Published:Updated:

"அடடே... கமல் சார் நீங்களா?" - பெப்பர் ஸ்ப்ரேயரின் சில கேள்விகள்! #KamalHaasan

கமல்ஹாசன் #KamalHaasan
கமல்ஹாசன் #KamalHaasan

இங்கே கமல் சார் என்பவர் ஒரு பிரதிநிதி மட்டுமே. உலகம் முழுக்கவே இப்படி பல கோடி கமல் சார்கள் நம்மிடையே இருக்கிறார்கள். கமல் சாரைப் போலவே சிந்தித்துக் கொண்டிருக்கும் கமல் சார்களுடனான உரையாடலை சில கேள்விகள் மூலம் தொடங்கவிரும்புகிறேன்.

கமல்ஹாசன்... தமிழ் சமூகத்தின் முற்போக்கு முகங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட, படுபவர்களில் முக்கியமானவர். திருமணம், தாலி எனப் பல விஷயங்கள் குறித்து ஏற்கெனவே பலமுறை 'முற்போக்காக'ப் பேசியிருக்கும் கமல்ஹாசனின் பழைய வீடியோ, அதாவது 2014-ல் எடுக்கப்பட்ட பேட்டி இப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகிக்கொண்டிருக்கிறது.

பாலியல் வன்முறைகளை பெண்கள் எப்படி கையாள வேண்டும் என்ற கேள்விக்கு அப்போதைய நடிகர், இப்போதைய நடிகர் கம் அரசியல்வாதி கமல்ஹாசனின் பதில் இதுதான். ''உங்கள் கண்ணியத்தை தவறவிடாதீர்கள், பாதுகாப்பாக இருங்கள். உங்கள் முகத்தில் தெரியும் கல்வியையும், தன்னம்பிக்கையையும் பார்த்து பொறுக்கிப் பையன் பயந்துவிடுவான். உங்கள் மனம் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் யாரும் அருகில் வரமாட்டார்கள்" என்று தனக்கே உரிய மொழியில் அரிய கருத்துகளை உதிர்த்திருந்தார்.

2014-ல் வந்த காணொளிக்கு இப்போது எதிர்வினையா என்று கமல் சாரை 'ஃபாலோ' செய்யாத சிலர் நினைக்கலாம். இந்த காணொளி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலான பின்பும்கூட கமல்ஹாசன் அவர்கள் அவரது பழைய கூற்றை மறு ஆய்வு செய்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. மாறாகத் தனது பழைய கருத்துக்கு இன்னும் ஒரு முரட்டு முட்டு கொடுக்கும் விதமாக, தொடர்பில்லாத ஒரு வீடியோவை முன்வைத்து பெண்களுக்கு மிக பிற்போக்கான அறிவுரையை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில் பெண்களின் கண்ணியமான நடத்தை மற்றும் கட்டுக்கோப்புதான் அவர்களைப் பாதுகாக்கும் என்றும், வன்முறையை அஹிம்சையைக் கொண்டு எதிர்க்கவேண்டும் எனவும் எழுதியிருக்கிறார். மேலும் தன்னம்பிக்கை பெப்பர் ஸ்ப்ரேவைவிட ஆபத்தானது என்கிறார். எந்த ஆபத்தில் இருந்து யாரை காப்பாற்றுகிறார் என்றுதான் புரியவில்லை?!

தான் ஏற்கெனவே சொன்ன கருத்துக்கே எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கும்போது மீண்டும் இப்படி ஒரு ட்விட்டர் பதிவு செய்திருப்பது அவரது ஈகோவையே காட்டுகிறது. இங்கே கமல் சார் என்பவர் ஒரு பிரதிநிதி மட்டுமே. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழ் சமூகம் பரந்து விரிந்திருக்கும் இந்த உலகம் முழுக்கவே இப்படி பல கோடி கமல் சார்கள் நம்மிடையே இருக்கிறார்கள். கமல் சாரைப் போலவே சிந்தித்துக் கொண்டிருக்கும் கமல் சார்களுடனான உரையாடலை சில கேள்விகள் மூலம் தொடங்கவிரும்புகிறேன்.

"அடடே... கமல் சார் நீங்களா?" - பெப்பர் ஸ்ப்ரேயரின் சில கேள்விகள்! #KamalHaasan

ஒரு பெண்ணை ஆண் பின் தொடர்ந்து கேலி செய்யும்போது அப்பெண் தன்னுடைய 'எதிர்ப்பை தெரிவிப்பது சிக்னல்' என்று திடீரென இன்று கமல்ஹாசன் சொல்லிவிடவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக தமிழ் சினிமா அதைத்தான் போதித்து வந்திருக்கிறது. கமல் மட்டுமல்ல காலங்காலமாக தமிழ் சினிமா கதாநாயகர்கள் பெண்களைப் பின் துரத்தி கேலி செய்து, பாட்டு பாடி அவர்கள் வேறு வழியே இல்லாமல் இவர்களை விரும்புகிறேன் என்று சொல்லும் வரையில் விடமாட்டார்கள். இதற்கு பெயர்தான் 'காதல்'.

