தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

துரத்திய வறுமை, தற்கொலை முடிவு, ஸ்டாண்டு அப் காமெடி, `வலிமை’ பட வாய்ப்பு... வாயால் வெல்லும் சசிகலா

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

#Entertainment

“எங்க வீட்ல நான்தான் டாடி... என் புருஷ்தான் மம்மி... கொஞ்சம் டம்மி...” - டரியலாகப் பேசத் தொடங்குகிறார் சசிகலா.

4,000 பட்டிமன்ற மேடைகள், முன்னணி சேனல்களில் 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் என 18 ஆண்டுகளாக நகைச்சுவையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருப்பவர்.

“எம்.காம் படிச்சிட்டு பேங்க் வேலைக்காக முயற்சி பண்ணிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல இந்தி தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்னு சொன்னாய்ங்க. அதுக்காக இந்தியில எட்டு பரீட்சைகளையும் முடிச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, `எட்டு பரீட்சைகள்ல தேறுனா வேலை கிடைக்காது... 18 லட்சம் வெட்டுனாதான் வேலை கிடைக்கும்'னு. அடப்பாவிகளா... அந்த 18 லட்சம் என்கிட்ட இருந்தா வட்டிக்குவிட்டு வீட்ல உக்காந்து நிம்மதியா சாப்பிடுவேனேன்னு சொல்லிட்டு பேங்க் வேலையை மறக்கத் தொடங்குனேன்” என்று மதுரைத் தமிழில் ஈர்க்கிறார் சசிகலா.

துரத்திய வறுமை, தற்கொலை முடிவு, ஸ்டாண்டு அப் காமெடி,
`வலிமை’ பட வாய்ப்பு... வாயால் வெல்லும் சசிகலா

“வேற ஒரு கம்பெனில வேலை பார்த்துட்டே பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுத்தேன். அதோட ஒரு ஸ்கூல்ல பார்ட் டைமா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எடுத்துட்டே, பட்டிமன்றம் பேசுறதுக்குப் போக ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல ஸ்கூல் வேலையை விட்டுட்டு என் வாய நம்பி வெளில வந்துட்டேன். சமையல் உட்பட வீட்டு வேல எல்லாத்தையும் புருஷ்தான் பார்த்துக்கிறாரு. மளிகை சாமானுக்கு, ஈபிக்குன்னு எல்லாத்துக்கும் அவருகிட்ட காசைக் கொடுத்திட்டு பையத் தூக்கிட்டுக் கிளம்பிருவேன். நிகழ்ச்சியெல்லாம் முடிச்சிட்டு பையில இருக்கிற அஞ்சு புடவை யும் பழசான பிறகு தான் வீட்டுக்கு வருவேன்னா பாத்துக்கோங்க” - நிறுத்தாமல் பேசுகிறார்.

“ஆரம்பத்துல மேடைகள்ல ‘மகாத்மா காந்தி என்ன சொன்னார் தெரியுமா? இந்திராகாந்தி ஏன் சுடப்பட்டார் தெரியுமா’ன்னு ஆவேசமா பேசியிருக்கேன். ஒரு பய என்னை பட்டிமன்றத்துக்குக் கூப்பிடலயே. அப்புறம் தான் ரகசியத்தைக் கண்டுபுடிச்சேன். கம்ப ராமாயணம் பேசுனா நம்மள கண்டுக்க மாட்டேங்குறாங்க. மகாபாரதம் பேசுனா மட்டம் தட்டுறாங்க... காமெடியா பேசுனா தான் காலந்தள்ள முடியும்னு ஸ்டைல மாத்திட்டேன்” என்பவர், கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகளும் செய்கிறார்.

‘‘மதுரை முத்துதான் எனக்கு மிகப்பெரிய ரோல் மாடல். ஒருமுறை அவர் தலைமைல பட்டிமன்றத்துல பேசிட்டு இருந்தேன். அப்போ, ‘என் வீட்டுக்காரருக்கு இதயத்துல கோயில் கட்டி வெச்சிருக்கேன்’னு பேசினேன். உடனே கொஞ்சமும் யோசிக்காம ‘கும்பாபிஷேகத்துக்குச் சொல்லி அனுப்புங்க. குடும்பத்தோட வர்றோம்’னு ஸ்பாட்லயே கவுன்டர் அடிச்சாரு. அவரைப் பாத்துதான் ஜோக்கை எப்படி டெலிவரி பண்ண ணும்னு கத்துகிட்டேன்”

- பட்டிமன்ற ரகளை பகிர்ந்தவர் டி.வி பக்கம் சென்றார்.

“விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிதான் எனக்கு நல்ல ரீச் வாங்கிக் குடுத்துச்சு. எங்க வீட்ல நடக்குறது, நாட்டு நடப்பு, ஆனந்த விகடன் ஜோக்ஸ் எல்லாத்தையும் எடுத்து அதை மெருகேற்றி என் ஸ்டைல்ல சொல்வேன். ஆரம்ப காலத்துல வறுமை தாங்க முடியாம ரெண்டு குழந்தைகளையும் தூக்கிட்டு ரயில் முன்னாடி விழுந்து செத்திரணும்னு போனேன். அப்போ நடக்க முடியாத ஒருவர், மாற்றுத்திறனாளி மனைவியைக் கூட்டிட்டு டிராக்தைத் தாண்டிப் போனதைப் பார்த்தேன். அவரே இவ்ளோ தன்னம்பிக்கையோட இருக்கும்போது, நாமளும் வாழ்க்கைய வாழணும்னு நினைச்சு முடிவை மாத்திகிட்டேன். அன்னிக்கு சாகணும்னு நினைச்சேன். இன்னிக்கு பல நாடுகளில் ஷோ பண்ணிட்டு வந்துட்டேன்.

கொரோனா வந்த பிறகு வெட்டியா உட்கார்ந்து வெங்காயம் நறுக்கிகிட்டு, மொபைல்ல கேம்ஸ் விளை யாடிட்டு இருக்கேன். இப்போ மறுபடியும் நிகழ்ச்சிகள்ல கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. மறுபடியும் பெட்டிய தூக்கிட வேண்டியதுதான்”

- சந்தோஷம் பகிர்ந்தவர் அஜித்தின் ‘வலிமை’ உட்பட ஐந்து படங்களில் நடித்திருக்கிறாராம்.

``தகுதியும் திறமையும் இருந்தா வாய்ப்பு தேடி வரும்”-தன்னம்பிக்கை யோடு தடதடக்கிறார் சசிகலா.

டாக்டர்: கொரோனா டெஸ்ட் எடுக்கச் சொன்னா... என்னை ஏன் கட்டிப்பிடிக்கிறீங்க?

நோயாளி: இப்போ நீங்க டெஸ்ட் எடுத்துப் பாருங்க டாக்டர். உங்களுக்கு பாசிட்டிவ்னு வந்தா, எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க.

``பிஞ்ச செருப்ப கையில வெச்சிட்டு... `என் மனைவி ஒரு தீர்க்கதரிசி'ன்னு

ஏன்டா சொல்லிட்டு இருக்க...''

``சரக்கடிக்கப் போனா, `செருப்பு பிஞ்சிரும்'னு சொன்னா மச்சான். அப்படியே நடந்துருச்சு பாரேன்.''