சல்மா ஹெய்க், ரேகா, எமிலியா கிளார்க்... காலங்காலமாக சினிமாவில் நிலவும் ஆணாதிக்கத்தின் சாட்சியங்கள்!

இந்தக் காட்சியில் சில பிரச்னைகள் இருந்தன என சல்மா முன்னரே சிலமுறை தெரிவித்திருந்தாலும், அந்த நாள் நடந்ததை, இதற்கு முன்பு அவர் வெளியே சொன்னதே இல்லை.
நடிகையும் தயாரிப்பாளருமான சல்மா ஹெய்க் ஆர்ம்சேர் எக்ஸ்பெர்ட் என்னும் தளத்துக்கு பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருந்தது தற்போது உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படமான டெஸ்பராடோ படம் பற்றி அதில் பேசியிருந்தார். "இப்படியான உடலுறவுக் காட்சி இப்படத்தில் இருக்கப்போகிறது என தயாரிப்பாளரும் சரி, இயக்குநரும் சரி, என்னிடம் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்போது சொல்லவே இல்லை" என்று 54 வயதான சல்மா ஹெய்க் , தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பான 'டெஸ்பராடோ' படம் பற்றிப் பேசியதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

இன்றளவிலும் டாப் டென் ரொமான்ஸ் காட்சிகள் பட்டியலில் 'டெஸ்பராடோ' படத்தில் வரும் காட்சிக்கு இடமுண்டு. ஆனால், சல்மா ஹெய்க்கின் பாட்காஸ்ட் கேட்பவர்கள், அந்தப் பட்டியலில் இருந்து 'டெஸ்பராடோ' காட்சியை நீக்கிவிடுவார்கள் என்பதுதான் உண்மை. இந்தக் காட்சியில் சில பிரச்னைகள் இருந்தன என சல்மா முன்னரே சிலமுறை தெரிவித்திருந்தாலும், அந்த நாள் நடந்ததை, இதற்கு முன்பு அவர் வெளியே சொன்னதே இல்லை.
"நாயகனுக்கும் நாயகிக்கும், இடையே கெமிஸ்ட்ரி குறைவாக இருக்கிறது என நினைத்தது படக்குழு. அதனால், அப்படியானதொரு காட்சியை எடுக்கத் தீர்மானித்தார்கள். என்னிடம் அந்தக் காட்சியில் ஆடையின்றி நடிக்கச் சொன்னபோது, நான் முழுவதுமாக மறுத்தேன். ஆனால், அவர்கள் விடவில்லை. என் மனநிலையை மாற்ற முயன்றார்கள். படத்தின் இயக்குநர் ராபர்ட்டும், நடிகர் ஆண்டோனியாவும் என்னை சகஜமாக வைத்துக்கொள்ள முயன்றார்கள். இருவரும் நல்லவர்கள். இறுதியாக அந்தக் காட்சி எடுக்கப்படும்போது, என்னுடன் சேர்த்து மூன்று பேர் மட்டுமே அந்த அறையில் இருந்தார்கள். ஆண்டோனியா மிகவும் ரிலாக்ஸ்டாக அந்தக் காட்சிக்குத் தயாராக இருந்தது, என்னை மேலும் அவமானத்துக்குள்ளாக்கியது. நான் அழுதுகொண்டேதான் அந்தக் காட்சியில் நடித்தேன்."

