``ஜெயலலிதாவுடன் போட்டோ... கலங்க வைத்த `படாபட்' ஜெயலட்சுமியின் இறப்பு!" - நடிகை அம்பிகா
தமிழ் மக்கள்தான் எனக்கு அளவுகடந்த அன்பையும் ஆதரவையும் கொடுத்தாங்க. எனவே, தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவேன்.
நடிகை அம்பிகா, அரசியல் மற்றும் சினிமா குறித்த தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.
``என் பூர்வீகம், கேரளா. அங்க எங்கம்மா காங்கிரஸ் கட்சியில் இருந்தாங்க. வீட்டில் எங்கம்மா அரசியல் பத்தி துளிகூட பேசமாட்டாங்க. நானும் என் தங்கை ராதாவும், சினிமா பத்தி எங்க வீட்டில் பேச மாட்டோம்.
அரசியலில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பெண் தலைவர்கள், ஜெயலலிதா அம்மா மற்றும் இந்திரா காந்தி அம்மா. நான் பிஸியா நடிச்சிட்டிருந்தப்போ இந்திரா காந்தி அம்மாவைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைச்சும் என்னால போக முடியலை. ஜெயலலிதா அம்மாவுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்துச்சு.
அவங்களை ஒருமுறை சந்திச்சப்போ, `மத்தவங்களைப்போல தள்ளி நின்னு உங்களோடு போட்டோ எடுத்துக்க எனக்கு விருப்பமில்லை. உங்க பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கணும்'னு கேட்டேன். சரினு சிரிச்சாங்க. அவங்க கையை இறுக்கமா பிடிச்சு பக்கத்துல நின்னு அவங்ககூட போட்டோ எடுத்துகிட்டேன்.
ஆண்டிபட்டி தொகுதியில ஜெயலலிதா அம்மா போட்டியிட்டப்போ, அவங்களுக்கு ஆதரவா பிரசாரம் செய்யச் சொல்லி என்னையும் என் தங்கை ராதாவையும் கேட்டாங்க. அவங்க மேல இருந்த அன்பினால் நானும் ராதாவும் பிரசாரம் செய்தோம். ஜெயலலிதா அம்மா சொன்னதுபோல அந்தத் தொகுதியில் எல்லா இடங்களுக்கும் போய் பிரசாரம் செய்தோம். நாங்க ரொம்ப இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு வேலை செய்த தேர்தல் பணி அது.
`சினிமாக்காரங்க எதுக்கு அரசியலுக்கு வர்றாங்க?'னு பலரும் கேட்கிறாங்க. `சினிமாக்காரங்க ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?' என்பதுதான் என் வாதம்.நடிகை அம்பிகா
நான் நாலு மொழிகளில் நடிச்சிருந்தாலும், தமிழ் மக்கள்தான் எனக்கு அளவுகடந்த அன்பையும் ஆதரவையும் கொடுத்தாங்க. எனவே, தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவேன். `சினிமாக்காரங்க எதுக்கு அரசியலுக்கு வர்றாங்க?'னு பலரும் கேட்கிறாங்க. `சினிமாக்காரங்க ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?' என்பதுதான் என் வாதம்.
எம்.ஜி.ஆர் ஐயா, கலைஞர் ஐயா, ஜெயலலிதா அம்மானு சினிமா துறையிலிருந்து வந்த அரசியல் தலைவர்களை மக்கள் ஏத்துக்கலையா? சினிமாக்காரங்களுக்கு சினிமாவைத் தவிர, சமூக விஷயங்கள் குறித்தும் தெரியும். அரசியலுக்கு வர விரும்பும் சினிமா பிரபலங்களை முன்கூட்டியே தடுக்காதீங்க.
அரசியலுக்கு வந்த பிறகு அவங்களோட செயல்பாடுகளைப் பார்த்துட்டு அப்புறம் விமர்சனம் செய்ங்க. அதுதான் சரியா இருக்கும். நான் நடிக்க வந்தப்போ தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரின் கட்சி ஆட்சியைப் பிடிச்சுது. இப்போ என் நிலைப்பாட்டைச் சொல்ல விரும்பலை. ஆனா, விரைவில் நான் அரசியலுக்கு வரும்போது என் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரியும்" என்கிற அம்பிகா, சினிமா சார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்.
``தமிழ் சினிமாவில் நடிக்க ரயில் பயணமாகத் தமிழகம் வந்துகிட்டு இருந்தேன். அப்போதான் முதன்முதலாக கே.பி.சுந்தராம்பாள் அம்மாவைச் சந்தித்துப் பேசினேன். சென்னைக்கு வந்ததும் நான் முதலில் சந்திச்சது, எம்.ஜி.ஆர் ஐயாவின் அண்ணன் சக்கரபாணி சாரை. திரையுலகில் நான் முதலில் சென்ற துக்க காரியம், `படாபட்’ ஜெயலட்சுமியின் இறப்பு. என்னை மிகவும் கலங்க வைத்த நிகழ்வுகளில் ஜெயலட்சுமியின் மரணமும் ஒன்று.
ஓவர் அன்பு உடம்புக்கு ஆகாதுனு சொல்வாங்க. அதுக்கு ஓர் உதாரணம் சொல்றேன். நான் ஹீரோயினா நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். நான் திரும்பி வர முடியாத அளவுக்கு என்னைச் சுத்தி எக்கச்சக்க ரசிகர்கள் கூடியிருந்தாங்க. திடீர்னு ஒருவர் ஹேர்பின்னால் என் கையைக் கீறிவிட ரத்தம் வந்திடுச்சு. கூட்டத்தில் அவரை என்னால கண்டுபிடிக்க முடியலை. வலியைச் சமாளிச்சுட்டு, பிறகு சிகிச்சை எடுத்துகிட்டேன்.
சமீபத்துல `ஆடை' படம் ரிலீஸாகும் முன்பே, அதில் அமலா பால் ஆடையில்லாம நடிச்சிருக்கிறதா பலவித விமர்சனங்கள் எழுந்துச்சு. நானும் படம் பார்த்தேன். ஒரு படத்தில் நடிக்கிறது, நடிக்காதது எல்லாம் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் விருப்பம்.
அமலா பால் 6 வயசு குழந்தை கிடையாது. அந்தப் படத்தில் நடிக்கும் முன்பே, படம் ரிலீஸாகி எப்படியெல்லாம் பேச்சு வரும்னு யோசிச்சுதான் அவங்க நடிச்சிருப்பாங்க. கதைக்குத் தேவை இருந்ததால்தான் அப்படி நடிச்சிருப்பாங்க.
எனவே, படம் ரிலீஸாகும் முன்பே, பலரும் படத்தைப் பார்க்கும் முன்பே, தனிப்பட்ட கருத்தை யாரும் பிறருக்குத் திணிக்கக் கூடாது. அதனால் ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் சினிமா தொழில், மேற்கொண்டு பாதிக்கப்படும்" என்கிறார் அம்பிகா.