ஒரு பெண் தனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னாலும், "வேண்டாம் என்று சொன்னால், வேண்டும் என்றுதான் அர்த்தம்" என்று புதிய அகராதி ஒன்றையும் தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் பெண்களை பின் தொடர்ந்து காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதை (#Stalking) கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் இருந்து ஓடிடி காலம்வரை அத்தனை கதாநாயகர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் மிக மோசமான படத்துக்கு சிறந்த உதாரணம் கமல் சாரின் 'சிங்காரவேலன்'. பெண்ணை முழுக்க முழுக்க உடலாக, போதைப்பொருளாக மட்டுமே பார்க்க கற்றுக்கொடுத்தப் படம். பிடிக்கவில்லை என்று சொன்னால் விடாமல் டார்ச்சர் செய்வது எப்படி என்பதற்கான கையேட்டையும் உருவாக்கிக்கொடுத்தப் படம். காலக் கணிணியான கமல் சார் எப்போதும்போல இதையும் 28 ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டார்.

ஏற்கெனவே காதல்கொண்டு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் பெண்ணைக்கூட விடாமல் துரத்தி, தன்னைப் பிடித்திருக்கிறது என சொல்ல வைத்து பின் அதுதான் உண்மைக்காதல் என்று சப்பக்கட்டு கட்டி #Stalkingஐ நியாயப்படுத்தும் கேவலங்களையும் தமிழ் சினிமா இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கிறது.

கமல் சார் சொல்வது போல் நல்ல பெண்ணாக தன்னுடைய எதிர்ப்பைக் காட்டாமல் சென்று கொண்டிருந்தால் அதற்கும் தமிழ் சினிமா இன்னொரு கோட்பாட்டை உருவாக்கி வைத்திருக்கிறது. அதாவது "மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி". அமைதியாக செல்லும் பெண்ணின் பின்னால் ஆண் அவனது ஆசை, எண்ணம் நிறைவேறும் வரை தொடர்ந்து வந்துகொண்டே இருப்பான். கடைசியில் அவன் நினைத்தது நிறைவேறிவிடும்.

தன்னை எதிர்க்கும் பெண்ணை நல்ல குடும்பத்து பெண் இல்லை என எடுத்ததும் முத்திரைகுத்தும் சாதாரண குடிமகன்களின் கருத்தைதான் "நல்ல பெண்ணாக இருந்தால் பேசாமல் கடந்து போ" என்று கறுப்புச்சட்டை, முற்போக்கு, பெண்ணியம் அடையாளங்களுக்குள் இருந்துகொண்டு கமல் சாரும் சொல்கிறார். கமல்ஹாசன் சொல்வது நேரடியாக #VictimBlaming. அதாவது பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சுமத்துவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை சொல்வது. இது காலங்காலமாகப் பெண்களுக்கு நடக்கும் அநீதி.

பெண், ஆண் அல்லது திருநர் என யாராக இருந்தாலும், பாலியல் சீண்டலுக்கு உள்ளாவது அவர்கள்மேல் திணிக்கப்படும் வன்முறை. முதலில் அது சட்டப்படி குற்றம். அவ்விடத்தில் அவர் நல்ல பெண், மோசமான பெண் என்றெல்லாம் எப்படி கமல் சார் வரையறை செய்கிறார்... கெட்ட பெண் என்று யாரும் உள்ளார்களா? அப்படி இருந்தால் அவர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகலாம் என்று சொல்கிறாரா? சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போலி கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருவரை கெட்டவர் என வரையறை செய்து அவர்கள் வன்முறைக்கு உள்ளாகலாம் எனச் சொல்வது சக மனிதனுக்கு செய்யும் அநீதி இல்லையா?

பஞ்சத்தந்திரம்
பஞ்சத்தந்திரம்

"உங்கள் மனசு சுத்தமாக இருக்கும் பட்சத்தில் யாரும் கிட்ட வர மாட்டாங்க"... பச்சிளம் குழந்தைகள்கூட பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறார்களே சார்? #மனம்சுத்தமாகஇருக்கவேண்டும் டெம்ப்ளேட் அவர்களுக்கும் பொருந்துமா?

"தற்காப்பு கலை என்பது lowest form of defense. அஹிம்சையை உணருங்கள்" என்று சொல்லியிருக்கிறார். ஒரு பெண் நடு இரவில் நகைகளுடன் தனியாக நடந்து போகும் நாளில்தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்றதாக அர்த்தம் என்று சொன்ன அஹிம்சாவாதி மகாத்மா காந்தி அவர்கள்கூட தனியாகப்போகும் பெண்ணிடம் அத்துமீறும் ஒருவனை அந்த நேரத்தில் தடியால் ரெண்டு போட்டு அப்பெண்ணை மீட்பார்.

கதைகளில், சினிமாக்களில் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு பொது சித்திரத்தின்மேல் கேள்வி எழுப்பாமல் ஆதரித்துக் கொண்டே வந்த ஒரு சமூகத்தின் குற்றம் இது. பள்ளிகளில் ஆரம்பத்தில் இருந்தே சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். அதை நோக்கி தனிப்பட்ட நபராக நம்முடைய செயல்பாடுகள் என்ன?

வீட்டில் பெண் குழந்தையை அவர்களது சகோதரர்களுக்கு வேலை செய்யச் சொல்வது, அடங்கிப்போகச் சொல்வது, அதேபோல் ஆண் குழந்தைகளிடம் அவர்களது தாய்க்கும், சகோதரிகளுக்கும் காவலனாக இருக்க வேண்டும் எனச் சொல்லி வளர்ப்பதெல்லாம் இந்த 2021-லும் நம் வீடுகளில் நடந்துகொண்டுதானே இருக்கிறது?

முற்போக்கு சிந்தனைகள் எல்லாம் எட்டிப்பிடிக்காத, தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில், பெரிதாக படிப்பறிவில்லாத பெற்றோரால் வளர்க்கப்பட்டவள் நான். முதலில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் படித்து வளர்ந்தவள், முதன்முதலில் இருபாலரும் படிக்கும் கல்வி நிலையத்துக்குள் என் பருவ வயதில் நுழைந்தேன். அப்போது என் அம்மா எனக்கு சொன்ன அறிவுரை இன்றுவரை என் மனதுக்குள் ஒலிக்கிறது. இன்றுவரை என்னை வழிநடத்துகிறது.

''உன்னை ஒரு பையன் பின்தொடர்ந்து வருவதுபோல் தெரிந்தால், இரண்டு நாட்கள் கவனி. மூன்றாவது நாள் அவனிடம் திரும்பி 'எதற்கு என் பின்னால் வருகிறாய்' என முகத்திற்கு நேராக கேட்டுவிடு. நீ அமைதியாக இருக்கும்வரை அவன் பின்னால் வந்துகொண்டேதான் இருப்பான். அது பிரச்னைகளை கொண்டு வரும். திரும்பி நின்று கேட்கும் கேள்வியிலேயே இவள் தைரியமானப் பெண் எனப் பலர் ஓடிவிடுவார்கள்" என்றார்.

கமல்
கமல்

அதேபோல் அப்பா என்னிடம், "யாராவது உன்னிடம் தவறாகப் பேசினால் ஆசிரியர்களிடம் போய் சொல். நீயாக யாரையும் தவறாகப் பேசிவிடாதே, அடிக்க கையை ஓங்கிவிடாதே. ஆனால், உன்னிடம் தவறாக நடக்கமுயன்றால் முதலில் பயப்படாமல் அடித்துவிடு. அதற்குமேல் வரும் பிரச்னைகளை நாம் பார்த்துக்கொள்ளலாம்" என்றார். என் பெற்றோர்கள் கொடுத்த தைரியமான வார்த்தைகள்தான் இன்றுவரை என் முதல் தற்காப்பு ஆயுதம்!

சாலையில் இளம்பெண்களை வம்பிழுத்து கேலி செய்யும் ஆண்களைப் பார்க்கும் தாய், தன் மகளிடம், "யாராவது உன்ன வம்புக்கு இழுத்தா ஓடு, துரத்து. ஆனா அவங்கள சும்மா விடாதே" என்று தைரியமூட்டி துரத்துவதற்கான பயிற்சி கொடுக்கும் சோப்பு விளம்பரங்கள் வருவதை மாற்றத்திற்கான முதல் கதவு திறந்ததாக கொண்டாடிக் கொண்டிருக்கும் பெண்களை, நம் இந்தியன் தாத்தாவோ சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு இழுத்து செல்கிறார்.

பத்துமாத குழந்தை முதல் அறுபது வயது முதிய பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள், காதலிக்க மறுக்கும் பெண்கள் பொது இடங்களில் வெட்டிக் கொல்லப்படுகின்றனர், ஆசிட் வீச்சுக்கு ஆளாகின்றனர். சாதிய வன்முறைகள், ஆணவக் கொலைகள் பெற்றோர்களாலேயே நடத்தப்படுகின்றன. இணையத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் உச்சத்தில் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் புதுப்புது வடிவங்கள் எடுத்துப் பெருகிக் கொண்டேயிருக்கும் நாட்டில், இப்படிப்பட்ட பிற்போக்கான கருத்துகள், முற்போக்குவாதிகளிடம் இருந்து வரும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

கமல் சார் பேட்டியில் சொல்லியிருக்கும் ஒரே நல்ல விஷயம், "பெண்டாட்டியை வைத்து சூதாடியவர்களின் கதையை உன்னத கதையாக படித்துக் கொண்டிருக்கும் ஊரில் இப்படித்தான் செய்வார்கள்" என்பதுதான். இவ்வளவு புரிந்தும் அவர்கள் பக்கமிருந்து எப்படி பேசுகிறார் கமல் சார்?!

இப்படிக்கு...

'உங்கள் நான்' இடம் இருந்து சரியான பதிலை எதிர்பார்க்கும் ஒரு சராசரி பெப்பர் ஸ்ப்ரேயர்!

அடுத்த கட்டுரைக்கு