Published:Updated:

ஹாலிவுட்டில் அதிகரிக்கும் பெண் இயக்குநர்கள் எண்ணிக்கை... இங்கேயும் சாத்தியமா? #CelluloidCeiling

பெண்களை மையமாக வைத்த கதைகளை மட்டுமல்லாமல் ஆண்களை மையமாக வைத்த கதைகளையும் பெண் இயக்குநர்கள் இயக்க வேண்டும்

“ஒரு காலத்தில் பெண்களையோ, சிறுபான்மையினத்தைச் சார்ந்தவரையோ மையமாகக் கொண்ட படங்களை வெளியிட முடியும் என்று பெரிய ஸ்டூடியோக்கள் நம்பவில்லை. அந்த காலம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. காரணம், அது சென்ற வருடம்” இப்படியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் தனது மோனோலோகைத் தொடங்கினார் ஜிம்மி கிம்மல்.

Jimmy Kimmel
Jimmy Kimmel
AP

2017 ஆம் ஆண்டு மீடூ, டைம்ஸ் அப் மாதிரியான இயக்கங்களின் மூலம் வேலை இடங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மிகப்பெரிய பிரசாரம் ஹாலிவுட்டில் தொடங்கி, உலகம் முழுக்க எதிரொலிக்கத் தொடங்கியது. உடன், பெண்களுக்கான சம ஊதியம் மற்றும் பெண்களுடைய பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துதலும் கூடுதல் பிரச்னைகளாக கவனம் பெற்றன. இவை ஹாலிவுட், சினிமாத்துறையையும் கடந்து பல்வேறு துறைகளிலும் எதிரொலித்திருத்தன. ஹாலிவுட்டும் பெண்களுக்கு ஆதரவாக அரசியல் காலநிலை, பொதுப்புத்தி மாறுவதை கருத்தில்கொண்டு தானும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை நடத்தத் தொடங்கியது. இன்றைக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து, 2020 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான டாப் 250 படங்களில் 18% படங்களுடைய இயக்குநர்கள் பெண்கள்.

சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் ஈடுபடும் பெண்கள் பற்றி ஆய்வு மையம் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக வெளியிடும் செல்லுலாய்ட் சீலிங் (Celluloid Ceiling) இன் 2020 ஆம் ஆண்டுக்கான ஆய்வு வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் தான் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது 2019 ஆம் ஆண்டை (13%) விட 5% உம், 2018 ஆம் ஆண்டை (8%) விட 10%உம் அதிகம்.

wonder Woman
wonder Woman
WArner Bros

மேலும், டாப் 100 படங்களை இயக்கிய பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டைவிட 4% அதிகரித்து 16% ஆகியிருக்கிறது. டாப் 100 படங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 8% தான். அதாவது, மூன்று வருடங்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு வெளியாக இருந்து பின்னர் கொரோனா தொற்றால் 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போனதால் மார்வெல் ஸ்டூடியோஸின் தயாரிப்பான Eternals, Black Widow மற்றும் டிசி தயாரிப்பான Wonder Woman 1984 போன்ற பெண் இயக்குநர்களைக் கொண்ட டாப் படங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017 ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களின் தாக்கம் பெரிதாக இல்லாவிட்டாலும், இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளில் பாலிவுட், கோலிவுட், மாலிவுட் என்று எல்லா பிராந்தியங்களிலும் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்களைத் தாண்டியிருக்கின்றன என்பதே பெரும் முன்னேற்றம். குறிப்பாக, பாக்ஸ் ஆஃபிஸை பெண் இயக்குநர்களால் கைப்பற்ற முடியும் என்பதை தொடர்ந்து பேங்களூரூ டேஸ், கல்லி பாய், சூரரைப் போற்று போன்ற படங்களின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் பெண் இயக்குநர்கள். என்னதான் இன்னும் அதிக பட்ஜெட் படங்களை பெண் இயக்குநர்களின் கையில் கொடுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயங்கினாலும் மிக முக்கியமான முதல் படியினை தொடர் முயற்சியினாலும், கடின உழைப்பினாலும் கடந்திருக்கிறார்கள்.

wonder woman
wonder woman
WB
பெண்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய பாதி க்ரெடிட்ஸிற்காக இரண்டு மடங்கு வேலைசெய்ய வேண்டியிருக்கிறது
சுதா கொங்காரா

பெண்கள் அவர்களது துறையில் கவனம் பெறவே ஆண்களை விட இரண்டு மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட வலிமையான சுவர்களை தகர்க்கவே, பெண்களுக்கு இரண்டு ஆண்களின் பலம் தேவைப்படுகிறது என்பது துருதிஷ்டவசமான பெரும் தடைக்கல்.

