என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

தமிழாசிரியர் டு ஸ்டாண்டு அப் காமெடியன்... எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு!

‘கல்பாக்கம்’ ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
News
‘கல்பாக்கம்’ ரேவதி

கணக்குப் பரீட்சைக்கு நேரம் போதலன்னு எல்லாரும் அவசர அவசரமா எழுதிட்டு இருக்காங்க...

`` ‘தமிழே நீ அலையாடி விழுகின்ற அருவி... அதில் நான் விளை யாடி மகிழ்கின்ற குருவி’ - இவ்வளவு பெரிய குருவியை நீங்க பாத்திருக்க மாட்டீங்க இல்ல” - அழகிய தமிழும் அதிரடி காமெடியும் கலந்து பேசுகிறார் ‘கல்பாக்கம்’ ரேவதி. அங்குள்ள அட்டாமிக் எனர்ஜி சென்ட்ரல் ஸ்கூலில் 28 ஆண்டுகளாக தமிழா சிரியராகப் பணியாற்றுகிறார். 25 ஆண்டுக் கால மேடை அனுபவமும் பெற்றவர்.

`கலக்கப்போவது யாரு’ பழனிதான் என்னை பட்டிமன்ற மேடைக்கு அறிமுகப்படுத்தினாரு. அப்படியே பாட்டு மன்றங்கள் பக்கமும் நான் கால் பதிக்க ஆரம்பிச்சேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 3,500-க்கும் மேற்பட்ட பாட்டு மன்றங்களுக்கு நடுவரா இருந்திருக்கேன். பாட்டு மன்றம்னு சொன்னதுமே... ‘ஓ... பாடவெல்லாம் வேற செய்வீங்களோ?’னு பயந்துடாதீங்க. இதுக்கு, ‘கவிக்குயில்’ எஸ்.ஜானகி, ‘சின்னக்குயில்’ சித்ரா மாதிரி யெல்லாம் பாடத் தெரிஞ்சிருக்கணும்னு எல்லாம் அவசியமில்லை. பேசற சப்ஜெக்ட் தொடர்பான பாட்டுகளைக் குறிப்பிட்டுப் பேசத் தெரிஞ்சா போதும்.

மதுரை முத்து, ஸ்டாண்டு அப் காமெடி பண்றதுக்கான வாய்ப்பைக் கொடுத்தாரு. எனக்குப் பெருசா காமெடியெல்லாம் வராதுன்னு சொன்னப்போ, ‘ஒவ்வொருத் தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் காமெடி... நீங்க உங்க ஸ்டைல்ல ட்ரை பண்ணுங்க’ன்னு சொன்னாரு. சன் டிவி காமெடி ஜங்ஷன்ல 60 எபிசோடுகளுக்கும் மேல பெர்ஃபாம் செய்திருக்கேன்” என்பவர் இரட்டை அர்த்த முள்ள, 18 ப்ளஸ் ஜோக்குகளுக்கு ஸ்ட்ரிக்ட்டாக ‘நோ’ சொல்லிவிடுகிறார்.

‘கல்பாக்கம்’ ரேவதி
‘கல்பாக்கம்’ ரேவதி

“ஆசிரியரா எனக்கொரு பொறுப்பு இருக்கு. இரட்டை அர்த்த ஜோக்கெல்லாம் சொல்லிட்டு மறுநாள் மாணவர்கள் முகத்தை நான் பார்க்க முடியாது. பெரும்பாலும் என்னைச் சுத்தி நடக்குற விஷயங்களைத்தான் காமெடியா பேசுவேன்” என்றபடி சாம்பிளுக்கு தன் வீட்டில் நடந்த காமெடி கலாட்டா பற்றிச் சொன்னார்.

“என் வீடு இருக்கிற டவுன்ஷிப் பேரு அணுபுரம். எங்க பகுதிக்கான தொலைபேசி கோடு நம்பரை மாத்துன புதுசுல ஒருநாள் ஒரு போன் வந்துச்சு. `ஹலோ! வசந்தபவனா’... `இல்லங்க அணுபுரம்’னு சொல்லிட்டு என் வீட்டுக்காரர் வெச்சிட்டாரு. கொஞ்ச நேரத்துல மறுபடியும் போன், அங்க அதே கேள்வி, இங்க அதே பதில். மூணாவது முறையும் போன். என் வீட்டுக்காரரும் அதே பதிலைச் சொன்னாரு. எதிர்ல இருந்தவரு, `என்னங்க? போன் பண்ணும்போதெல்லாம் ‘அனுப்பு றோம்... அனுப்புறோம்’னு சொல்றீங்க. இன்னும் அனுப்பவே மாட்டேங்குறீங்க’ன்னு கோபமா கேட்டாரு மனுஷன். அப்போதான் எங்களுக்கு விஷயமே புரிஞ்சுது’’- ஹாஸ்யம் பகிர்ந்தவர் காமெடி த்ரில்லர் அனுபவமும் பகிர்ந்தார்.

“வேலூர்ல ஒரு நிகழ்ச்சி முடிச்சிட்டு, ராத்திரி 11.30 மணிக்கு கடைசி பஸ்ஸைப் பிடிச்சு ஊருக்கு வந்தேன். அன்னிக்கு வெள்ளைநிறப் புடவை கட்டி, தலையில மல்லிப்பூ வெச்சிருந்தேன். பஸ்ல வந்ததுல தலையெல்லாம் கலைஞ்சிருச்சு. ராத்திரி 2.30 மணிக்கு பஸ்ல இருந்து இறங்கி எங்க டவுன் ஷிப்புக்குள்ள நடந்து போனேன். எதிர்ல ஒருத்தர்...எங்கயோ ஊருக்குப் போறாரு போல... பாதி தூக்கத்துல நடந்து வந்துட்டு இருந்தவரு, என்னைப் பார்த்ததும் அலறி அடிச்சிட்டு ஓடுனாரு பாருங்க. அன்னிலருந்து வொயிட் காஸ்டியூமை தொடறதே இல்லையே’’ கலகலக்க வைக்கிறார்.

“நிகழ்ச்சிகள்ல கிடைக்கிற தொகையில முதியோர்கள், ஹெச்ஐவியால் பாதிக்கப் பட்ட குழந்தைகள், கஷ்டப்படுற பெண்களுக் கெல்லாம் என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யுறேன். அதுல ஒரு நிறைவு கிடைக்குது.

ஆசிரியர் பணியும் எனக்கு முக்கியம். முடிஞ்சவரை ரெண்டையும் பேலன்ஸ் பண்றேன். அதனால பல நேரத்துல டிவி வாய்ப்புகளுக்குக்கூட நோ சொல்லிடுறேன்”

- நிறைவாகப் பேசுகிறார் ‘கல்பாக்கம்’ ரேவதி.