Published:Updated:

கார்கி என்னும் நம்பிக்கையின் விதை - படம் தரும் கற்பிதங்களும், உடைக்கும் பொதுப் புத்தி சிந்தனைகளும்!

Gargi | கார்கி
News
Gargi | கார்கி

மீடியாவின் அவசரம், வியாபார நோக்கம், அடுத்தவரின் வாழ்க்கை மீதிருக்கும் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளைப் பற்றியும் திரைப்படம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறது.

Published:Updated:

கார்கி என்னும் நம்பிக்கையின் விதை - படம் தரும் கற்பிதங்களும், உடைக்கும் பொதுப் புத்தி சிந்தனைகளும்!

மீடியாவின் அவசரம், வியாபார நோக்கம், அடுத்தவரின் வாழ்க்கை மீதிருக்கும் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளைப் பற்றியும் திரைப்படம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறது.

Gargi | கார்கி
News
Gargi | கார்கி
மு.கு: இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க 'கார்கி' படம் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் விரிவாகப் பேசும் கட்டுரை. அதை ஸ்பாய்லர்கள் இல்லாமல் செய்ய முடியாது என்பதால், படம் பார்க்காதவர்கள், ஸ்பாய்லர்கள் விரும்பாதவர்கள், இந்தக் கட்டுரையைத் தவிர்த்து விடவும்.
தமிழ்த் திரைப்படங்கள் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களை அதிகம் பேசத் தொடங்கியிருக்கும் காலமிது. அந்த வரிசையில் கார்கி மிகத் தெளிவாக முழுநீளத் திரைப்படமாக #ChildAbuse பற்றிப் பேசியிருக்கிறது.

கார்கி ஒரு பள்ளி ஆசிரியை. திடீரென்று ஒருநாள் அவளது தந்தை ஒரு குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்படுகிறார். இதனால் ஊரில் அவள் குடும்பம் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சமூகத்தின் வெறுப்பிற்கு ஆளாகிறது. சிறுவயதில் கார்கிக்கு அவளது ஆசிரியரால் பாலியல் தொல்லை ஏற்படும்போது கார்கியின் தந்தை அவளைக் காப்பாற்றுவதோடு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயப்படாமல் தைரியமாக இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார். அதிலிருந்து தனது தந்தையின் மீது உயர்வான எண்ணமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறாள் கார்கி.

சாய் பல்லவி
சாய் பல்லவி

இதனால் இப்படிப்பட்ட தந்தையின்மீது அவதூறு ஏற்பட்டதைக் கண்டு கொதித்துப் போகிறாள். தனது தந்தை தவறு செய்திருக்க மாட்டார் என உறுதியாக நம்பும் கார்கி, அதை நிரூபிக்கப் போராடுகிறாள். அவளது போராட்டத்தின் முடிவில் பாதிக்கப்பட்ட குழந்தையே கார்கியின் தந்தையைக் குற்றவாளி என அடையாளம் காட்ட, குற்றம் நிரூபணம் ஆகிறது. தந்தைமீது உள்ள நம்பிக்கையையும், போராட்டத்தையும் உணர்ச்சி ததும்பப் படம் முழுவதும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

குற்றவாளிகள் என்றால் மது அருந்துபவர்களாக, முரடர்களாக, சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்பவர்களாக, இந்த நிறத்தில், இந்த வடிவத்தில், இந்த உடையில் இருப்பார்கள் என்று திரைப்படங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. அதே போல அப்பாவியாக, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்களாக, உடல் வலிமை இல்லாதவர்களாக இருப்பவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்னும் பிம்பமும் நம் சமூகத்தில் இருக்கிறது. அதனால்தான் அவர்களிடம் குழந்தைகளை நம்பி விட்டுச்செல்லும் பழக்கம் இருக்கிறது.

கார்கி இந்தப் பொதுப் புத்தியை உடைத்திருக்கிறது.

கார்கிக்குத் தந்தை மீதுள்ள அன்பும் நம்பிக்கையும் இங்கே சராசரியாக எல்லா பெண்களுக்கும் இருப்பது என்றாலும் அந்த அன்பு தனது தந்தை குற்றவாளியாக இருக்கலாம் என்கிற கோணத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் இடத்திலிருந்து ஒருமுறைகூட அவளைச் சிந்திக்கவிடவில்லை என்பது ஆரம்பத்தில் வருத்தமாக இருந்தாலும் பிறகு அதுதானே இங்கு உண்மை நிலை என்பதும் உறைத்தது.

குற்றம் நடந்த குறிப்பிட்ட நேரத்தில் மது அருந்தியதாக வக்கீலிடம் கார்கியின் தந்தை சொல்லும் காட்சியைப் பார்க்கும்போது பதற்றமாக இருந்தது. ஒருவர் பாலியல் குற்றம் செய்வதற்கு மதுவைக் காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மது அருந்துபவர்கள் எல்லோரும் தவறானவர்கள் அல்ல, அதேபோல் சமூகம் நல்லவர்கள் என்னும் கோட்பாட்டை உருவாக்கி அதில் யாரையெல்லாம் பொருத்தி வைத்திருக்கிறதோ அவர்கள்தான் 'நல்லவர்' இமேஜை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்தக் காரியங்கள் செய்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சமூகமும் திரைப்படங்களும் சீரியல்களும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களில் நாம் ஒருவரைப் பொருத்திக் கொண்டிருக்கும் சமயம் உண்மை குற்றவாளிகள் மிக எளிதாகத் தப்பித்துக் கொண்டும், தொடர் குற்றங்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
Gargi | கார்கி
Gargi | கார்கி

“என் பொண்ணு இப்ப எல்லாம் என்னை அப்பாவா பார்க்கல, ஆம்பளையா பாக்கறா” என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக வரும் சரவணன் சொல்வார். ஒரு குழந்தை பாலியல் குற்றத்திற்குள்ளாகும்போது அதன் வாழ்க்கையில் என்ன ரீதியான மனச்சிக்கல்களுக்கு ஆளாகும் என்பதைப் புரிய வைக்க இந்த வரி போதும். தன் சொந்த தந்தையை 10 வயதுக் குழந்தை ஒரு ஆணாக மட்டுமே பார்க்க முடிகிற அவலம் வாழ்க்கை முழுவதும் மிகக் கொடூரமாக அந்த தந்தையையும் மகளையும் துரத்திக் கொண்டே இருக்கும்.

கார்கி தனது தந்தைக்கு உண்மையானவளாகவும் அவர்மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருப்பவளாகவும் இருக்கிறாள். ஆனால் அவளது தந்தை தன் குற்றத்தை மறைத்து கார்கியிடம் தன்னை ஒரு நிரபராதியைப் போலக் காட்டிக் கொள்கிறார். தன்னுடைய விடுதலைக்காக மகள் போராடும்போது குற்ற உணர்வே இல்லாமல் மனதார ஏற்றுக் கொள்கிறார். இந்த வழக்கில் கார்கி மீண்டும் பாதிக்கப்பட்ட குழந்தையைக் குற்றவாளிகளை அடையாளம் காட்ட அழைத்து வரவில்லை என்றால் கார்கியின் தந்தையும்கூட குற்றமற்றவராக வெளிவந்திருக்கக் கூடும். எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவரால் நிம்மதியாகத் தனது மகள்கள், பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து முடிந்திருக்கவும் கூடும்.

நம்மைச் சுற்றி நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். குடும்பத்தில் பெண்களின் நம்பிக்கையை, உழைப்பைத் தவறாகப் பயன்படுத்துபவர்களாக, மனசாட்சி இல்லாமல் மனைவி மற்றும் மகள்களைச் சுரண்டுபவர்களாக இருக்கிறார்கள். காரணம் ஆணின் மனதில் மிக ஆழமாகப் பெண் என்பவள் அடிமையாக, போகப் பொருளாக, உடைமையாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை மீறி ஒரு ஆணுக்கு மிக அரிதாகத்தான் பெண்ணை சக உயிராகப் பார்க்க முடிகிறது.

கார்கியின் அம்மா அவளை நம்புவதைவிட நேரம் காலத்தை நம்புவதாக கார்கி கோபப்படுவாள். ”நான் மகனாக இருந்திருந்தால் நீ என்னை நம்பி இருப்பாய்தானே” எனக் கேட்கும் காட்சி கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் நடந்துகொண்டிருப்பது. ஆண்டாண்டு காலமாக ஆண்பிள்ளை மட்டுமே வாரிசு எனச் சொல்லி பெண்பிள்ளைகளைத் திருமணத்திற்குப் பிறகு வேற்று ஆளாகப் பாவிக்கும் சமூகத்திற்கு கார்கியின் கேள்வி சாட்டையடி!
Gargi | கார்கி
Gargi | கார்கி

தன் அப்பாவாக இருந்தாலும் சிறுமிக்கு நியாயம் கிடைப்பதற்காக கார்கி போராடுவது திரைப்படத்தில் மட்டுமே நடக்கும் என்றும் கார்கியை நீதி தவறாத பெண்ணாக, மனுநீதிச் சோழனின் மறு உருவமாக இந்தத் திரைப்படம் சித்திரிக்கிறது என்றும் எதிர்மறை விமர்சனங்கள் எழுகின்றன. கார்க்கியும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களில் சிக்கியிருக்கிறாள், அது தொடர்ந்து அவளை 24 வயதுவரை மனதளவில் துரத்திக்கொண்டே இருக்கிறது, தன் தங்கைக்கு அதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள அவளை எப்போதும் கார்கி கண்காணிக்கிறாள், இதன்மூலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் நிலை கார்கிக்குப் புரிந்திருக்கிறது. சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு பெண்ணும் தன் தந்தையே குற்றம் செய்திருந்தாலும் கார்கி எடுத்திருக்கும் முடிவையே எடுப்பாள் என உறுதியாக நம்பலாம்.

குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்கும்போது அது தொடர்பாக 60களில் இருக்கும் பெண்களைக் கேட்டால், அவர்களது பால்யத்தில் கூட்டுக் குடும்பத்தில் வசித்த போதும் கூட பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்ததில்லை என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். உண்மையில் அந்தக் காலத்தில் குடும்பத்திற்குள் இந்தக் குற்றங்கள் நடந்ததே இல்லையா? சமீப ஆண்டுகளாகத்தான் நடக்கின்றன என்றால், நாம் நாகரீகத்தின் பெயரால் எதைத் தொலைத்திருக்கிறோம்? குழந்தை வளர்ப்பில் எதைத் தவறவிடுகிறோம்? இப்படியெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

பாலியல் குற்றங்கள் பற்றிய உரையாடல்களில், “எனக்கும் நடந்தது. ஆனால் நான் தப்பித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம். உண்மையில் தப்பித்துவிட்டோம் என்றாலும் இதுபோன்ற விஷயங்கள் பதற்றமடையச் செய்யும்போதெல்லாம் தப்பித்துவிட்டதை யாருக்காவது அல்லது சுயத்திற்கு பிரகடனப்படுத்துவதன் பின்னால் இருப்பது என்ன? ஐந்து வயது பெண் குழந்தைக்கும் கற்பு இருக்கிறது என்றும் அதைக் கட்டிக் காப்பாற்றுவது அந்தக் குழந்தை மற்றும் அவளது பெற்றோரின் கடமை என்றும் நம் மனதில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவே சிறுவயதில் மற்றவர்கள் நமக்கு தீங்கிழைத்ததைக்கூட நம் குற்றமாக ஏற்றுக்கொண்டு யாருக்காவது நம் கற்பை நிரூபித்துக்கொள்ளப் பிரயத்தனப்படுகிறோம். கற்பு என்பது போலி கோட்பாடு என்கிற பாடத்தைக் குழந்தைகளுக்குப் பள்ளியிலிருந்தே சொல்லிக் கொடுக்கவேண்டும். திரைப்படங்கள் 'கற்பழிப்பு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கார்கி திரைப்படத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வதை அவ்வளவு நீண்டதாக, விளக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது பார்ப்பவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு ஆணுக்கு இவ்வளவு தெளிவாகக் காட்டுவதன் மூலமாகத்தான் அந்த வலியைப் புரியவைக்க முடியும் என்பதே வருத்தத்திற்குரிய விஷயம். ஏனெனில் பெண்களுக்கு இப்படி ஒரு விஷயத்தைக் காதில் கேட்கும்போதே அதன் வலி புரிந்துவிடும். அதேபோல் அந்தக் கொடுமையை, சோகமான இசையோடு நீண்ட காட்சியாக இவ்வளவு ’ரொமான்டிசைஸ்’ செய்திருக்கவும் வேண்டாம்.
Gargi | கார்கி
Gargi | கார்கி