ஹாலிவுட்டிலும் சரி, இந்திய பிராந்திய மொழிகளிலும் சரி பெண் இயக்குநர்கள் கலைத் திரைப்படங்களை, ராவான திரைப்படங்களை மட்டுமே எடுப்பார்கள் என்ற ஸ்டீரியோடைப்பையும் பெண்கள் அவர்களது வெற்றிகரமான கரியரில் தகர்த்திருக்கிறார்கள். பெரும் ஸ்டூடியோக்களான மார்வெல், டீசி போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை தங்களால் வெற்றிகரமாக இயக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் அதிகரிக்கும் பெண் இயக்குநர்கள் எண்ணிக்கை... இங்கேயும் சாத்தியமா? #CelluloidCeiling

எனினும், அவர்களுக்கு வழங்கப்படும் க்ரெடிட் குறைவாகவே இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு படங்களுக்கான ஆஸ்கர் நாமினேஷனில் ஒரு பெண் இயக்குநர் கூட இடம்பெறவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடந்த இந்த ஆஸ்கர் விருது விழாவில் ஹாலிவுட்டின் ‘ஏ’ லிஸ்ட் ஸ்டார் நடாலி போர்ட்மேன் அந்த வருடம் திரைப்படங்களை இயக்கிய் பெண் இயக்குநர்களின் பேரினை தன்னுடைய கோட்டில் அணிந்து வந்தார். கோல்டன் க்ளோப்ஸ் விருது விழாவிலும் பெண் இயக்குநர்கள் நாமினேட் செய்யப்படவில்லை. விழாவின் தொகுப்பாளர் ரிக்கி ஜெர்வைஸ் இதை அவரது பாணியில் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

செல்லுலாய்ட் சீலிங் ஆய்வு, இயக்குநர்களைத் தாண்டி, திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் கேமராவிற்கு பின்னால் இருக்கும் பல்வேறு துறைகளில் 1998 ஆம் ஆண்டுலிருந்து பெண்களது எண்ணிக்கையில் பெரும் மாற்றமில்லை என்கிறது. ஹாலிவுட்டிலேயே இந்தநிலை தான் என்றால் இங்கு சொல்லவே வேண்டாம்.

Madhumitha
Madhumitha

“சினிமா துறையில் பெண்களுக்கான தடைகள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதனைத் தாண்டி வந்துதான் ஆக வேண்டும். 14 வது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வர வேண்டும்; லிஃப்ட் வேலை செய்யவில்லை என்றால் அதற்காக எனக்கு லிஃப்ட் வேலை செய்யவில்லை என்று புகார் செய்துகொண்டே இருப்பதற்கு பதிலாக படிக்கட்டில் தான் இறங்கி வர வேண்டும். எனக்கும் எங்குமே ஆண்-பெண் வேறுபாடு இல்லாத ஒரு சமமான சமூகமாக நாம் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் நம்மால் முடிந்த அளவுக்கு நம்முடைய முயற்சியினை செய்ய வேண்டும். இன்றைக்கு ஓடிடி தளங்கள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெண்கள் இந்த புதிய தளங்களின் மூலமாக தங்களது திறமையை காட்டமுடிகிறது. மேலும், இவை சினிமா துறையில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. படங்கள் இந்த தளங்களில் வெளியிடப்பட்டால் கிட்டத்தட்ட 190 நாடுகளில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். மாஸ் படங்களானாலும் சரி, ஆர்டிஸ்டிக் படங்களானாலும் சரி; பெண் இயக்குநர்கள் எல்லா வகையான படங்களையும் தங்களால் எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். சினிமா துறை ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்திக்கொண்டே வருகிறது. ஒரு பெண் இயக்குநர் ஒரு படத்தில் வேலை செய்யும்போது அந்த படத்தில் வேலை செய்யும் எல்லோருமே பாதுகாப்பாக உணர்கின்றனர். யார் இயக்குநராக இருந்தாலும் அப்படியான பாதுகாப்பு உணர்வினை தனக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு அவர்களால் கொடுக்க முடிந்தால், திரைத்துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார் வல்லமை தாராயோ, கே.டி போன்ற படங்களின் இயக்குநர் மதுமிதா.

பல நூறு ஆண்டுகளாக ஊறிப்போன ஆணாதிக்கத்தை ஒரே இரவில் மாற்றிவிட முடியாதுதான். எனினும், இப்படியாக கடக்க வேண்டிய தூரம் என்பது நிறைய இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி, தற்போது அடைந்திருக்கும் இந்த மைல்கள் என்பது முக்கியமானது. காலம் காலமாக ஆண்களின் பார்வையில் சொல்லப்பட்ட பெண்களின் கதைகள் பெண்களின் கேமராவினால் பதிவுசெய்வது; இந்த உலகை பெண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்வது என்று நேர்மறையான மாற்றங்கள் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. இவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம்பிக்கைத் தரக்கூடியது. இதை உற்சாகமாக எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் தூரத்தை கடப்போம். இதே தயாரிப்பு நிறுவனங்கள் பெண்களை மையமாக வைத்த கதைகளை மட்டுமல்லாமல் ஆண்களை மையமாக வைத்த கதைகளையும் பெண் இயக்குநர்கள் இயக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு