ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

பாட்டியின் புடவை, கங்கனாவின் ஸ்டைல், ஜெயாம்மா லுக்...

நீத்தா லுல்லா
பிரீமியம் ஸ்டோரி
News
நீத்தா லுல்லா

‘தலைவி’ அனுபவம் பகிரும் காஸ்டியூம் டிசைனர் நீத்தா லுல்லா

இதுவரைக்கும் 380 படங்களுக்கும் மேல வொர்க் பண்ணி யிருக்கேன். ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், ஜூஹி சாவ்லானு அத்தனை பெரிய ஆர்ட்டிஸ்ட் கூடவும் வொர்க் பண்ணியிருக்கேன். ‘ஜோதா அக்பர்’, ‘பானிபட்’, ‘தேவதாஸ்’னு பிரமாண்ட படங்கள்ல நானும் இருந்திருக்கேன். ஆனாலும், ‘தலைவி’ படம் என் கரியர்ல ரொம்ப முக்கியமானது. ரொம்ப சவாலான படமும்கூட. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்னு ரெண்டு ஜாம்பவான்களின் கேரக்டர் களையும் முடிஞ்ச அளவுக்கு ரீகிரியேட் பண்ணியிருக்கேன். படம் பார்க்கும் மக்கள் அவங்களோடு கனெக்ட் ஆனாங்கன்னா அதுதான் என் வேலைக்கான வெற்றி...’’- முதல் பட ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பவர் போல பேசுகிறார் நீத்தா லுல்லா. பாலி வுட்டின் முன்னணி காஸ்டியூம் டிசைனர்.

பாட்டியின் புடவை, கங்கனாவின் ஸ்டைல், ஜெயாம்மா லுக்...

‘`ஹைதராபாத்ல பிறந்து வளர்ந்தேன். படிப்புல பெரிய ஆர்வம் இல்லைன்னாலும் நிறைய புத்தகங்கள் படிப்பேன். எங்கப்பா எனக்கு ஃபேஷன் மேகஸின்ஸ் வாங்கிக் கொடுப்பார். ஃபேஷன்ல எனக்கிருந்த ஆர்வத்துக்கான விதை அங்கிருந்துதான் வந்திருக்கணும். பத்தாவது முடிச்சதும் கல்யாணமாயிடுச்சு. கணவர் ஷ்யாம் லுல்லா, சைக்யாட்ரிஸ்ட். கல்யாணத்துக்குப் பிறகு தான் நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். அப்படியே ஃபேஷன் கொரியோகிராபி பண்ண ஆரம்பிச்சேன். அதுல என் திறமையைப் பார்த்துட்டு ‘தமாச்சா’னு ஒரு படத்துக்கு ஃபேஷன் டிசைனரா வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. அடுத்து நான் பண்ணின ‘சாந்தினி’ படம் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்தது. ஸ்ரீதேவி, ஜூஹி சாவ்லானு அப்போதைய நம்பர் ஒன் ஹீரோயின்களுக்கு டிசைன் பண்ணினேன். முதல் படம் பண்ணினபோது நான் டிசைன் பண்ண டிரஸ் எதுவும் சரியா வரலை. அதுக்கு முன்னாடி சினிமாவுக்கு வொர்க் பண்ணின அனுபவம் இல்லாததால நிறைய சொதப்பினேன். ஆனாலும் அதுக்கப்புறம் நிறைய கத்துக் கிட்டேன். இப்பவரை கத்துக்கிட்டே இருக்கேன்...’’ தன்னடக்கத்துடன் சொல்பவர், நான்கு முறை தேசிய விருது வென்ற ஒரே டிசைனர் என்ற பெருமைக்கும் உரியவர்.

பாட்டியின் புடவை, கங்கனாவின் ஸ்டைல், ஜெயாம்மா லுக்...

‘`நான் வொர்க் பண்ணின முதல் தமிழ்ப்படம் ‘காதலன்’. அடுத்து ‘ஜீன்ஸ்’ படத்துல வொர்க் பண்ணி யிருக்கேன். ‘தலைவி’ படத்துல வொர்க் பண்ண முடியுமானு முதல்ல என்னைக் கேட்டவங்க கங்கனா. அவங்களோடு ஏற்கெனவே ‘மணிகர்ணிகா’ படம் பண்ணி யிருக்கேன். டெக்னீஷியனை 100 சதவிகிதம் நம்பி, தன் கேரக்டரை ஒப்படைக்கிறவங்க அவங்க. எங்களுடைய வொர்க்கிங் ஸ்டைல் ரொம்பவே இணக்கமா இருக்கும். அது மட்டுமல்லாம, ‘தலைவி’ யாரைப் பத்தின கதைன்னு தெரிஞ்சதும் என்னால மறுக்க முடியலை. அரவிந்த் சாமியின் முதல் படத்துலயே நான் அவருக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணி யிருக்கேன். பல வருஷங்கள் கழிச்சு மறுபடி ‘தலைவி’ படத்துல அவர் கூட வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. எம்.ஜி.ஆர் கேரக்டரை அரவிந்த் சாமியும், ஜெயலலிதா கேரக்டரை கங்கனாவும் தாங்கிப்பிடிச்சிருக்கிற விதம் பிரமிக்க வைக்குது...’’ சிலிர்க்கிறார்.

‘`தலைவி படத்துல வொர்க் பண்ணின ஒவ்வொரு நாளும் அந்தக் கதை தொடர்பா நிறைய ரிசர்ச் பண்ணியிருக்கேன். ஜெயாம்மாவோட ஒவ்வொரு பாடலையும் 15 - 16 முறை திரும்ப திரும்ப கேட்டிருக்கேன். ஜெயாம்மாவோட வாழ்க்கையில அஞ்சு காலகட்டங்களை உள்வாங்கி நடிச்சிருக்காங்க கங்கனா.

பாட்டியின் புடவை, கங்கனாவின் ஸ்டைல், ஜெயாம்மா லுக்...

16 வயசு ஜெயலலிதா, நடிகை, சூப்பர் ஸ்டார், அரசியல்வாதி, முதலமைச்சர்னு அஞ்சும் அஞ்சு விதம். இந்தப் படத்துக்காக கங்கனா 20 கிலோ வெயிட் போட்டாங்க. ஆனா, அதையும் தாண்டி கங்கனாவை, ஜெயாம்மாவோட உடல்வாகுக்கு மேட்ச் ஆகிற மாதிரி காட்ட காஸ்டியூம் விஷயத்துலயும் கூடுதல் கவனம் செலுத்தினோம். ரொம்ப ஈஸியா சிலிக்கான் யூஸ் பண்ணி, நாங்க நினைச்ச தோற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். சென்னை, ஹைதராபாத், மைசூருன்னு வெயில் அதிகமான பகுதி கள்ல ஷூட்டிங் நடந்தது. சிலிக்கான் ஃபிட்டிங்கை சுமந்துகிட்டு, அந்த வெயில்ல நடிக்கிறது கங்கனாவுக்கு சிரமமா இருக்கும்னு அப்படிப் பண்ணலை. ஸ்பான்ஜ், லைக்ரா லேயர்களை வெச்சு ஜெயாம்மா லுக்கை கொண்டு வந்தோம்...’’ சவால்கள் பகிர்பவர், படத்துக்கான ஷாப்பிங் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் சொல்கிறார்.

பாட்டியின் புடவை, கங்கனாவின் ஸ்டைல், ஜெயாம்மா லுக்...

‘தலைவி’ படத்துக்கு நான் என் அத்தை, பாட்டி, என் ஃபிரெண்ட்ஸோட பாட்டி கள் வெச்சிருந்த அந்தக் காலத்து சேலைகளை யெல்லாம் பயன்படுத்தி யிருக்கேன். சென்னையில உள்ள குட்டிக்குட்டி கடைகள்லயும், காஞ்சிபுரத் துலயும் ஷாப்பிங் பண்ணேன். 1960, 70-கள்ல ஃபேஷன்ல இருந்த புடவைகளைத் தேடித்தேடி வாங்கினேன். சிலதை ரீகிரியேட் பண்ணினேன்.

காஸ்டியூம் டிசைனிங் என்பது ரொம்பவே ஸ்ட்ரெஸ் நிறைஞ்ச வேலைதான். கடைசி நிமிஷத்துலகூட டைரக்டர் திடீர்னு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பார். அதை உடனே சமாளிக்கத் தெரியணும். சில விஷயங்களை முன்கூட்டியே பிளான் பண்ணி வெச்சுக்கணும். ஆர்கனைஸ்டா வேலை பார்க்கத் தெரிஞ்சா, எந்த வேலையிலும் ஸ்ட்ரெஸ் இருக்காது’’ என்று எல்லோருக்குமான டிப்ஸ் சொல்லும் நீத்தா லுல்லா, சமந்தா நடிப்பில் ‘ஷாகுந்தலம்’ பட ரிலீஸுக்கும் ரிசல்ட்டுக்கும் வெயிட்டிங்காம்.