ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

தனியொருத்தி - 11 - “பெயருக்காக ஒருத்தர் அப்பாவா இருக்கிறதுல அர்த்தமில்லை!”

ஷாலினி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாலினி

உங்களை இழப்பது குறித்து கவலைகொள்ளாத ஒருவருக்காக உங்களை இழக்கத் துணியாதீர்கள்!

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

மீடியா பெண்களின் வாழ்க்கை, கேமராவுக்கு முன் இருப்பதைப் போல கலர்ஃபுல்லாகவும் கலகலப்பாகவும் இருப்பதில்லை நிஜத்தில். சாமானிய பெண்களைவிடவும் அவர்கள் சந்திக்கும் சவால்களும் சங்கடங்களும் மிக அதிகம். என்ன செய்தாலும் ‘பிரேக்கிங் நியூஸி’ல் பெயர் வரும். பர்சனல் வாழ்க்கையோடு, புரொஃபஷனல் வாழ்க்கையும் சேர்ந்து அடிவாங்கும். மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்குவதோ, விட்ட இடத்தைப் பிடிப்பதோ சாத்தியமுமில்லை, சாதாரணமானதுமில்லை.

சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஷாலினி. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மீரா’ சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் ஷாலினியின் வாழ்க்கை, மெகா சீரியல்களை மிஞ்சும் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கிறது.

``எங்கப்பா டிரைவராகவும் அம்மா டெய்லராகவும் வேலை பார்த்திட்டிருந்தாங்க. தங்கச்சி படிச்சிட்டிருந்தா. நான் அப்பதான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு காலேஜ்ல சேர்ந்திருந்த நேரம்... வீட்டுல எனக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சாங்க. என் கனவுகள் வேறயா இருந்தது. அதனால கல்யாணத்துலேருந்து தப்பிக்க, வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு ஃபிரெண்ட் உதவியோட ஹாஸ்டல்ல சேர்ந் தேன். எங்க வீட்ல அப்போ டி.விகூட கிடை யாது. எனக்கும் தங்கச்சிக்கும் சரியான டிரஸ்கூட இருந்ததில்லை. காலேஜ்ல முதல் செமஸ்டருக்கு மேல அம்மாவால பணம் கட்ட முடியலை. அதனால படிப்பையும் விட்டுட்டேன். குடும்ப சூழலை நினைச்சு நான் மீடியாவுக்குள்ள வந்தேன். ‘இப்போ தைக்கு எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வேலைக்குப் போறேன்’னு புரியவெச்சேன்...’’ ஷாலினியின் அறிமுக வார்த்தைகள் வறுமையின் நிறம் உணர்த்துகின்றன. 18 வயதில் தொடங்கிய அவரது ஓட்டத்துக்கு இன்றுவரை ஓய்வில்லை.

தனியொருத்தி - 11 - “பெயருக்காக ஒருத்தர் அப்பாவா இருக்கிறதுல அர்த்தமில்லை!”

``எனக்கு மீடியா வாய்ப்பு வாங்கித் தந்த தோழி மூலமா துபாய்க்கு போனேன். அங்கே பீட்ஸா கடையில வெயிட்டரா, ரிசப் ஷனிஸ்ட்டா, டான்ஸரா... இப்படிப் பல வேலைகள் பார்த்தேன். சில வருஷங்களுக்கு அப்புறம் மறுபடி இந்தியா வந்தேன். மறுபடி படிக்கணும்னு ஆசையா இருந்தது. நான் சம்பாதிச்ச பணத்துல காலையில ஏர் ஹோஸ் டஸ் கோர்ஸும் சாயந்திரம் டிசைனர் கோர் ஸும் படிச்சேன். அப்பதான் மறுபடி வீட்டுல கல்யாணப் பேச்சை எடுத்தாங்க. இந்த முறை நான் மறுப்பு சொல்லலை. மேட்ரிமோனியல்ல பார்த்து பெரியவங்க பண்ணிவெச்ச கல்யாணம்தான். ஆனா, மூணே மாசத் துல அந்த வாழ்க்கை முடிவுக்கு வந் திருச்சு. ரெண்டு பேருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள், நிறைய பிரச்னைகள்... இதைத் தொடர வேணாம்னு முடிவு பண்ணி சட்டப்படி பிரிஞ்சிட்டோம்.

