Published:Updated:

`மக்களின் ஆச்சர்யமே என்னுடைய கேரக்டருக்கான வெற்றி!'- வி ஜே ஃபரீனா

சு.சூர்யா கோமதி
`மக்களின் ஆச்சர்யமே என்னுடைய கேரக்டருக்கான வெற்றி!'-  வி ஜே ஃபரீனா
`மக்களின் ஆச்சர்யமே என்னுடைய கேரக்டருக்கான வெற்றி!'- வி ஜே ஃபரீனா

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் 'தறி' சீரியலில், வாய் பேசமுடியாத பெண்ணாகத் தன்னுடைய நடிப்புத் திறமையைக் காட்டி வருகிறார், வி ஜே. ஃபரீனா. வி ஜே டு சீரியல் அனுபவம்குறித்து ஃபரீனாவிடம் பேசினோம்.

``நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்போதே நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. நடிப்பில் ஆர்வம் இல்லாததால் சீரியல் வாய்ப்புகளைத் தவிர்த்துவந்தேன். `தறி' சீரியலின் கதையைக்  கேட்கும்போதே மனசுக்கு ரொம்ப நெருக்கமாக இருந்துச்சு. அதனால்தான் நடிக்க முடிவெடுத்தேன். ரியல் லைஃபில் எப்போது பார்த்தாலும் எதையாவது பேசிக்கிட்டே இருக்கக்கூடிய பொண்ணு நான். ஆனால், சீரியலில் வாய் பேசமுடியாத ரோல் கொடுத்ததும் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்துச்சு. எனக்கு இந்த ரோல் செட் ஆகுமான்னுகூட யோசிச்சேன். ஆனாலும், சவாலாக எடுத்துக்கிட்டேன். கூத்துப்பட்டறை பயிற்சியாளர்களிடம் இருந்து வாய்பேச முடியாத பெண்ணாக நடிப்பதற்குப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

சமயத்தில், ஷூட்டிங்கின்போது என்னை மறந்து டயலாக் பேச ஆரம்பிச்சிருவேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கலாய்ச்சு, "தறி" வாணி'  மோடுக்கு என்னைக் கொண்டுவருவாங்க. இப்போ, சைகை பாஷை பேசும் மாற்றுத்திறனாளிகளின் சின்னச்சின்ன உணர்ச்சிகளையும்  வெளிப்பாடுகளையும்  கவனிச்சு பயிற்சி எடுத்துட்டிருக்கேன். என் கேரக்டருக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுருக்கு. மக்கள் என்னை உண்மையிலேயே வாய் பேச முடியாத பொண்ணுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. போன வாரம் ஷூட்டிங் இல்லாத நேரம் ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து பேசிட்டு இருந்தேன். அப்போ அங்க வந்த மக்கள், " 'அட, வாணிக்கு  நல்லா  பேசவருது'ன்னு " ஆச்சர்யமா பார்க்கிறாங்க. மக்களின் இந்த ஆச்சர்யமே என்னுடைய கேரக்டருக்கான வெற்றியாகத்தான் பார்க்கிறேன். வி ஜே வாக மக்களிடம் எனக்குக் கிடைத்த அன்பைவிட, 'தறி'வாணியாகக் கிடைக்கும் அன்பு பலமடங்கு அதிகமா இருக்கு" என்கிறார்.