Published:Updated:

``என் தனிப்பட்ட இழப்புகளின் பிரதிபலிப்புதான் அந்த அழுகை!" - `சூரரைப்போற்று' ஊர்வசி

ஊர்வசி

"அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்ல என் மகனா சூர்யா நடிக்க இருந்த கேமியோ ரோல்ல மாதவன் நடிச்சார். அந்த வாய்ப்பு அமையாம போனதாலதான், இந்தப் படத்துல நாங்க அம்மா-புள்ளையா நடிச்சு, பெரிய வரவேற்பு கிடைச்சிருக்குனு பாசிட்டிவ்வா எடுத்துக்கறேன்."

``என் தனிப்பட்ட இழப்புகளின் பிரதிபலிப்புதான் அந்த அழுகை!" - `சூரரைப்போற்று' ஊர்வசி

"அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்ல என் மகனா சூர்யா நடிக்க இருந்த கேமியோ ரோல்ல மாதவன் நடிச்சார். அந்த வாய்ப்பு அமையாம போனதாலதான், இந்தப் படத்துல நாங்க அம்மா-புள்ளையா நடிச்சு, பெரிய வரவேற்பு கிடைச்சிருக்குனு பாசிட்டிவ்வா எடுத்துக்கறேன்."

Published:Updated:
ஊர்வசி
தீபாவளி பண்டிகையில் மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகி, கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால், கொரோனா இந்த ஆண்டை முழுவதுமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டதால், திரையிடத் தயாராக இருந்த பல படங்கள் வேறு வழியின்றி ஓ.டி.டி தளத்தில் வெளியாகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான `சூரரைப் போற்று’, `மூக்குத்தி அம்மன்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு படங்களிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் ஊர்வசி.
ஊர்வசி / சூரரைப் போற்று
ஊர்வசி / சூரரைப் போற்று

`சூரரைப் போற்று’ படத்தில் கிராமத்துத் தாயாக நெகிழச் செய்பவர், `மூக்குத்தி அம்மன்’ படத்தில் வெகுளித்தனமான தாயாக நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஊர்வசியின் நடிப்புத் திறமைக்குச் சவால்விடும் வகையில் இந்த இரண்டு படங்களும் அமைந்திருக்கின்றன. இதனால், சோஷியல் மீடியாவில் ஊர்வசிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியாகியிருப்பவர், இரண்டு படங்களுக்கும் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கிறார். வாழ்த்துகள் கூறி, ஊர்வசியிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ரெண்டு படங்களையும் பார்த்துட்டேன். என் நடிப்பில் ஏதாச்சும் தவறு இருக்கான்னுதான் அதிகம் கவனிச்சேன். கண்டுபிடிச்ச சில தவறுகளை அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் சரிசெய்துப்பேன். ரெண்டு படத்துலயும் உடன் நடிச்ச எல்லா கலைஞர்களுமே பிரமாதமா நடிச்சிருக்காங்க. ரெண்டு படங்களையும் பார்த்துட்டு, சினிமா நண்பர்கள், உறவினர்கள், மற்ற நண்பர்கள்னு ஏராளமானோர் எனக்கு வாழ்த்துச் சொன்னாங்க. `சூரரைப் போற்று’ல தந்தையின் இறப்புக்குப் பிறகு, சூர்யா பதறியடிச்சு வீட்டுக்கு வரும் காட்சியிலும், `மூக்குத்தி அம்மன்’ல நாலு குழந்தைகளைப் பெத்துகிட்டதுக்கான காரணம் சொல்லி நான் அழும் காட்சி பத்தியும் பலரும் குறிப்பிட்டாங்க.

ஊர்வசி / மூக்குத்தி அம்மன்
ஊர்வசி / மூக்குத்தி அம்மன்

ஒவ்வொருவருக்குமே தனிப்பட்ட இழப்புகள் ஏதாச்சும் இருக்கும். அப்பா, தம்பி, அக்கானு குடும்பத்தில் பலரையும் இழந்தபோது நான் தவிச்ச நினைவுகள்தான், சினிமா காட்சிகள்லயும் எதார்த்தமா பிரதிபலிக்கும். அப்படித்தான் அந்த ரெண்டு காட்சியிலும் எனக்குள் இருந்த சோகங்கள் அழுகையா வெளிப்பட்டுச்சு. `இப்படியான படங்கள் கரியர்ல எப்போதாவதுதான் அமையும். அதனால, என்னோட அடுத்தடுத்த படங்கள்லயும் இப்படியான ரோல்களில் நடிக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது’ன்னுதான் என்னை வாழ்த்தினவங்ககிட்ட சிரிச்சுகிட்டே சொன்னேன்.

ஒருகட்டத்துல சின்ன மாற்றத்துக்காகத் தமிழ் சினிமாவில் காமெடி ரோல்கள்ல நடிக்க ஆசைப்பட்டு அப்படிப்பட்ட கதைகளைத் தேர்வு செஞ்சேன். அதன் பிறகு தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்களே எனக்கு அதிகம் வந்துச்சு. ஆனா, மாறுபட்ட ரோல்களில் நடிச்சு என் நடிப்புத் திறனை நிரூபிக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு அரிதாகவே கிடைக்குது. பசி அறிந்து ஒருவருக்கு வயிறார சோறு போடுவதுபோல, என் ஆர்வத்துக்கு ஏற்ற கேரக்டரா `சூரரைப் போற்று’ அமைஞ்சது. இது ஒரு பெண் இயக்குநரால் சாத்தியமாகியிருப்பதில் கூடுதல் சந்தோஷம். சில கதைகளைக் கேட்கும்போதே அந்த கேரக்டர் நம்ம மனசுல ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திடும். அப்படித்தான், இயக்குநர் சுதா என்கிட்ட கதை சொல்லும்போதே ஒருவித நிறைவு ஏற்பட்டுச்சு.

ஊர்வசி
ஊர்வசி

மலையாளப் படங்களில் முழுக் கதையையும் கேட்பதுடன், ஸ்கிரிப்டையும் முன்கூட்டியே வாங்கிப்பேன். தமிழில் கதை மட்டும் கேட்டுட்டு, கதைச் சூழலைக் கேட்டு என் கேரக்டருக்கு ஏற்ப ஸ்பாட்ல டயலாக் டெலிவரி பண்ணிடுவேன். ஆனா, `சூரரைப் போற்று’ படத்தில் முழு ஸ்கிரிப்டையும் சுதா முன்கூட்டியே எனக்குக் கொடுத்துட்டாங்க. மேலும், `நீங்க மலையாளப் படங்களில் நடிப்பதுபோல, ரொம்ப நேச்சுரலா இந்தப் படத்தில் நடிக்கணும். அந்தத் தாயின் எமோஷன்ஸ் உங்ககிட்டதான் கிடைக்கும்’னு சொன்னாங்க. சூர்யாவின் தயாரிப்பில் `மகளிர் மட்டும்’ படத்துல நடிச்சபோதே எங்களுக்குள் நல்ல நட்பு இருந்துச்சு. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்ல என் மகனா சூர்யா நடிக்க இருந்த கேமியோ ரோல்ல மாதவன் நடிச்சார்.

அந்த வாய்ப்பு அமையாம போனதாலதான், இந்தப் படத்துல நாங்க அம்மா-புள்ளையா நடிச்சு, பெரிய வரவேற்பு கிடைச்சிருக்குனு பாசிட்டிவ்வா எடுத்துக்கிறேன். `சூரரைப் போற்று’ படத்துல பல்வேறு வயது காலகட்டத்துக்கான தோற்றத்துக்காக உடற்பயிற்சி, டயட்னு சூர்யா ரொம்பவே மெனக்கெட்டார். வெள்ளரிக்காய், முட்டை வெள்ளைக்கரு மட்டும்தான் அவருடைய பல நாள்கள் உணவு. கொஞ்ச நேரம் ஓய்வு கிடைச்சாலும் உடற்பயிற்சி செய்துட்டே இருப்பார். ரொம்பவே அர்ப்பணிப்புள்ள சூர்யாவுடன் இணைஞ்சு நடிச்சதில் சந்தோஷம். `காலையில் இருந்து இந்தக் காட்சியை எடுக்கிறோம். அழுகை உட்பட எல்லா உணர்வுகளையும் எல்லா டேக்கிலும் சரியா பண்றீங்களே... உங்க நடிப்புத் திறனை எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க’ன்னு கேட்பார். `நடிக்கிற கேரக்டராவே என்னை முழுவதுமா நினைச்சுப்பேன்’னு சொன்னேன். ரெண்டு பேரும் ஈடுகொடுத்து நடிச்சோம். அது ரசிகர்களுக்குப் பிடிச்சுப்போனதுதான் எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றி.

ஊர்வசி
ஊர்வசி

அப்பாவுக்கும் மகனுக்கும் இணைப்புப் பாலமா, அந்தத் திடமான அம்மா ரோல் எனக்கு விவரிக்க முடியாத திருப்தியைக் கொடுத்திருக்கு. இது என் கரியரில் முக்கியமான படமா அமைஞ்சதுல பெரிய மகிழ்ச்சி. எல்லாக் கலைஞர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து சரியான திட்டமிடலுடன், இந்த டாகுமென்ட்ரி படத்தை இவ்வளவு நேர்த்தியா சுதா இயக்கியிருக்காங்க. அவங்கதான் படத்தை எடுத்தாங்கன்னு தெரியாம, முழு படத்தையும் பார்த்தவங்க நிச்சயம் இந்தப் படத்தை நீண்டகால அனுபவம் கொண்ட ஆண் இயக்குநர்தான் எடுத்திருப்பார்ன்னு நினைப்பாங்க. சுதா இன்னும் நிறைய உச்சங்கள் தொடணும். அவங்களுக்கு ராயல் சல்யூட்” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், `மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

`` `சூரரைப் போற்று’ பட வேலைகளை முடிச்சுக் கொடுத்துட்டு, `மூக்குத்தி அம்மன்’ல நடிச்சேன். இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள்ல வரும் முக்கியமான ரோல் என்னுடையது. நயன்தாராவும் நானும் இணைஞ்சு நடிக்கும் முதல் படம். இந்தப் படத்துல தாய் ரோல்ல நான்தான் நடிக்கணும்னு அவங்கதான் பிடிவாதமா வலியுறுத்தியிருக்காங்க. சீனியர்ங்கிற மரியாதையுடன் என்மேல ரொம்பவே அன்பு காட்டினாங்க. ஒவ்வொரு வேலையையும் நேர்த்தியுடன் செய்யும் நயன்தாராவின் குணத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அம்மன் படம் என்பதால, மொத்த படக்குழுவும் எல்லா நாளும் சைவ உணவு மட்டுமே சாப்பிட்டோம்.

ஊர்வசி
ஊர்வசி

டயலாக் பேப்பர், ரிகர்சல்னு எதுவும் இல்லை. இயக்குநர்கள் ஆர்.ஜே பாலாஜியும், சரவணனும் ஒவ்வொரு காட்சிக்குமான சூழலை விவரிச்சு, அதுக்கேற்ப நேச்சுரலா டயலாக் பேசி நடிச்சுடுங்கன்னு சொன்னாங்க. எல்லோருமே அப்படித்தான் நடிச்சோம். ஒரு காட்சியில நயன்தாரா எங்களை `டக்’குனு பணக்காரங்களா மாத்திடுவாங்க. அப்போ வாட்ச்மேன்கிட்ட இந்தியில பேசுறது, நாலு குழந்தைகளைப் பெத்ததுக்கான காரணம் சொல்லி அழுற காட்சினு பெரும்பாலான காட்சிகள் ஒரே டேக்ல எடுக்கப்பட்டது. நடிச்சு முடிச்சுட்டு, மொத்த படக்குழுவும் விழுந்து விழுந்து சிரிச்சோம்.

பதற்றம் ஏதுமில்லாம, எல்லோருமே ரொம்பவே ஜாலியா பேசி சிரிச்சு குடும்ப உறவுகள்போல வேலை செஞ்சோம். ரெண்டு படங்களுமே தியேட்டரில் வெளியாகியிருந்தால் மக்கள் இன்னும் கொண்டாடியிருப்பாங்க. ஆனாலும், கால மாற்றத்தால் ஓ.டி.டி-யில் வெளியானாலும் ரெண்டு படங்களுக்கும் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்திருக்கிறாங்க. சம்பளம், புகழ் எல்லாத்தையும் தாண்டி, நடிக்கிற கேரடர் மனசுக்கு திருப்தியைத் தரணும்; மக்கள் எங்க நடிப்பை ஏத்துக்கணும்தான் சினிமா கலைஞர்கள் முதலில் நினைப்போம். அந்த நிறைவை இந்த ரெண்டு படங்களும் எனக்குக் கொடுத்திருக்கு.

ஊர்வசி
ஊர்வசி

1990-களின் மத்தியில் ஓய்வில்லாம வெரைட்டியான நிறைய படங்கள்ல நடிச்சேன். புகழுடன் விருதுகளும் அதிகம் கிடைச்ச காலகட்டம். அதுக்குப் பிறகு, குடும்பப் பொறுப்புகள் கூடினதால செலக்டிவாதான் நடிச்சேன். பல வருஷங்களுக்குப் பிறகு, போன வருஷத்துல இருந்து மீண்டும் ஆக்டிவா பல மொழி சினிமாவிலும் நடிக்கிறேன். இந்த வருஷம் எனக்குக் கிடைச்சிருக்கும் பாராட்டுகளால் ரொம்பவே நிறைவான மகிழ்ச்சி. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்கள் அமைஞ்சா சந்தோஷப்படுவேன்” - உற்சாகத்துடன், தனக்கே உரிய வெகுளியான சிரிப்பால் கவர்கிறார் ஊர்வசி!