டைவர்ஸுக்கு அப்புறம் விஜய் டி.வியில சீரியல், ஜோடி நம்பர் ஒன், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஷோஸ்னு நேரம் பத்தாம ஓட ஆரம்பிச்சேன். அப்படி ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் போனபோதுதான் என் ரெண்டாவது கணவரை மீட் பண்ணினேன். பேசி னோம், பழகினோம். கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவரும் ஏற்கெனவே கல்யாணமானவர்தான். அவர் இஸ்லாமியர். நானும் அவங்க மதத்துக்கு மாறிட்டா பிரச்னைகள் இருக்காதுன்னு சொன்னார். அவருக் காக மாறினேன். ஜாதகப்படி என் பெயர் நளினி. வீட்டுல ஷாலினினு கூப்பிடுவாங்க. கல்யாணத்துக்குப் பிறகு சாரானு என் பெயரை மாத்தினாங்க. ஆதார் கார்டுலேருந்து அத்தனை ரெக்கார்ட்ஸ்லயும் என் பெயரை மாத்தினேன். முழுமையா புது அடை யாளத்தோட, சந்தோஷமா கல்யாண வாழ்க்கையில அடியெடுத்து வெச்சேன்.

ஆனா, அந்த சந்தோஷமும் ரொம்ப நாள் நிலைக்கலை. என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் நான் கல்யாணமாகி துபாய்ல சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கிறதா நினைச்சிட்டிருந்தாங்க. ஆனா உண்மை யில நான் அங்கே அடி, உதை வாங்கிட்டு கிட்டத்தட்ட ஜெயில் வாழ்க்கை வாழ்ந் திட்டிருந்தேன். வீட்டுக்குள்ளயும் இருக்க முடியாம, போலீஸ் ஸ்டேஷனுக்கும் போக முடியாம, பார்க்கிங்ல படுத்து, எப்படா விடியும்னு காத்திருந்த நாள்கள் பல...’’ ஷாலினியின் நினைவடுக்கினுள் அடி வாங்கிய வடுவும் வலியும் இன்னமும் ஆறாமலிருப்பதை உணர முடிகிறது.

‘அன்பு எதையும் செய்ய வைக்கும்’ என்பதற் கேற்ப தன் அன்பிற்குரியவருக்காக அவர் விரும்பிய எல்லாவற்றையும் செய்யத் துணிந்திருக்கிறார் ஷாலினி என்கிற சாரா.

‘`மீடியா, சோஷியல் மீடியாவுலேருந்து விலகினேன். போன் நம்பரை மாத்தினேன். ‘எங்க வீட்டுப் பொண்ணுங்க உன்னை மாதிரி சிரிக்க மாட்டாங்கன்னு சொல்லவே... அன்னிலேருந்து சிரிப்பையும் மறந்தேன். இப்படி எல்லாத்தையும் மாத்திக்கிட்ட பிறகும் எதுவும் சரியாகலை. ‘இது எனக்கு ரெண்டாவது வாழ்க்கை. இதுவும் சரியா வரலைனா, மீடியா பொண்ணுங்களுக்கு வாழவே தெரியாது’ன்னு பேசுவாங்க, ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்’னு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டேன்.

தனியொருத்தி - 11 - “பெயருக்காக ஒருத்தர் அப்பாவா இருக்கிறதுல அர்த்தமில்லை!”

கல்யாணமாகி ஒன்றரை வருஷத்துல எங்களுக்கு ரியா பிறந்தா . ‘இதுவரை அடிச்ச தெல்லாம் போகட்டும். இனிமே குழந்தை முன்னாடி அடிக்கக் கூடாது’ன்னு சத்தியம் வாங்கியிருந்தேன். ஆனா அதையும் மீறி ரியா முன்னாடியே எனக்கு அடி விழ ஆரம்பிச்சிது. குழந்தை பயந்து அழ ஆரம்பிச்சா. அதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியலை. அத்தனை வருஷங்கள் நான் வாங்கின அடிகளையெல்லாம் சேர்த்துவெச்சு அன்னிக்கு திருப்பிக் கொடுத்தேன். வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னப்ப, நான் மறுத்தேன். என்னையும் அம்மாவையும் பாப்பாவையும் துபாய்லயே விட்டுட்டு, சொந்த ஊருக்குப் போயாச்சு. பெரிய போராட்டத்துக்குப் பிறகு நாங்க மூணு பேரும் இந்தியா வந்தோம். மறுபடி சண்டை, வாக்குவாதம், கைகலப்புனு பிரச்னை பெரு சாச்சு. ரெண்டு தரப்புலயும் போலீஸுக்கு போனோம். ஒருவழியா அந்த கேஸ் முடிஞ்சு,. 2019-ல இருந்து எங்களுக்குள்ள எந்தத் தொடர்பும் இல்லை.

