். இது, ஒருவரையொருவர் உற்சாகப் படுத்துவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் உதவும்.

மெட்ரோ நகரங்களில் அப்பார்ட்மென்ட்டுகளில் வசிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, குடும்ப விளையாட்டு நிகழ்ச்சிகளை மேற்கொண்டால் இன்னும் சிறப்பு.

சுவாரஸ்யமான ட்ரெக்கிங் டிராவல்!

சாகசப் பயணங்களை மேற்கொள்ள, கோடை நாள்களே சரியானவை. ஏனெனில், அதற்கான காலநிலையும் விடுமுறை நாள்களும் அதிகம் இருப்பது இந்தக் காலகட்டத்தில்தான். மலைகளின் மீது ஏறுவது சுவாரஸ்யம் என்றால், அங்கு இருக்கும் அருவிகளில் குளிப்பது அதைவிட சுவாரஸ்யம். ட்ரெக்கிங் என்றவுடன், அது மலைகளை நோக்கித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. குடும்ப உறுப்பினர்கள் எல்லோராலும் மலை ஏற முடியாது என்பதால், காடுகளுக்குள் பயணியுங்கள். நீங்கள் சென்னைவாசியாக இருந்தால், சென்னைக்கு அருகில் இருக்கும் தடா மற்றும் நாகலாபுரம் ட்ரெக்கிங் ஸ்பாட்டுகள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணிக்க ஏற்றவை.

ஹாலிடே... ஜாலிடே! - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்!

வீட்டிலேயே ஃபிலிம் ஃபெஸ்டிவல்!

இன்று பெரும்பாலான வீடுகளில் ஹோம் தியேட்டர்கள் இருப்பதால், கோடை விடுமுறை தினங்களில் தரமான உலக சினிமாக்களை வீட்டிலேயே திரையிட்டு களிப்பைப் பகிர்ந்து கொள்ளலாம். உற்றார் உறவினரையும் அழைக்கும்போது, ஒரு திரைப்பட விழாவையே நடத்தியதுபோன்ற பெருமிதமும் உண்டாகும்!

உலக சினிமாக்களைப் பார்ப்பதன்மூலம் உலகின் பல பகுதிகளுக்கு நாமே சென்றுவந்ததுபோன்ற அனுபவமும் கிடைக்கும். புதிய இடங்கள், மக்கள், கலாசாரம், வாழ்க்கை முறை என ஏராளமான விஷயங்களை அறிந்துகொள்ளவும் முடியும். மொத்தத்தில்... வீட்டுக்குள் இருந்தபடியே ஓர் உலக சுற்றுலா!

பரவசம் தரும் ஃபார்ம் ஸ்டே!

`சுற்றிலும் தோட்டம்... நடுவில் வீடு’ என்ற ஆசை, நம் எல்லோருக்குமே இருக்கும். ஆனால், அப்படியான சூழலில் வாழும் வரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதனால், வருடத்துக்கு ஒருமுறையாவது `ஃபார்ம் ஸ்டே’ என்று சொல்லப்படும் இடங்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் சென்று, குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்கிவிட்டு வாருங்கள். அதற்காக, கோடை விடுமுறை நாள்களைத் தேர்வுசெய்யும்போது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்த மாதிரியும் இருக்கும். இயற்கையின்மடியில் சில நாள்கள் இளைப்பாறியது போலவும் இருக்கும்!

-செ.கார்த்திகேயன்