தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எல்லாப் புகழும் என் கண்களுக்கே! - மோகினியின் நாஸ்டால்ஜியா நினைவுகள்

மோகினி
பிரீமியம் ஸ்டோரி
News
மோகினி

“பூர்வீகம் தஞ்சாவூர். வளர்ந்ததெல்லாம் சென்னைதான். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம்

“சினிமாவுல நான் ஆக்டிவ்வா நடிச்சு பல வருஷங்கள் ஆகுது. ஆனா, சினிமாவுல பிரேக் எடுத்ததா நினைக்கல. கரியர்ல லாங் லீவ் எடுத்த உணர்வுல, இப்போ மறுபடியும் நடிக்க முடிவெடுத் திருக்கேன். இந்த வருஷத்துக்குள்ளேயே புதுப் படத்துல நடிக்க ஆரம்பிச்சுடுவேன்” - ஈர்ப்பான கண்கள் விரிய பேசுகிறார் மோகினி. 1990-களில் தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர், தற்போது அமெரிக்காவில் பிஸியான இல்லத்தரசி. ரீ-என்ட்ரி திட்டமிடலுடன் சென்னை வந்திருந்தவருடனான சந்திப்பு...

“பூர்வீகம் தஞ்சாவூர். வளர்ந்ததெல்லாம் சென்னைதான். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம். பெற்றோருக்குக் கல்யாண மாகி பத்து வருஷங்கள் கழிச்சுப் பிறந்த தால, வீட்டுல நான் ரொம்ப செல்லம். கிளாசிக்கல் டான்ஸ், மியூசிக், படிப்புனு என் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியா இருந்துச்சு. என் அப்பா கிண்டி ரேஸ் கிளப்ல வேலை செஞ்சதால, அவருக்கு நிறைய சினிமா பிரபலங்களுடன் நட்பு இருந்துச்சு. அந்த வகையில என்னைப் பத்தி தெரிஞ்சுகிட்ட சினிமா பிரபலங்கள் பலரும், என் கண்கள் வித்தியாசமா இருக்கேன்னு நடிக்கக் கேட்டாங்க. ‘ஈரமான ரோஜாவே’ படத்துல மட்டும் நடிச்சுட்டு, நிறுத்திடலாம்னு அப்பா சொன்னார். பத்தாவது படிச்சுகிட்டு இருந்தப்போ, அந்தப் படத்துல நடிச்சேன். ‘வா வா அன்பே’ உட்பட அந்தப் படத்தோட எல்லாப் பாடல்களுமே இப்போவரை பலருடைய ஃபேவரைட் லிஸ்ட்டுல இருக்கு...” சில வரிகள் பாடிக்காட்டி சிரிக்கிறார். வெற்றியுடன் திரைப்பயணத்தைத் தொடங்கியவருக்கு, ஐந்து மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால், மோகினியின் டாக்டராகும் கனவு தகர்ந்தாலும், 90-களில் முன்னணி நடிகையாக ஜொலித்தார்.

எல்லாப் புகழும் என் கண்களுக்கே!  - மோகினியின் நாஸ்டால்ஜியா நினைவுகள்

“நடிக்க வந்த ரெண்டு வருஷங்களுக்குப் பிறகுதான் சினிமாவை என் கரியரா ஏத்துகிட்டேன். ‘புதிய மன்னர்கள்’ல ‘நீ கட்டும் சேலை’ பாடல்ல ஃபோக் சாங் எனக்கு செட் ஆகாதுனு ரொம்பவே மறுத்தேன். சரியா வரும்னு நம்பிக்கையூட்டினார் விக்ரமன் சார். படம் ஹிட்டாகாட்டியும், அந்தப் பாட்டு செம ஹிட். ஷூட்டிங் இல்லாட்டி வீடுதான் என் உலகம். பார்ட்டி, வெளி நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் போக மாட்டேன்.

நிறைய ஹிட் படங்கள்ல நடிச்சாலும், ‘சின்ன தம்பி’, ‘முத்து’, ‘திருடா திருடா’, ‘தளபதி’, ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உட்பட பல ஹிட் பட வாய்ப்புகளை மிஸ் பண்ணது வருத்தம்தான். காலம் ஓடினதே தெரியல. ‘நார்த் இந்தியன், ஃபாரின் பொண்ணு மாதிரி இருக்கே; கண்ணுல ஏதாச்சும் ஸ்பெஷல் லென்ஸ் வெச்சிருக் கீங்களா?’ன்னு பலரும் சந்தேகமாவும் கிண்டலாவும் கேட்பாங்க. அதெல்லாம் எதுவுமில்லைனு விளக்கம் கொடுக்குறதே எனக்குப் பெரிய டாஸ்க்கா இருந்துச்சு. ஆனா, என்னோட கண்கள்தான் இப்போ வரை எனக்கான அடையாளமா இருக்கு” வெட்கத்துடன் நாஸ் டால்ஜியா நினைவுகள் பகிரும் மோகினி, பத்தாண்டுகளில் நூறு படங்களுக்கு மேல் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு, 2010-ல் அமெரிக்காவில் குடியேறினார்.

“நல்லா போயிட்டு இருக்குற நம்ம வாழ்க்கையில, எப்போ ஸ்பீடு பிரேக் வரும்னு சொல்ல முடியாது. கல்யாணத்துக்குப் பிறகு சில நிகழ்வுகளால என்னோட உடல்நிலையும் உளவியலும் பாதிக்கப் பட்டுச்சு. வாழவே பிடிக்காம தற்கொலை எண்ணங் களுடன் சிரமப்பட்டேன். எத்தனையோ டாக்டர்களைச் சந்திச்சும் தீர்வு கிடைக்கல. எதிர்மறை எண்ணங்கள்ல இருந்து விடுபட கிறிஸ்தவ மத போதனைகளும் வழிபாடுகளும்தான் கைகொடுத்துச்சு. அந்த மதத் துக்கு மாறி, பல்வேறு சிக்கல்கள்ல இருக்குறவங்களின் நலனுக்காக போதனைகளும் பிரார்த்தனைகளும் செஞ்சேன்.

எல்லாப் புகழும் என் கண்களுக்கே!  - மோகினியின் நாஸ்டால்ஜியா நினைவுகள்

இப்போ அமெரிக்காவுலயும் நேரம் கிடைக் குறப்போ இந்தப் பணிகளைச் செய்யுறேன். மன அழுத்தத்துல தவிக்குறவங்க, ஆதரவற்ற மக்களுக்கு, கடவுள்கிட்ட வேண்டிக்குற பணிகளை நிறைவுடன் செய்யுறேன். கணவர் பரத் ஐ.டி துறையில வேலை செய்யுறார். பெரியவன் அனிருத் காலேஜ் படிக்கிறான். ஆறாவது படிக்குற கடைக்குட்டி அத்வைத்துக்கு, செகண்டு ஸ்டாண்டர்டுல இருந்தே ஹோம் ஸ்கூலிங் முறையில பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். பக்கா இல்லத்தரசியா லைஃப் சூப்பரா போகுது. மறு படியும் ஆக்டிங்ல கவனம் செலுத்த இது நல்ல தருணமா தோணுது. சென்னையில இருந்து அமெரிக்கா கிளம்புறத்துக்குள்ள புதுப் படத்துல நடிச்சுடலாம்னு ஆவலுடன் இருக்கேன்”

- கண்ணழகிக்கு ரீ-என்ட்ரியும் வெற்றிகரமாக அமையட்டும்!