Published:Updated:

`சினிமா எனக்குப் புதுசு இல்ல; என் கதாபாத்திரத்திற்கு 3 பேர்!' - பயோபிக் குறித்து பகிரும் ஜீவஜோதி

ஜீவஜோதி
ஜீவஜோதி ( படம்: ம.அரவிந்த் / விகடன் )

``எல்லோரையும் போலவே நானும் என் வாழ்க்கை படத்தை திரையில் காண ஆவலோடு இருக்கிறேன்'' என்றபடி பேசத் தொடங்கினார் ஜீவஜோதி.

கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தவர் ஜீவஜோதி. அவரது வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. அதற்கான பேச்சு வார்த்தை முடிந்து, தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டிருப்பதாக வெளியான தகவல் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

மகனுடன் ஜீவஜோதி
மகனுடன் ஜீவஜோதி
படம்: ம.அரவிந்த் / விகடன்

2001-ல் தமிழக மீடியாவில் அதிகம் அடிபட்ட பெயர்... ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபால் கொலை செய்து விட்டதாக அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பரபரப்பான தலைப்புச் செய்திகளில் அவர் பெயர் இடம்பெற்ற நேரம் அது.

வேதாரண்யம் அருகே உள்ள சின்ன கிராமத்தைச் சேர்ந்த ஜீவஜோதியின் அப்பா ராமசாமி, சரவணபவன் ஹோட்டலில் மேனேஜராகப் பணிபுரிந்ததால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.

பெற்றோருக்குச் செல்ல மகள், கணவன் சாந்தகுமார் தன் மீது வைத்திருந்த அபரிமிதமான அன்பு என மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த ஜீவஜோதியின் வாழ்க்கையில் ராஜகோபால் வடிவில் புயல் வீசத் தொடங்கியது. மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்ய நினைத்த ராஜகோபால், அதற்குத் தடையாக இருந்த சாந்தகுமாரை தனக்கு நெருக்கமான சிலரை ஏவி கொலை செய்தார்.

கணவர் தண்டபாணி உடன்
கணவர் தண்டபாணி உடன்

அதுவரை குடும்பம் என்ற நான்கு சுவருக்குள் அமைதியான முறையில் பயணித்து வந்த ஜீவஜோதியின் வாழ்க்கை, அதன் பிறகு திசை மாறியது. தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜகோபால் மீது புகார் கொடுத்ததுடன், நீதி கேட்டு அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து கண்ணீரும் கம்பலையுமாக உதவி கேட்டார். அதன் பிறகு, வழக்கின் விசாரணை வேகமெடுத்தது. ஹோட்டல் தொழிலில் பல கிளைகளைப் பரப்பி உலகப் புகழுடன் விளங்கிய ராஜகோபால் கொலை வழக்கின் முதல் குற்றவாளி என்பதால், தமிழகம் கடந்து பல மாநிலங்களிலும் எதிர்பார்க்கப்பட்ட வழக்காகவும் இது மாறியது.

விசாரணையின் முடிவில் செஷன்ஸ் நீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து ராஜகோபால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல, அங்கும் அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பை ஜீவஜோதி தன் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்த்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, தன் உடல் நிலையைக் காரணம் காட்டி ராஜகோபால் சிறைக்குச் செல்லாமல் மருத்துவமனையில் நாள்களைக் கழிக்க, `ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா?' என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பெரும் போராட்டத்துடன் சுமார் 18 வருடங்கள் நடைபெற்ற வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்காமலே 2019-ல் ராஜகோபால் உயிரிழந்தார். அப்போது, மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக ஜீவஜோதி மீடியாவில் தெரிவித்தார்.

ஜீவஜோதி
ஜீவஜோதி
படம்: தே.தீக்‌ஷித் / விகடன்

கொலை மிரட்டல், செட்டில்மென்ட், கட்டப்பஞ்சாயத்து, சேஸிங் எனப் பரபரப்பு மிகுந்த ஜீவஜோதியின் வாழ்க்கை, சினிமா படமாக உருவாக இருக்கிறது என சமீபத்தில் வெளியான செய்தி பலரையும் கவனிக்க வைத்தது. மும்பையைச் சேர்ந்த பெரிய தயாரிப்பு நிறுவனமான `ஜங்லீ பிக்சர்ஸ்' ஜீவஜோதியின் வாழ்க்கையைப் படமாக எடுக்க முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜீவஜோதி கையெழுத்திட்டுள்ளார். ஏழு மொழிகளில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில், இப்போது தஞ்சாவூரில் வசிக்கும் ஜீவஜோதியைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றோம். அம்மா, கணவர் தண்டபாணி, மகன் பவின் கிஷோர் ஆகியோருடன் வசித்து வருகிறார். மகளிருக்கான தையல் தொழில், அசைவ ஹோட்டல், அரசியல் எனப் பல தளத்தில் வெற்றிகரமாகப் பயணிக்கிறார். ``எல்லோரையும் போலவே நானும் என் வாழ்க்கை படத்தை திரையில் காண ஆவலோடு இருக்கிறேன்'' என்றபடி பேசத் தொடங்கினார் ஜீவஜோதி.

``என் கணவரைக் கொலை செய்துவிட்டதாக ராஜகோபால் மீது நான் புகார் கொடுத்தபோது யாரும் இதை நம்பல. தொழில் போட்டியில ராஜகோபாலுக்கு வேண்டாதவங்க என்னை கிளப்பிவிட்டதாகச் சொன்னாங்க. பணத்துக்காக நான் இதைச் செய்வதாகக் காதுபடவே பேசினாங்க. பல்வேறு அவதூறுகளால் பெரும் வலிகளைச் சுமந்த நேரம் அது. வழக்கு விசாரணையில எனது தரப்பு சாட்சியங்களை எந்த இடத்திலும் பிறழாமல் நீதிமன்றத்தில் முன் வைத்தேன். அதன் பின்னர், என் மேல இருந்த பார்வை மாறியது. என் மேல் பரிதாபப்பட்டதோட, இந்தப் பொண்ணு பொய் சொல்லலனு உறுதியா நம்ப ஆரம்பிச்சாங்க.

ஜீவஜோதி
ஜீவஜோதி
படம்: தே.தீக்‌ஷித் / விகடன்
`ஜெயலலிதாதான் இன்ஸ்பிரேஷன்!' -தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமான ஜீவஜோதி

கண்களில் கண்ணீர் வழிய ஒரு அறைக்குள்ள அடைபட்டுக்கிடந்தேன். அப்போ அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்த ராமச்சந்திரன் சார்தான், `வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காத... வேறு எதுலயாவது கவனம் செலுத்து'னு அட்வைஸ் செஞ்சார். தண்டபாணி என்பவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். என்னை முழுசா புரிஞ்சுக்கிட்ட, எனக்கான உலகமாகவே மாறினார் அவர். அதன் பிறகு தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தேன். ஓரளவுக்குத் தெரிந்த தையல் தொழிலை முழுமையா கத்துக்கிட்டு சின்னதா தையல் கடை ஆரம்பிச்சேன்.

நல்ல வரவேற்பு கிடைக்க, மணமகளுக்கான பிரத்யேக ஆடைகள் வடிவமைக்கக் கத்துக்கிட்டேன். பூர்ணிமா பாக்யராஜ் மேடம் அதுக்குப் பெரிய அளவுல உதவினாங்க. ஆரி ஒர்க், எம்பிராய்டரிங்னு தொழிலை விரிவுபடுத்தினேன். தஞ்சாவூர் மட்டுமல்லாம வெளி மாவட்டங்களுக்கும் மணமகள் ஆடை வடிவமைத்துத் தர்றேன். இப்போ 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துட்டு இருக்கேன்.

தம்பி ராம்குமார்
தம்பி ராம்குமார்
``அழுகிறதை விட்டுட்டு வைராக்கியத்தை வளர்த்துக்கிட்டேன்!" - கடந்த காலம் பகிரும் ஜீவஜோதி

அப்பாவின் நினைவா வல்லம் அருகே அசைவ ஹோட்டல் ஒன்றையும் நடத்திட்டு வர்றேன். பி.ஜே.பியில தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவரா பதவி வகிக்கிறேன். பிரச்னையால பாதிக்கப்படுகிற பல பெண்கள் எங்கிட்ட உதவி கேட்டு வர்றாங்க. அவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியைச் செய்கிறேன். தனி மனுஷியா செய்றதவிட கட்சியில் சேர்ந்து செஞ்சா இன்னும் நிறைய பேருக்கு உதவலாம் என்றே கட்சியில சேர்ந்தேன்.

நான் பட்ட வலிகளுக்கான மருந்தா, இப்ப வாழ்க்கை இனிக்குது. என்னோட வாழ்க்கை சினிமா படமாக உருவாக இருக்கு. அதுக்கான முதல் கட்ட பணிகள் முடிஞ்சிடுச்சு. வழக்கில் முதல் தீர்ப்பு வந்ததுமே, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சில முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் என் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அனுமதி கேட்டு என்னிடம் பேசினாங்க. அதற்கான காலச்சூழல் அப்போ இல்லை.

ஜீவஜோதி
ஜீவஜோதி
படம்: ம.அரவிந்த் / விகடன்
சினிமாவாகும் ஜீவஜோதி வாழ்க்கை: 7 மொழிகளில், பெரும் பொருட்செலவில் தயாராகிறது! - கையெழுத்தான ஒப்பந்தம்

கடந்த ஒன்றரை வருஷமாவே மீண்டும் அதற்கான பேச்சு தொடங்கியது. என் தம்பி ராம்குமார், சினிமா துறையில உதவி இயக்குநராக இருப்பதும் அதற்கு முக்கியக் காரணமா அமைய, இப்ப எல்லாம் கைகூடி வந்திருக்கு. மும்பையைச் சேர்ந்த பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான `ஜங்லீ பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கேன். பிரமாண்ட பொருட்செலவில் படம் உருவாக இருக்கு. ஹீரோ, ஹீரோயின் என மற்ற எல்லாவற்றையும் தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்க இருக்கு. எனக்கு சினிமால நடிக்கும் எண்ணம் இல்லை.

இயல்பிலேயே நான் போல்டாக இருப்பவள். என் கதாபாத்திரத்தில் இவர்கள் கதாநாயகியா நடித்தா சிறப்பாக இருக்கும்னு என் மனதில் மூணு பேரை நினைச்சிருக்கேன். இறுதி முடிவை தயாரிப்பாளர்தான் எடுப்பார். தம்பி உதவி இயக்குநர்; என் மகன் பவின் கிஷோர் `குன்றத்துலே குமரனுக்குக் கொண்டாட்டம்' என்ற படத்துல நடிக்கிறான். சீனு ராமசாமியிடம் கோ டைரக்டராக இருந்த தயானந்தன் என்பவர் படத்தை இயக்குறார். அதனால் சினிமா எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. என்னோட படம் ரிலீஸானதும் மக்கள் இன்னும் என்னை முழுசா புரிஞ்சுப்பாங்க. எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து இந்தப் பொண்ணு வந்திருக்குனு பேசுவாங்க. நிச்சயம் வேற லெவல்ல படம் இருக்கும். அந்த நாளுக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு