லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்... இது போதும் எனக்கு! - சாதனை யூடியூபர் லிஸிக்யூ

மூங்கில் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மூங்கில் தோட்டம்

கிராமத்துக்கு வந்த பிறகுதான் நான் உண்மையாகவே வாழ்கிறேன்.

“வெற்றி என்பது மிகவும் கனமான வார்த்தை. நான் என் வாழ்க்கையைப் படமாக்குகிறேன். அவ்வளவுதான்!” என்கிறார் சீனாவைச் சேர்ந்த கின்னஸ் சாதனை படைத்த 30 வயது யூடியூபர் லிஸிக்யூ. சீன நாட்டு வாழ்க்கைமுறை மற்றும் சீன உணவுகளுக் கான வலைப்பதிவர், தொழில்முனைவோர், இணைய பிரபலம் எனப் பல முகங்கள் இவருக்கு.

2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது (Liziqi) சேனலுக்கு 14.10 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ். அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சீன மொழி யூடியூப் சேனல் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர். லிஸிக்யூ குழந்தையாக இருந்தபோதே கருத்து வேறுபாட்டால் பெற்றோர் பிரிந்துவிட, அப்பாவிடம் வளர்ந்தார். 6 வயதில் அப்பா வையும் இழக்கிறார். அப்பாவின் இரண்டாம் மனைவி மோசமாக நடத்துவதை அறிந்த பாட்டியும் தாத்தாவும் லிஸிக்யூவைத் தங்களது கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். 5-ம் வகுப்பு படித்தபோது தாத்தாவும் உயிரிழக்கிறார்.

மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்... இது போதும் எனக்கு! - சாதனை யூடியூபர் லிஸிக்யூ

14 வயதில் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு பிழைப்புக்காக நகர்ப்புறத்துக்குச் செல்கிறார். குறைந்த சம்பளத்தில் ஹோட்டலில் வெயிட்டர் பணி. டி.ஜே கலையைக் கற்று, மது பாரிலும் பணியாற்றினார். திடீரென பாட்டி தீவிர நோயால் பாதிக்கப்பட வேலையை விட்டுவிட்டு கிராமத்துக்கே திரும்பினார். உறவினர் ஒருவர் கிடார் வாசிக்கும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட, அந்த உந்துதலில் லிஸிக்யூவும் வீடியோ பதிவிட முடிவு செய்கிறார்.

திராட்சைப்பழச் சாற்றை சாயமாகப் பயன்படுத்தி ஊதா நிறத்தில் ஓர் ஆடை தயாரிக்கும் அவரின் முதல் வீடியோவே அதிரி புதிரி ஹிட். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து வீடியோ வெளியிடுகிறார். வீடியோ வெளியான சில நிமிடங்களில் ஒரு மில்லியன் வியூஸை அசால்ட்டாக அள்ளும். தெற்கு ஆசிய நாடுகளில் லைஃப்ஸ்டைல் வீடியோக்களை வெளியிடும் பெண்களில் பலருக்கு லிஸிக்யூ தான் ரோல் மாடல்.

மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்... இது போதும் எனக்கு! - சாதனை யூடியூபர் லிஸிக்யூ

இலவசம்பஞ்சைப் பறித்து மெத்தை தயாரிப்பார், செம்மறி ஆட்டின் ரோமங்களைக் கத்தரித்து கம்பளி ஆடைகளை உருவாக்குவார், காட்டுக்குச் சென்று மூங்கிலை வெட்டி வந்து ஃபர்னிச்சராக மாற்றுவார், வெட்டிய மரத்துண்டை அறுத்து அழகிய ஊஞ்சலாக மாற்றுவார். செடியோ, தானியமோ, மரமோ எதுவாக இருந்தாலும் அதை விதைப்பது முதல் அறுவடை வரை, பிறகு விதவிதமாகச் சமைத்து விருந்து படைப்பது என முழுமையான வீடியோவாக வெளியிடுவதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி.

“ஆரம்பத்தில் தனி ஆளாகத்தான் வீடியோவை ஷூட் செய்தேன். அதனால் அந்த வீடியோக்களில் மூவிங் ஷாட்ஸ் இருக்காது. ஒருமுறை நான் வீடியோக்களை எப்படி ஷூட் செய்கிறேன் என்று ஒரு வீடியோ போட்டேன். அதைப் பார்த்த நெட்டிசன்கள், ‘எப்படி கடினமாக உழைக்கிறேன் பாருங்கள் என்று காண்பித்து மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிப்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டீர்களா என்றனர்' என்பவருக்கு தற்போது ஒரு வீடியோகிராபரும் உதவியாளரும் இருக்கிறார்கள்.

மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்... இது போதும் எனக்கு! - சாதனை யூடியூபர் லிஸிக்யூ

“ஒரு டீச்சரிடம் அவரின் வகுப்பு மாணவர்கள், அரிசி, மரத்தில் விளைகிறது என்றார்களாம். நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு உணவு எங்கிருந்து வருகிறது என்பதை உணர்த்துவதற்காகவே விதைப்பது தொடங்கி அறுவடை செய்து அதன் மூலம் உணவு தயாரிப்பது வரை வீடியோவாக்குகிறேன்” எனும் லிஸிக்யூ வசிப்பது தென்மேற்கு சீனாவில் பாரம்பர்ய சிறிய வீடும் தோட்டமும் அமைந்துள்ள பகுதியில். நம் வீட்டுத் தோட்டத்தில் கறிவேப்பிலையைப் பறித்து வருவதுபோல ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சைப் பழம், ஸ்ட்ராபெர்ரி என அனைத்தையும் பறித்துச் சென்று சமைப்பார். அவர் வீட்டைச் சுற்றி பயிரிடப்படாத காய்கறி, பழங்கள், மூலிகைகளே கிடையாது. கால்நடைகளையும் வளர்க்கிறார்.

“கிராமத்துக்கு வந்த பிறகுதான் நான் உண்மையாகவே வாழ்கிறேன். அதை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” என்கிறார் ஆத்மார்த்தமாக.

என்ஜாய் எஞ்சாமி!