கார்கியை பார்ப்பவர்கள் எல்லாம் கையில் இருக்கும் செல்போனில் அவளுக்கே தெரியாமல் போட்டோ எடுத்துக்கொள்வதும் அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்வதுமாக இருக்கிறார்கள். கையில் செல்போனும் இணையமும் இருப்பதால் அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் இன்னொரு தனிமனிதரின் புகைப்படத்தை அவர்களுக்குத் தெரியாமல் எடுப்பதும், பகிர்வதும் சட்டப்படி குற்றம். ஆனால் இந்தக் குற்றத்தை குற்றமே அல்ல என்பதுபோல மிக இயல்பாக சமூகம் நார்மலைஸ் செய்து கொண்டிருக்கிறது. படத்தில் இதைச் செய்வதும் ஒரு போலீஸ் அதிகாரி என்பது பதறவைக்கும் காட்சி!

மீடியாவின் அவசரம், வியாபார நோக்கம், அடுத்தவரின் வாழ்க்கை மீதிருக்கும் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளைப் பற்றியும் திரைப்படம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறது.

கார்கியின் தந்தையை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்வதை பார்க்கும் சம்பவம் நடந்த குடியிருப்பில் வசிக்கும் பத்திரிக்கையாளர் ஒருவர், கார்கியின் தந்தைதான் குற்றவாளி என்று முடிவுசெய்து அவரின் முகத்தை ஊடக அறமில்லாமல் ப்ளாஷ் நியூஸாக வெளிவரச் செய்கிறார். அதைத் தொடர்ந்து எல்லா ஊடகங்களும் கார்கியின் தந்தையை குற்றவாளி என உறுதியாக பேச ஆரம்பிக்க, அவரை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாகின்றனர். நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது அவரைக் கும்பலாக தாக்குகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும்போது மீடியாக்கள் மீண்டும் மீண்டும் பிரேக்கிங் நியூஸ் எனும் பெயரில் குறிப்பிட்ட செய்திகளைக் காட்டி மக்களை ஒரு பதற்றமான கும்பல் மனநிலைக்கு தள்ளுகின்றன. பிறகு பப்ளிக் சென்டிமென்ட் என்னும் பெயரில் மீடியாவின் செய்திகளை நம்பி பொதுமக்கள் கொடுக்கும் அழுத்தத்திற்குப் பயந்து அரசும் காவல்துறையும் அவசரமாகக் குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் யார் குற்றவாளி என்று முழுவதும் விசாரணை செய்து கண்டுபிடிக்கும் முன்பே யாரோ ஒருவரை குற்றவாளியாக மக்கள் முன் நிறுத்தி உடனடியாக தண்டனை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்படுகிறது.

சாய் பல்லவி
சாய் பல்லவி
இங்கே தவறான ஆட்களைக் கைது செய்வது மட்டுமல்லாமல் பல சமயங்களில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போதே காவல்துறை போலி என்கவுன்ட்டர்களை நடத்தி குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே குற்றவாளியாகக் கருதுபவர்களைக் கொலை செய்கிறது. இதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது மீடியாவின் பணம் சம்பாதிக்கும் வெறியும் பொதுமக்களின் கும்பல் மனநிலையும்தான்.

2010ல் கோவையில் 10 வயது சிறுமியும் அவளது 7 வயது சகோதரனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது, 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஹைதராபாத் காவல்துறை குற்றவாளிகளாகக் கருதப்பட்ட நான்கு பேரை உடனடியாக என்கவுன்ட்டர் செய்து கொன்றது, நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டபோது ராம்குமார் என்பவரை காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்த பிறகு அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது எனக் குற்றவாளிகளை உடனடியாகக் கொல்ல வேண்டும் எனப் பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தினால் நடந்த மரணங்கள் ஏராளம்.

இதில் ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருந்தது. சமீபத்தில் வெளியான இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி ஹைதராபாத்தில் நடந்தது போலி என்கவுன்ட்டர் என்றும் அது திட்டமிட்ட கொலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் என்கவுன்ட்டர் செய்த பத்து காவலர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

”இதுவே உங்க வீட்ல, உங்கப்பாவுக்கு நடந்திருந்தால் என்ன செய்வீங்க?” என்கிற கேள்வியைப் படம் முழுவதும் கார்கி முன் வைத்துக்கொண்டே இருக்கிறாள். உணர்ச்சிவசப்பட்டு அவசரமாகக் குற்றவாளிகளைக் கொல்லவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் பொதுச்சமூகம் தன்னுடைய குடும்ப உறுப்பினர் யாராவது இதைச் செய்திருந்தால் என்ன செய்வோம் என யோசிக்க வேண்டும் என்பதைப் படம் ஆணித்தரமாக முன்வைக்கிறது.

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாலியல் பலாத்காரங்கள் நிகழும்போது ஒட்டுமொத்த சமூகமும் குற்றவுணர்ச்சி கொள்கிறது. யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்கி அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதன் மூலம், தனக்கு இந்தக் குற்றத்தில் பங்கு இல்லை என உறுதி செய்துகொண்டால் மட்டுமே மனிதமனம் ஆசுவாசமடைகிறது.
Gargi | கார்கி
Gargi | கார்கி

அவசரமாகக் குற்றவாளி என ஒருவரை அடையாளம் காட்டி அவரைத் தூக்கில் போட்டு அல்லது சுட்டுக்கொன்றபின் இந்தச் சமூகத்தில் இனி தவறுகளே நடக்காது என எண்ணுகின்றனர். இவ்வளவு விசாரணை குற்றவாளிகள் இறந்தபின்னும் சமூகத்தில் குற்றங்கள் குறையாமல் இருப்பதற்குக் காரணம் முறையான விசாரணை நடக்கும்வரை காத்திருக்க இங்கு யாருக்கும் நேரமோ, பொறுமையோ இல்லை. (குறிப்பு: காவல்துறை, அரசு மற்றும் நீதித்துறையின் மீது தவறே இல்லை என்பதுபோல இதைப் புரிந்துகொள்ள வேண்டாம். பொதுமக்களின் பொறுப்பைப் புரியவைப்பதற்காக மறுபக்கம் நின்று பேசப்பட்டிருக்கிறது)

இந்தியக் குடும்ப அமைப்பில் அப்பா என்பவர் குடும்பத் தலைவர். குடும்பத்தில் இருப்பவர்களின் தோல்விகூட அப்பாவின் தோல்வியாகவே கருதப்படும் சமூகத்தில் அப்பா தோற்றுப் போவதை யாரும் விரும்புவதில்லை. தவறு செய்திருந்தாலும் அப்பா வெற்றிபெற வேண்டும் என்பதைவிட இந்த உலகம் குழந்தைகள் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக வாழும் இடமாக இருக்கவேண்டும் என்பதுதான் நாகரீக சமூகத்தின் குறிக்கோளாக இருக்கமுடியும். அந்த வகையில் கார்கியின் முடிவு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

கார்கி என்பவள் தனி ஒருத்தி அல்ல. கார்கி என்பவள் பாதிக்கப்பட்ட சமூகம், கார்கி என்பவள் அன்புச் சுரண்டலுக்கு எதிரான குறியீடு. கார்கி என்பவள் நம்பிக்கையின் விதை. கார்கி என்பவள் என் சகோதரி, என் தோழி மற்றும் நான்.
பி.கு.: எப்பொழுதும் போல் இது பெரும்பான்மையானவர்களைப் பற்றிய கட்டுரையே. #NotAllMen என்னும் நம்பிக்கை இன்னமும் மிச்சம் இருக்கின்றது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.