Published:Updated:

``முன்பு அமேசான், பிளிப்கார்ட் மாடல்.. இப்ப திருமணம் சீரியல் வில்லி'' - அட்லின்

"வாழ்க்கையில் எது நடந்தாலும், அது ஏதோ நல்லதுக்காகத்தான் நடக்குதுன்னு எதையும் ஈஸியா எடுத்துக்கிற பொண்ணு நான். எப்போதும் ஸ்மைலிங் ஃபேஸ்தான் என் அடையாளம்."

``முன்பு அமேசான், பிளிப்கார்ட் மாடல்.. இப்ப திருமணம் சீரியல் வில்லி'' - அட்லின்
``முன்பு அமேசான், பிளிப்கார்ட் மாடல்.. இப்ப திருமணம் சீரியல் வில்லி'' - அட்லின்

லர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் `திருமணம்' சீரியலில் நெகட்டிவ் ரோலில் மாஸ் காட்டுபவர் அட்லின் கிறிஸ்டீனா. திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர். மாடலிங் மூலம் தன்னுடைய மீடியா என்ட்ரியைத் தொடங்கி இப்போது `திருமணம் ஆரத்தியாக' மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். "சீரியலில்தான் நான் வில்லி, பட் ரியல் ஃலைப்பில் ரொம்ப ஃப்ரெண்ட்லி'' என மென்மையான குரலில் தன்னுடைய பர்சனல் தகவல்களைப் பகிர்கிறார் அட்லின் கிறிஸ்டீனா.

``வாழ்க்கையில் எது நடந்தாலும் அது ஏதோ நல்லதுக்காகத்தான் நடக்குதுன்னு எதையும் ஈஸியா எடுத்துக்கிற பொண்ணு நான். எப்போதும் சிரிச்ச முகத்தோட இருக்கிறது என் அடையாளம். என் பிரெண்ட்லாம்கூட ``எப்படி நீ வலிக்காத மாதிரியே மெயின்டெயின் பண்ற"னு கிண்டல் பண்ணுவாங்க. அதுதான் என்னுடைய இயல்பான குணம். சீரியல்ல அப்படியே அதுக்கு நேர்மறையான ரோல். ஆரம்பத்தில் சீரியலில் டயலாக் பேசும் போதே, என்னுடைய இயல்பான குணம் என்னை அறியாமலே வெளிப்பட, டெரர் டயலாக்கை ரொம்ப அமைதியா பேசிருவேன். செட்டில் எல்லோரும் சிரிச்சுகிட்டே ``நீ இப்போ ஆர்த்தி, உன்கிட்ட இன்னும் எதிர் பார்க்கிறோம்னு கலாய்ப்பாங்க" ஆனால் இப்போ டேக் சொல்லிட்டா போதும் முறைச்சு பார்க்கும் சீரியஸ் வில்லியாகவே ஆயிருவேன் என்றவர் சீரியல் என்ட்ரி பற்றிப் பகிர்கிறார்.

``சின்ன வயசுலருந்தே அழகியல் சார்ந்த விஷயங்கள் மேல எனக்கு அதீத ஈடுபாடு உண்டு. டான்ஸ், மேக்கப், டிரெஸ் விஷயத்துல ரொம்ப ஈடுபாடு காட்டுவேன். எனக்கு நீளமான முடிங்கிறதுனால புதுசுபுதுசா ஹேர்ஸ்டைல் பண்ணுவேன். ப்ளஸ்டூக்குப் பிறகு ஹேர்ஸ்டைல் பற்றிய கோர்ஸ் முடிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்தது.

`ஆம்பள துணையில்லாத வீடு. மாடலிங்லாம் போனால் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'னு அம்மா பயந்தாங்க. அவளுக்குப் பிடித்ததை பண்ணட்டும்னு அக்கா சப்போர்ட் பண்ணாங்க. அதன் பின் அம்மாகிட்டயும் கிரீன் சிக்னல் கிடைக்க மாடலிங்கில் களமிறங்கிட்டேன். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். டிக் டாக், டப்ஸ்மேஷ் போன்ற ஆப்களிலும் க்யூட்டான ரியாக்‌ஷன்களுடான வீடியோக்கள் வெளியிடுவேன். அதைப் பார்த்த என் ஃப்ரெண்ட் தன் சீரியல் ஆடிஷன் பத்திச் சொன்னாங்க. மாடலிங் டு மீடியா என்றதும் எனக்கே கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால், ஆடிஷனில் நல்லா பர்ஃபார்மென்ஸ் பண்ணினதா சொல்லி என்னை செலக்ட் பண்ணிட்டாங்க.

முதல் நாள் ஷுட்டிங் தொடங்குற வரைக்கும் எனக்காக ரோல் பத்தி எந்த ஐடியாவும் இல்லை. முதல் நாள் ஷூட்டிங்கிலதான் எனக்கு நெகட்டிவ் ரோல்னு சொன்னாங்க. மனசுக்குள் கொஞ்சம் நெருடலாதான் இருந்துச்சு. முதல் வாய்ப்பைத் தவறவிடக் கூடாதுன்னு நடிச்சேன். நெகட்டிவ் ரோல் பண்றேன்னு யார்கிட்டையும் சொல்லல. முதல் எபிசோட்ல என்னை வில்லி ரோலில் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ், எனக்கு கால் பண்ணி `உனக்கு இந்த கேரக்டர் செட் ஆகலை'னு சொன்னாங்க. ஆனாலும் கேரக்டருக்கு ஏத்த எக்ஸ்பிரஷன் மாத்தி பார்த்தேன். அவ்வளவுதான்... சட்டுனு ஹிட்டாகிடுச்சு. அது ஹிட் ஆயிருச்சு. இப்போ வில்லி கிறிஸ்டீனாவுக்கு நிறைய பாராட்டு குவியுது. மாசத்தில் பாதி நாள் சீரியல் ஷுட், பாதி நாள் மாடலிங்னு இப்போ நான் பிஸி. என்னோட சம்பளத்தில் என் அம்மாவைப் மனநிறைவாகப் பார்த்துக்க ஆரம்பிச்சுட்டேன்.'' என்றவர் சீரியலில் தன்னுடைய காஸ்ட்யூம்கள் பற்றி பகிர்கிறார்.

``என்னுடைய ரியல் லைஃபில் எனக்கு வெஸ்டர்ன் டிரெஸ்தான் இஷ்டம். சீரியலிலும் அதையே ஃபாலோ பண்றேன். ஒவ்வொரு எபிசோடுக்கும் யூனிக்கான ஆடைகளைத் தேர்வு செய்து அணிகிறேன். நியான் கலர்ஸ், பேஸ்டல் கலர்ஸ்னு நிறத்தேர்வுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஷுட் இல்லாத நாள்கள்ல ஃபுல்லா ஷாப்பிங்தான்'' என்றவர் கூடிய சீக்கிரம் வெள்ளித்திரையில் என்ட்ரி ஆகவும் போகிறாராம்.