Election bannerElection banner
Published:Updated:

நெட்ஃப்ளிக்ஸில் குழந்தைகளுக்கான சமையல் நிகழ்ச்சி... புதிய அவதாரமெடுத்த மிஷேல் ஒபாமா... என்ன ஸ்பெஷல்?

Michelle Obama
Michelle Obama ( Twitter Image )

முதல் நிகழ்ச்சியாக `வாஃபில்ஸ் + மோசி' என்ற நிகழ்ச்சி மார்ச் 16-ம் தேதி ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரில் மிஷேல் ஒபாமா விசித்திரமான பல்பொருள் அங்காடியின் உரிமையாளராகவும் நடிக்கிறார்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் அவசியத்தை நாம் கற்பிக்க வேண்டும். இந்தக் கருத்தை உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடித்தவகையில் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா. இந்த முயற்சியில் அவர் பொம்மைகளையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டுள்ளார். நெட்ஃப்ளிக்ஸில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகப்போகிறது. இவர் தன் கணவர் ஒபாமாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸுடன் இதற்கான ஒளிபரப்பு ஒப்பந்தத்தை அமைத்துக்கொண்டுள்ளது.

Web series Poster
Web series Poster
Twitter

முதல் நிகழ்ச்சியாக `வாஃபில்ஸ் + மோசி' என்ற நிகழ்ச்சி மார்ச் 16-ம் தேதி ஒளிபரப்பாகிறது. இதைத் தயாரிப்பதுடன் இந்தத் தொடரில் மிஷேல் விசித்திரமான பல்பொருள் அங்காடியின் உரிமையாளராகவும் நடிக்கிறார். இந்த அங்காடியில் வேலை செய்பவர்கள் பெயரிடப்பட்ட பலவித பொம்மைகள். இவர்கள் குழந்தைகளின் நண்பர்களாகவும் சமையல்கலை நிபுணர்களாக மாற வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களாகவும் சித்திரிக்கப்படுவார்கள்.

கேரக்டர்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஜப்பானிய கேக் போன்ற உருண்டை வடிவில் ஒன்று, கட்டம் போடப்பட்ட வாஃபில்ஸ்களை காதுகளாகக் கொண்ட மற்றொன்று போன்றவை உதாரணங்கள்.

இவற்றைப் பற்றி மிஷேல் பகிர்ந்துள்ள ட்வீட் மெசேஜில் "நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். குழந்தைகளும் அவர்கள் குடும்பங்களும் எங்களுடன் இந்தத் தேடலில் இணைந்து, உலகெங்கும் உள்ள பலபல சுவையான உணவு வகைகளைச் சமைத்தும் சாப்பிட்டும் களிப்படையப் போகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரைப் பற்றி நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் கூறப்பட்டவை.... ''பத்து எபிசோடுகளுடன் இந்தத் தொடர் சமையல் உலகில் ஒரு சாகசம் நிகழ்த்தப்போகிறது. தொடரின் பொம்மைகள் அவ்வப்போது ஒரு மாயத்தள்ளு வண்டியிலிருந்து குதித்தெழுந்து எந்த நாட்டிலிருந்து எந்தப் பொருள் சமையலுக்குத் தேவை என்பதைக் கூறியவண்ணம் இருக்கும்.

Michelle Obama
Michelle Obama
Twitter

உதாரணத்துக்குப் பெரு நகரின் ஆண்டிஸ் நாட்டில் உருளைக்கிழங்கு வாங்கும்போது, இத்தாலிய மசாலா பொருள்களை சுவைத்துப் பார்க்கும்போது, ஜப்பான் நாட்டில் மைசோ செய்யும்போது... இந்த மாய பொம்மைகள் சாப்பாட்டு உலகின் அதிசயங்களைக் கண்முன்னே விரித்துக் காட்டும். இப்படி ஒவ்வோர் உணவும் ஒரு புது நண்பரையும் புதிய புரிந்துணர்வையும் கொண்டுவரும்.

தவிர நிகழ்ச்சியில் மிஷேல் தன் நண்பர்களாகக் கருதும் பல பிரபலங்களையும் பங்கேற்க வைக்கப்போகிறார். தவிர சமையல்கலை நிபுணர்களும், வீட்டுச் சமையலில் கலக்குபவர்களும் குழந்தைகளும் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சி மிஷேலின் நல்ல நோக்கங்களை முன்வைப்பதாக அமையும். வெள்ளை மாளிகையில் அவர் இருந்தபோது `Let's Move' என்ற முயற்சியைத் தொடங்கினார். இதில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதற்குப் பழக்கப் படுத்த வேண்டும் என்பதைக் கூறினார். அதேபோல் இளைஞர்களின் முன்னேற்றத்தை உலகளவில் செயல்படுத்தப் பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதில் ஒன்றுதான் `Girls opportunity alliance' அதாவது, பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றப்பாதை வகுத்தல்.

Michelle Obama
Michelle Obama
Twitter

இதில் பெண்களுக்கான கல்வித்திறன் வளர்த்தலை முன் நிறுத்தினார். இவற்றைத் தவிர, இப்போது அவர் தயாரிப்பில் இருக்கும் இந்த நிகழ்ச்சி வறுமையில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பையும் கையிலெடுக்கும் என்று கூறி உள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்காக இவர் இதற்கு முன் தயாரித்த "Listen to your Vegetables & Eat your Parents" வரிசையில் இந்த நிகழ்ச்சியும் கலகலப்பான ஒன்றாக அமையும். இவற்றைத் தவிர அவரது மற்றொரு நிறுவனமான "Higher Ground Productions Company" மூலம் தயாரித்து அளித்த ஆவணப் படங்களான "American History" ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாறுதல்கள் பற்றியும், "Crip Camp" ஆவணப்படம் மாற்றுத்திறனாளிகளுக்கான கோடை முகாம்கள் பற்றியும் பேசுபவை.

- லதா ரகுநாதன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு