Published:Updated:

"இவ்வளவு பிற்போக்கு போலித்தனமா?!"- கெளதம் வாசுதேவ் மேனன்களுக்கு ஒரு தாயின் கடிதம்!

பாவக் கதைகள்
News
பாவக் கதைகள்

நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'பாவக் கதைகள்' ஆந்தாலஜியில் வெளியாகியிருக்கும் 'வான்மகள்' பார்த்தேன். கெளதம் மேனன் படம் என்பதாலேயே கூடுதல் ஆர்வம்.

மனைவி, மகன், இரு மகள்கள் என மதுரையில் வாழும் மத்திய வர்க்க குடும்பத் தலைவர் சத்யா. அவரின் செல்ல மகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை குடும்பத்தை எவ்விதம் பாதிக்கிறது, அந்த அசம்பாவிதத்தை அந்தக் குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி அதைக் கடந்து வந்தார்கள் என்ற கருவை மையப்படுத்தியப் படம். நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன்.

பாவக் கதைகள்
பாவக் கதைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அவிய்ங்க என்ன சொல்வாய்ங்க, இவிங்க என்ன நினைப்பாய்ங்க, உங்க அக்கா என்ன சொல்லுவாய்ங்களோ?” என உறவு மற்றும் நட்பு வட்டத்தின் குரல்களுக்குப் பயந்து தன் மனதின் குரலை ஒடுக்கும் பல நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களின் பிரதிநிதி மதியாக சிம்ரன் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் முற்போக்கு சிந்தனைக்கொண்ட பெண் போல காட்சியளிக்கும் சிம்ரன், அதன்பின் செய்யும் அத்தனையும் பிற்போக்குப் போலித்தனங்கள். பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் நீரைக் கொட்டி அந்தக் காயங்களை மீண்டும் மீண்டும் அழுந்தத் தேய்த்து தலையில் அடித்தழும் காட்சியில், மதியின் மூலமாக இயக்குநர் கெளதம் என்ன சொல்ல வருகிறார்?!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுவாகவே இதுபோன்ற பாலியல் குற்றங்கள் அரங்கேறும்போது அதில் ஈடுபட்ட குற்றவாளியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ண ஓட்டமே பொதுமக்களின் மத்தியில் பிரதானமாக இருக்கும். பெண்களை/சிறுமிகளை வன்புணர்வு செய்த பல வழக்குகளில் பொதுவெளியின் அழுத்தத்தின் காரணமாக, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்கவுன்ட்டர் செய்யப்படுவதை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் மக்களையும் நாம் பார்த்திருக்கிறோம். பொதுபுத்தியைத்தான் கெளதம் தன் சினிமாவிலும் பிரதிபலிக்க வேண்டுமா?!

பிரச்னை நடந்து மூன்று வாரம் ஆனப் பிறகும் போலீஸ் வேண்டாம் என்கிறார் சிம்ரன். கௌதமோ அவளை ஸ்கூலுக்கு அனுப்பலாம் என்கிறார். போலீஸும் பள்ளியும் வேண்டாம்... ஆனால் அந்தக் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் தேவை என்பதை உணராத அளவுக்கு முட்டாள் பெற்றோர்களா சிம்ரனும், கெளதமும்?!

பாவக் கதைகள்
பாவக் கதைகள்
வெளியுலகு பழகிய தன் உடல் சார்ந்த பிரச்னைகளின் அடிப்படைப் புரிந்துணர்வு உள்ள 20 வயது பெண்களே இது போன்ற ஒரு சம்பவத்தைக் கடந்து வெளியேறுவதற்கு மனதிற்குள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். ஆனால், சிறுமியின் உளவியல் சிக்கலை பற்றி இம்மியளவும் தந்தையோ, தாயோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை... ஏன்?!

மனைவியின் வார்த்தைக்காக காரின் சீட் கவரையும், மகளின் வார்த்தைக்காக தாடியையும் எடுக்க மறுக்கும், எல்லோரின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் கௌதம், பாதிக்கப்பட்ட குழந்தையிடம் பேசவே தயங்குகிறார். அதைக் கேள்வி கேட்கும் சிம்ரனிடம், “என் 12 வயசு பொண்ணு… இதனால... இவிங்களால பெரிய மனுஷி ஆகிட்டா... அவ என்ன எல்லாம் பார்த்திருப்பா... எப்படி எல்லாம் உணர்ந்திருப்பா… அதை நெனச்சாலே ஒரு ஆம்பளையா அவ முன்னாடி என்னால நிக்கமுடியல” என உளறிக்கொட்டுகிறார். கூடவே தலையிலும் அடித்துக்கொள்கிறார். இது போதாதென்று சிம்ரனும், “ஆமா... நாம அவளை கட்டிக்காக்கத் தவறிட்டோம்” என்கிறார். கெளதம் எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரைக்கதையில் இத்தனை பிரச்னைகளை வைத்துக்கொண்டு கிளைமாக்ஸில், “எல்லாத்தையும் கடந்து முன்னேறி போ” என்று கௌதமும், “நீ போ பொன்னுத்தாயி” என சிம்ரனும் பேசும் வசனங்களைப் பார்க்கும்போது கோபம்தான் வருகிறது.

'வான்மகள்' போன்றே கருவுடைய சிறுகதை ஒன்றை ஆனந்த விகடனில் ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார். அதில் வந்த அம்மா கதாபாத்திரமும் இப்படித்தான் இருக்கும். மகளுக்கு நடந்ததை அறிந்த உடன் அவளை அடிப்பாள், புலம்புவாள், கத்துவாள், திட்டுவாள், தண்ணீரை மொண்டு தலையில் கொட்டுவாள். சீயக்காய் போட்டு அழுந்த தேய்த்து அழுத்திக் குளிப்பாட்டுவாள்.

பாவக் கதைகள்
பாவக் கதைகள்

ஆனால் அதே அம்மா இப்படியும் பேசுவாள். “நீ பளிங்குடி, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. தெருவிலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காக காலையா வெட்டிப் போட்டுடறோம்? எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும். கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு... உனக்கு ஒண்ணுமே நடக்கல...'' என்று அந்த கதை போகும். ஆனால், கெளதம் படத்தில் பேசியிருக்க வேண்டிய தருணத்தில் பொறுப்பான பெற்றோராக எதுவுமே பேசாமல், கடைசி காட்சியில் வீர வசனம் பேசுவது நிமிர்ந்து நின்றிருக்க வேண்டிய 'வான் மகளை' வேரோடு வீழ்த்துகிறது.

கௌதம் கையில் எடுத்த கதை உரக்கச் சொல்லப்பட வேண்டிய கதை. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் இக்கால கட்டத்தில் படத்தின் பேசு பொருளை வரவேற்பது மிக முக்கியம். ஆனால் அதை உணர்ச்சிமிகு திரைமொழியாக்க அவர் சேர்த்த விஷயங்கள் அபத்தத்தின் உச்சம்.

இவ்வளவு பிற்போக்கு சிந்தனையா... உங்ககிட்ட இதை எதிர்ப்பார்க்கலை கெளதம்!