Published:Updated:

``ஒரு ரூபாய்கூட எதிர்பார்க்கலை; என் முதல் படத்தை மட்டுமே பார்த்தார்!" - அப்பா குறித்து நடிகை ரேகா

"வெளியுலகத்துல புகழுடன் இருந்தாலும், சொந்த வீட்டுல என்னவோ பலருக்கும் மரியாதை இருக்காது. அப்படித்தான் எங்க வீட்டுலயும். எங்கப்பா மட்டுமல்ல, என் வீட்டில் ஒருத்தர்கூட என்னை சினிமா பிரபலமா மதிக்கவே மாட்டாங்க."

ரேகா
ரேகா

நடிகை ரேகா, தன் இறப்புக்குப் பிறகான உடல் அடக்கத்துக்கான ஏற்பாடுகளை தற்போதே செய்து வைத்திருக்கிறார். தன் அப்பாவின் மீது கொண்ட அன்பால், அவரது கல்லறையிலேயே தன் உடல் அடக்கத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கான காரணம் மற்றும் அப்பாவின் நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசுகிறார், ரேகா.

Rekha
Rekha

"குன்னூர்ல வளர்ந்தேன். என் சின்ன வயசுல, அந்த ஊரில் நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும். அதைப் பார்க்க நான் ஆசைப்பட்டாலும், எங்கப்பா அனுமதிக்கமாட்டார். இந்நிலையில எனக்கு சினிமா வாய்ப்பு வந்துச்சு. நான் நடிக்கிறதில் எங்கப்பாவுக்கு விருப்பமில்லை. அடம்பிடிச்சு நடிச்ச எனக்கு அம்மா உதவியா இருந்தாங்க.

எங்கப்பாவின் பேச்சை மீறி நான் சினிமாவில் நடிச்சதால, அவர் ஒரு வருஷம் என்கிட்ட பேசவேயில்லை. அதனால, வருத்தப்பட்டேன். என் முதல் படம், `கடலோரக் கவிதைகள்'. அந்தப் படத்தை ஒருமுறை பார்த்த அப்பா, பிறகு என் எந்தப் படத்தையும் பார்க்கலை. என் சினிமா விஷயங்கள் பத்தி ஒருநாள்கூட அவர் என்கிட்ட பேசவேயில்லை. 

Rekha
Rekha

ஒரு வருட கோபத்துக்குப் பிறகு அவர் என்கிட்ட சகஜமா பேசினார். எனக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்தார். என் மகள் மீது அளவுகடந்த அன்பைக் காட்டினார். ஆனா, ஒருநாளும் சினிமா விஷயங்கள் பத்தி அவர் என்கிட்ட பேசியதேயில்லை. அவர்கிட்ட நானும் சகஜமா பேசினாலும், சினிமா விஷயங்களை நானே முன்வந்துபோய் அப்பாகிட்ட பகிர்ந்துக்கலை. அப்போ எந்தக் குற்ற உணர்வும் எனக்கு வரலை.

ஆனா, `நாமளாச்சும் அப்பாகிட்ட போய் சினிமா விஷயங்களை பேசியிருக்கணும். என் படங்களை ஏன் பார்க்கிறதில்லை, நான் தொடர்ந்து நடிக்கிறதில் உங்களுக்கு விருப்பமில்லையா?'னு கேட்டிருக்கணும்னு இப்போ தோணுது. எங்க குடும்பத்தில் யாரும் சினிமாவில் நடிக்கக்கூடாதுனு அவர் உறுதியா இருந்தார்" என்கிற ரேகா, இறப்புக்குப் பிறகான உடல் அடக்கம் குறித்த ஏற்பாடுகளைப் பற்றிப் பகிர்கிறார்.

சினிமா என் கரியரானதில் கடைசிவரை அப்பாவுக்கு விருப்பமில்லை. அவர் விருப்பப்படி நான் நடந்திருந்தால், அப்பாவின் அன்பு எனக்கு இன்னும் அதிகமா கிடைச்சிருக்கும்.
ரேகா

"ஆரோக்கியமா இருந்த எங்கப்பாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போச்சு. 2003-ம் ஆண்டு, வேளாங்கண்ணிக்குப் போயிட்டு வந்தார். பிறகு திடீர்னு இறந்துட்டார். அவர் இருக்கும் வரை அவரோட அருமை எனக்குத் தெரியலை.

எங்கப்பாவின் மறைவு, என் வாழ்க்கையில பெரிய இழப்பு. வாழ்நாளில் யார்கிட்டயும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகினார். என் சம்பாத்தியத்தில் அவர் ஒரு ரூபாய்கூட பயன்படுத்தலை. எங்கப்பா இயக்குநர் மகேந்திரன் சாரைப் போலவே இருப்பார். 

Rekha father's cemetery
Rekha father's cemetery

அப்பா மறைந்த பிறகு, அவருக்குச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கல்லறையை ஏற்படுத்தினேன். அதை முறையா பராமரிச்சுகிட்டு வர்றேன். மாதமானா அந்தக் கல்லறைக்குப்போய் வணங்கிட்டு வருவேன். எங்கப்பாவின் கல்லறை இருக்கும் இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம்னு கேட்டிருக்கேன்.

நான் இறந்த பிறகு, அந்தக் கல்லறையிலதான் என் உடலும் அடக்கம் செய்யப்படும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவெச்சிருக்கேன். பொதுவா, நம்ம வாழ்க்கையில இறப்பு எப்ப வேணா வரும். ஆனா, நான் இறந்த பிறகு, என் ஆசை நிச்சயம் நிறைவேறும்.

Rekha
Rekha

சினிமா என் கரியரானதில் கடைசிவரை அப்பாவுக்கு விருப்பமில்லை. அவர் விருப்பப்படி நான் நடந்திருந்தால், அப்பாவின் அன்பு எனக்கு இன்னும் அதிகமா கிடைச்சிருக்கும். ஆனா, சினிமாவை என்னால விட்டுக்கொடுக்கவே முடியலை.

வெளியுலகத்துல புகழுடன் இருந்தாலும், சொந்த வீட்டுல என்னவோ பலருக்கும் மரியாதை இருக்காது. அப்படித்தான் எங்க வீட்டுலயும். எங்கப்பா மட்டுமல்ல, என் வீட்டில் ஒருத்தர்கூட என்னை சினிமா பிரபலமா மதிக்கவே மாட்டாங்க. ஆனா, மனைவியா, அம்மாவா என்மேல அதிக அன்பு காட்டுவாங்க.

Rekha
Rekha

நூறு படங்களுக்கு மேல, நடிச்சிருந்தாலும் இதுவரை சினிமா பயணத்துல துளிகூட திருப்தி கிடைக்கலை" என்கிறார், ரேகா.