லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சிறிய வீடு... பெரிய மகிழ்ச்சி... அள்ள அள்ள ஆச்சர்யங்கள்... இயற்கை எனும் இனிய கொடை !

ஜோனா ஜின்ட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோனா ஜின்ட்டன்

#Entertainment

“நமக்குக் கிடைத்துள்ள சிறிய நல்ல விஷயங்களுக்கு நன்றியுடையவர்களாக உணர்வதுதான் பெரிய பெரிய விஷயங் களுக்கான திறவுகோல்!” - 21 வயதில் நகர வாழ்க்கை, படிப்பு என அனைத்தையும் கைவிட்டு இயற்கையின் பக்கம் திரும்பிய ஜோனா ஜின்ட்டனின் நம்பிக்கை வார்த்தைகள் இவை. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோனா ஜின்ட்டன் (Jonna Jinton) யூடியூப் சேனலுக்கு 2.38 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸை சம்பாதித்து வைத்திருக்கிறார். இவரது யூடியூப் சேனலில் ஃபேஷன், ஆடம்பரம் போன்ற விஷயங்களைத் தேடினால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். போட்டோகிராபி, ஓவியம், ஃபிலிமிங், இசைக்கலைஞர், எழுத்தாளர் எனப் பல முகங்கள் அவருக்கு.

“இயற்கையோடு நெருக்கமாக வாழ வேண்டும் என்று நான் முடிவெடுத்ததில் இருந்துதான் எல்லாமே தொடங்கின” எனும் ஜோனா, ஸ்வீடன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோத்தன்பர்க்கில் வசித்தார். நகர்ப்புற இரைச்சல், அவசரம், ஆடம்பரம் என அனைத்தும் அவருக்கு அந்நியமாகவே இருந்தன.

சிறிய வீடு... பெரிய மகிழ்ச்சி...
அள்ள அள்ள ஆச்சர்யங்கள்... இயற்கை எனும் இனிய கொடை !

“என் இதயம் வேறு எதற்காகவோ ஏங்கிக் கொண்டிருந்தது. 2010-ம் ஆண்டு என் வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுத்தேன். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு குடியிருந்த அப்பார்ட் மென்டையும் காலிசெய்தேன். வடக்கு ஸ்வீடனில் 10 நபர்கள் மட்டுமே குடியிருக்கும் ஒரு குக்கிராமத்துக்கு வந்தேன். 12 தலைமுறைகளுக்கு முன்பு அதே கிராமத்தில்தான் என் வேர்கள் வாழ்ந்திருந்தன. என் வீட்டுக்குத் திரும்பியது போல உணர்ந்தேன். இந்தக் கிராமத்துக்கு வந்தபோது வாழ்க்கையை வாழ்வதற்கான திட்டமோ, பணமோ, வேலையோ எதுவும் என்னிடம் இல்லை. நீண்ட குளிர்காலம், பணமில்லாத வாழ்க்கை, மிகச் சிறிய வீடு எனக் கிராமத்தில் நான் வாழ்ந்த முதல் ஆண்டு மிகவும் சவாலானது. என் பொறுமை அதிகமாகச் சோதிக்கப்பட்டது இந்த நாள்களில்தான்”

- தனி ஒருத்தியாக வாழ்க்கையை எதிர் கொண்டிருக்கிறார் ஜோனா.

வாழ்க்கையை நகர்த்துவதற்கான வழிகளை யோசித்தபோதுதான் தனது போட்டோகிராபி மற்றும் ஃபிலிமிங் ஆர்வத்தைக் கண்டறிந்து, அதற்காக பிளாக் ஒன்றைத் தொடங்கினார். “என் புதிய வாழ்க்கையின் பக்கங்களை அதில் எழுத்துகளாகவும் இயற்கையோடு உள்ள என் காதலை போட்டோக்களாகவும் பதிவிட்டேன். இயற்கையுடனான அதிக நெருக்கம் என் உணர்வுகளை ஓவியங்களாக வெளிப்படுத்த வைத்தது. ஓவியங்கள் வரைந்து விற்பனைக்கு அனுப்பினேன்” எனும் ஜோனாவின் ஓவியங்களுக்கு உலகில் அதிக விலைக்கு விற்பனையாகும் ஓவியங்கள் என்ற பெருமையும் உண்டு. ஜோனாவின் ஓவியங்களில் நாம் பார்க்கும் வண்ணங்கள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் கற்கள், சாம்பல், கரி போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்டவைதான்.

தன் முடிவு சரியானது என்ற நம்பிக்கையில், தன் பெயரில் யூடியூப் சேனலையும் தொடங்கினார். இயற்கை எழில் மிகுந்த பசுமையான கிராமத்தில் அவரது அன்றாட வாழ்க்கை தொடங்கி ஓவியத்துக்கான இயற்கை வண்ணங்களை எப்படித் தயாரிப்பது, வெண்பனி சூழ்ந்த குளிர்கால நாள்களை எப்படிக் கடப்பது, இயற்கையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி போட்டோக்கள் எடுப்பது எப்படி என அனைத்தையும் வீடியோக்களாக்குகிறார். தன் வாழ்க்கை மாற்றத்தைப் பற்றிய அவரது வீடியோவுக்கு மட்டும் எட்டு மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது.

குல்னிங் (Kulning) என்று அழைக்கப்படும் ஸ்வீடன் நாட்டு இசை அது. மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை அழைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த ஓசையை இசையாக மாற்றி அதற்குப் பின்னணி இசை சேர்த்து, பாடலாக மாற்றுகிறார். ஒரு வீடியோவில் தூரத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் பசுக்கள் குல்னிங் இசையைக் கேட்டதும் ஜோனாவை நோக்கிக் கூட்டமாக வந்து அவரைச் சுற்றி நிற்கும் காட்சி மயிர்க்கூச்செரிய வைக்கிறது.

இவருடன் இப்போது கணவர் ஜோஹனும் இணைந்திருக்கிறார். தன் எலெக்ட்ரீஷியன் பணியைத் துறந்துவிட்டு, தனக்கு ஆர்வமுள்ள வெள்ளி நகைகள் செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு, அதை பிசினஸாக செய்து வருகிறார். “நான் இங்கு வந்தபோது நானோக் என்ற ஒரு நாய்க்குட்டியை வாங்கினேன். இரண்டு பூனைக்குட்டிகள், ஒரு பசுவும் குடும்பத்தில் இணைந்துவிட்டன. என் குடும்பம் பெரிதாகிவிட்டது” என்கிறார் ஜோனா,

‘`நகரத்தில் வாழ்ந்திருந்தால் இது எதுவுமே வாய்த்திருக்காது. நகரத்தைவிட்டு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அதே கிராமத்தில் என் சிறிய வீட்டில்தான் வசித்து வருகிறேன்.

ஆனால், மகிழ்ச்சி மட்டும் பெரிதாகிக்கொண்டே இருக் கிறது” என்கிறார்.

இயற்கையின் மடி எப்போ தும் நம்மை ஆச்சர்யப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்!