"படத்தில் வரும் அந்தக் காட்சி பல்வேறு சூப்பர் கட்ஸுடன்தான் வரும். இன்றளவிலும், அது ஓர் உத்தியாக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்துவந்தனர். உண்மையில், என்னால் அந்தக் காட்சியில் நடிக்க முடியவில்லை. என் டவலை அவர்கள் இழுக்கும் ஒவ்வொரு தருணமும், நான் அதைத் தர மறுத்தேன். என் அப்பாவும் என் சகோதரரும் இந்தக் காட்சியைப் பார்த்தால் என்ன யோசிப்பார்கள் என்பதுதான் என் பிரச்னையாக இருந்தது. வேறு வழியில்லாமல்தான், அந்தக் காட்சியை அத்தனை கட்களுடன் எடுத்தார்கள். இரண்டு நொடி படமாக்கியதும் அழ ஆரம்பித்துவிடுவேன். எனக்கு ஜோக் எல்லாம் சொல்லி அந்தக் காட்சியை எடுத்தார்கள். படம் வெளியானபோது, என் குடும்பத்துடன் படத்தைப் பார்க்கச் சென்றிருந்தோம். அந்தக் காட்சி வரும்போது, என் அப்பாவையும் சகோதரரையும், நான் வெளியே அழைத்துச் சென்றுவிட்டேன்" என அவர் அந்த பாட்காஸ்ட்டில் பேசிய போது, அந்தக் காட்சி முற்றிலுமாய் நம் முன் வீழ்ந்து, ஒரு பெண்ணை அவரின் அனுமதி இல்லாமல் எந்த அளவுக்குக் காட்சிப்பொருளாக சினிமா மாற்றியிருக்கிறது என்பது மட்டும்தான் தெரிந்தது.
இது ஏதோ ஹாலிவுட்டுக்கு மட்டும் உரித்தான பிரச்னை இல்லை என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டியது. இரண்டாண்டுகளுக்கு முன்பு, சினிமா விகடன் யூடியூப் தளத்துக்குப் பேட்டியளித்திருந்தார் ரேகா. பத்தாவது முடித்து சினிமாவுக்குள் நுழைந்த ரேகாவுக்கு, அடுத்தடுத்து இரண்டு பட வாய்ப்புகள் வருகின்றன. ஒன்று பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்'. அது ஆரம்பித்த 15 நாள்களில் கவிதாலயா சார்பாக 'புன்னகை மன்னன்' படத்துக்கு புக் ஆகிறார். "அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சில அந்தக் காட்சி எடுத்தாங்க. எனக்கு நடிப்பு பத்தி எல்லாம் பெருசா தெரியாது. கமல் சார், பாலசந்தர் சார் ரெண்டு பேரையும் பாத்துட்டு இருந்தேன். சாகும்போது கண்ண ஓப்பன்ல வச்சுட்டே நடிப்பியா, க்ளோஸ் யுவர் ஐஸ்’னு பாலசந்தர் சொன்னார். கமலிடம் ` சொன்னது ஞாபகம் இருக்குல்லடா'ன்னு பாலசந்தர் சார் கேட்டார். டக்குன்னு என்னைய கிஸ் பண்ணிட்டார் கமல். எங்கப்பா ஒத்துக்க மாட்டார்னு நான் புலம்ப ஆரம்பிச்சுட்டேன். ரெண்டு நாள் என்னால ஒண்ணுமே பண்ண முடியல. அம்மா, ஏமாத்தி முத்தம் வச்சுட்டாங்கம்மான்னு நான் சொல்லிக்கிட்டே இருந்தேன். எல்லோரும் சகஜமா அடுத்த வேலைக்குப் போயிட்டாங்க. என்னால முடியல. அப்பவே நான் இதப்பத்திப் பேசினேன்னு, பாலசந்தர் சார், கமல் சாருக்கு எல்லாம் என் மேல கோபம். ஆனா இப்போவரை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க" எனப் பேட்டியளித்திருப்பார்.
'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்னும் ஃபேன்டஸி தொலைக்காட்சித் தொடரில் நடித்திருப்பார் எமிலியா கிளார்க். அது தந்த புகழ் வெளிச்சத்தில், அவருக்கு அதன்பின் பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தன. 2019-ம் ஆண்டு இதே ஆர்ம்சேர் எக்ஸ்பெர்ட் குழுவுக்கு எமிலியா செய்த பாட்காஸ்ட் இன்னும் வலி மிகுந்தது.
"ரேகாவுக்கும், சல்மா ஹெய்க்கும் நடந்த சம்பவங்கள் கடந்த காலம், இப்பல்லாம் யாரு சார்" எனச் சிலர் யோசிக்கலாம். தற்போதும் அதுதான் நிலை என்பதைச் சொன்னது எமிலியா கிளார்க்கின் பாட்காஸ்ட். "டிராமா பள்ளியில் பயின்ற எனக்கு, இது ஒரு வேலை எனத் தெரியும். கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஸ்கிரிப்ட்டில், நிர்வாணக் காட்சிகள் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், எனக்கு ஏன் எந்த ஆடையும் தராமல் காட்சிப்படுத்துகிறார்கள் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. பாத்ரூமில் அழ வேண்டிய மட்டிலும் அழுதுவிட்டு, மீண்டும் அடுத்த காட்சிக்குத் தயாராக வேண்டும். வேறு வழியில்லை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
பத்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது யாரேனும் என்னை அதுபோன்ற கதாபாத்திரங்களுக்கு அழைத்தால், அது என் தேர்வாக மட்டுமே இருக்கும்" என்றார்.
பின்னாள்களில், எமிலியாவை புக் செய்த எல்லா நிறுவனங்களும், அவரிடம் அப்படியானதொரு காட்சியை சம்பிரதாயத்துக்காகவாவது படத்தில் வைக்க முடிவு செய்தார்களாம். ஆனால், எமிலியா அதற்கு மறுத்துவிட்டார். '50 ஷேட்ஸ் ஆஃப் கிரே' படத்திலிருந்து எமிலியா கிளார்க் விலகியதும் அதனால்தான்.

நாயகிகளை மையப்படுத்திய சினிமாக்கள் சமீபமாகத்தான் உலகளவில் அதிகரித்து வருகின்றன. ஹாலிவுட் அளவுக்கு இல்லையென்றாலும், இந்தியாவிலும் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு பெண்களை முதன்மைப்படுத்தும் சினிமாக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், முறையாக அனுமதிபெறாமல், முதல் பட வாய்ப்பு, பெரிய ஹீரோ என வெவ்வேறு காரணங்களில் பெண் உடல் காட்சிப்பொருளாக மாற்றப்பட்டு ரசிகர்களை மகிழ்விப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமா என்பது ஒரு கலை. ஆனால், எல்லாவற்றையும் போலவே அதுவும் ஆணாதிக்கம் மிகுந்ததுதான்!