அவன் மேல இருந்த அதீத அன்பாலதான் குழந்தைக்கு அவன் பெயர்ல பாதியை வெச்சேன். என் கையில அவன் பெயரை பச்சை குத்தியிருக்கேன். ஆனா எல்லாம் பொய்யானதும் இனிமே அவன் என் வாழ்க் கையில வேணாம்னு முடிவெடுத்தேன். என் குழந்தைக்காக நான் நல்லா வாழணும்னு முடிவெடுத்தேன். இப்போ நான், அம்மா, ரியானு மூணு பேரும் தனியா இருக்கோம்.

ஸ்கூலுக்குப் போகும்போது மத்த குழந் தைங்க அவங்க அப்பாவோடு வர்றதைப் பார்த்துட்டு ரியா என்கிட்ட கேட்பா. முதல்ல எல்லாம் அப்பா வெளிநாட்டுல இருக்கார்னு சொல்லிட்டிருந்தேன். நடவடிக்கைகள் கொஞ்சமும் மாறலை. பெயருக்காக ஒருத்தர் அப்பாவா இருக்கிறதுல அர்த்தமே இல்லைனு புரிஞ்சதும். அப்படி ஒருத்தர் நம்ம வாழ்க் கையில இல்லனு என் மகள்கிட்ட சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். நாளைக்கு அவ வளர்ந்த தும் என் லைஃப் பத்தி எல்லாம் அவளுக்குத் தெரிய வரும், என்னைப் புரிஞ்சுப்பான்னு காத்திருக்கேன்.

துபாய்லேருந்து இந்தியா வந்ததும் வீட்டுக்குப் பக்கத்துலயே பொட்டிக் வெச்சேன். ஆனா, எங்களுக்குள்ள நடந்த பிரச்னைகளால பொட்டிக்கை சரியா நடத்த முடியாம, மூட வேண்டியதாயிடுச்சு. போன் நம்பரை மாத்தினதுல மீடியா தொடர்பு மொத்தமும் விட்டுப் போயிருந்தது. மறுபடி ஒவ்வொருத்தரையும் கண்டுபிடிச்சு வாய்ப்பு கேட்கறது பெரிய சவாலா இருந்தது. டிப்ரெஷனால நான் பயங்கர ஒல்லியாயிருந் தேன். வாய்ப்பு கிடைக்காததுக்கு அதுவும் ஒரு காரணம். மெள்ள மெள்ள எல்லாத்தையும் சரி பண்ணேன். உடம்பைத் தேத்தினேன். மூணு வருஷ போராட்டத்துக்குப் பிறகு சீரியல் வாய்ப்பு வந்தது. தற்கொலை பண்ணிக்கலாமானு பல முறை யோசிச் சிருக்கேன். ரியா முகமும் அம்மா முகமும் நினைவுக்கு வந்து அவங்களுக்காக வாழச் சொல்லும்...’’ அதுவரை அடக்கிவைத்திருந்த அழுகை வெடித்துக் கொட்டுகிறது ஷாலினிக்கு.

சம்பிரதாயமான எந்தச் சமாதானமும் அவரைத் தேற்றாதென்பதால் அவர் அழுது அடங்கும்வரை காத்திருந்தோம். ஆசுவாச மடைந்தவர் அடுத்து சொன்னது அத்தனை பெண்களுக்குமானது.

``கணவர் அடிக்கிறதை எந்தச் சூழல்லயும் அனுமதிக்காதீங்க. ஒரு அடி வாங்கிப் பழகிட் டீங்கன்னா அது காலம் முழுக்க தொடரும். திடீர்னு ஒருநாள் நீங்க அதை எதிர்த்தீங்கன்னா, ‘அப்பல்லாம் அடிச்சப்போ சும்மா இருந்தே... இப்ப என்ன’ம்பாங்க. பொண்ணா பிறக்கிறது மத்தவங்ககிட்ட அடி வாங்கறதுக்காக இல்லை.

கல்யாணமானதும் உங்க படிப்பு, வேலை, ஆர்வம், தொழில்னு எதையும் கணவருக்காக விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. எப்ப வேணா வாழ்க்கையில என்ன வேணா நடக்கலாம். உண்மையான அன்பும் காதலும் நம்மை அப்படியே ஏத்துக்கும். பெயரையோ, ஊரையோ, மதத்தையோ மாத்தச் சொல்லிக் கேட்காது. எதையும் விட்டுக்கொடுக்கச் சொல்லாது.’’

ஆம்... அன்பு சகலத்தையும் தாங்கும், சகிக்கும்!

- வெற்றிக்கதைகள் தொடரும்...