Published:Updated:

மினி சிறுகதை: ஒரு பெண் ஒரு வாசனை ஒரு வலி

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

அந்தச் சமையலறை ஜன்னல் வழியே தோசை வார்க்கும் மணம் நாவை சுண்டியிழுத்தது ரம்யாவை.

மினி சிறுகதை: ஒரு பெண் ஒரு வாசனை ஒரு வலி

அந்தச் சமையலறை ஜன்னல் வழியே தோசை வார்க்கும் மணம் நாவை சுண்டியிழுத்தது ரம்யாவை.

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

இடையிடையே `இஸ்... இஸ்...’ என்கிற இசை வேறு. குட்டிப் பெண் ரம்யா, இரவு டியூஷன் முடிந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தாள்.

``பசிக்குதும்மா... எப்போம்மா தோசை போடுவ?” என்று பரபரத்தாள்.

தாய் சத்யா, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். மகளின் பசி அவளது மனத்தை அசைக்க, தன் வலிகளை மறந்து வேக வேகமாக இயங்கினாள்.

தோசை வார்த்தபடியே உருளைக்கிழங்கு குருமாவையும் தயார் செய்துகொண்டிருந்தாள்.

சத்யா மதியம் வேலை நெருக்கடிக்கு இடையில் கொஞ்சமாகத்தான் சாப்பிட்டிருந் தாள். அவளின் நாவிலும் சுவை நரம்புகள் இசைக்க, வயிற்றில் பசிநெருப்பு கனன்றது. அவசரங்களுக்கிடையில் அவ்வப்போது தண்ணீர் குடித்து, தனது பசியைச் சமாளித்த படியே மகளுக்கான டிபன் தயாரானது.

தோசைகூட ரம்யாவுக்கு வித்தியாசமாக வேண்டும். ஒவ்வொரு தோசையும் ஸ்பெஷலாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் சாப்பிடுவாள்.

``நெய் தோசை ஒண்ணு , அப்புறம் சர்க்கரை தோசை, முட்டை தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை ஒண்ணுன்னு. மொத்தமா அஞ்சு தோசை’’ என்று பட்டியலிட்டாள் மகள் ரம்யா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்யாவுக்கோ தண்ணீரைக் குடித்தாலும் பசி கனன்றது. தோசை வார்க்க வார்க்க, சாப்பிடத் தூண்டும் வாசனை வேறு அதிகரித்தது. கடைசியில் பாசமே வென்றது.

`மகளுக்கு அடுத்து நமக்குத்தான்’ என மனத்தைச் சமாதானப்படுத்திக்கொண்டு கடைசி தோசையில் பொடியைத் தூவி நெய் வார்த்தவளின் காதுகளில், கணவன் கார்த்திக் கார் நிறுத்தும் சத்தம் விழுந்தது.

பிசினஸ் பிசினஸ் என எப்போதும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கும் கார்த்தி வீட்டுக்குள் நுழைந்ததும் வழக்கம்போல, ``எனக்கும் பசிக்குது சத்யா. தோசை கிடைக்குமா?’’ என்றான்.

``நிச்சயமா” என்ற சத்யாவுக்குள் இரண்டாவது முறையாக அவளது பசி மன்றாடிக்கொண்டிருந்தது. மறுபடியும் தண்ணீர் குடித்தால் சாப்பிட முடியாதே... அதனால் அவனுக்கும் அடுத்தடுத்து ஸ்பெஷல் தோசைகளைத் தயார்செய்து சிரித்தபடியே பரிமாறினாள்.

அவளின் பசி அவளிடம் போராடி, கடைசியில் தோற்றுப்போய் அமைதியானது.

சத்யா சாப்பிட அமர்ந்தபோது, சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே அவளுக்குள் காணாமல்போயிருந்தது. பெயருக்கு மூன்று தோசைகளைப் போட்டுக்கொண்டு உருளைக்கிழங்குக் குருமாவைத் தேடினாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இன்னிக்கு குருமா சூப்பர்!” என்ற அப்பாவும் மகளும் சுத்தமாகச் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

சத்யா வழக்கம்போல இட்லிப்பொடியில் நல்லெண்ணெய் சேர்த்து தொலைக்காட்சிப் பாடலோடு மூன்று தோசைகளையும் சாப்பிட்டு முடித்தாள்.

அடுத்தடுத்த வேலைகள் அவளுக்குக் காத்திருந்ததால், தோசையைப் பசி உணரும் வேளையில் ருசித்துச் சாப்பிட முடியவில்லையே என்கிற ஏக்கத்தையும் சிரித்தபடியே கடந்தாள்.

அடுத்த நாள்... அவளுடைய `பசியின் மணம்’ முகநூல் பக்கத்தில் சிறு கவிதையானது.

லைக்குகள் அள்ளினாள். `வலிகளையும் இந்த உலகம் விரும்புகிறதே’ என்று அவள் மனம் வலியுடன் சிரித்தது.

`இனிமேல்

ஒவ்வொரு வீட்டிலும்

இரவு உணவின்போது

முதல் தோசையைச்

சமைப்பவள் சாப்பிடட்டும்.’

- இப்படி முடிந்திருந்தது அந்தக் குறுங் கவிதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism