Published:Updated:

“அந்த ஒரு வருஷத்தில் என் வாழ்க்கையே மாறிடுச்சு!” - வசுந்தரா தாஸ்

மக்களோடு மக்களாக...

பிரீமியம் ஸ்டோரி

நடிப்பு, குரல் வளம், நடனம் மூன்றும் ஒரு கலைஞருக்கு ஒருசேர அமைவது அரிது. இவை அனைத்தும் அமையப் பெற்ற வசுந்தரா தாஸ், குறுகிய காலத்தில் தமிழ் உட்பட பல மொழி சினிமாவிலும் புகழ்பெற்றார். சினிமாவில் பல வருடங்களாக இடைவெளி நீடிக்கிறது என்றாலும், வசுந்தரா தாஸ் இசைத்துறையில் இன்று வரை பிஸிதான்.

வருடங்கள் ஓடினாலும், இன்றும் அதே இளமைத் துடிப்புடன் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் பேட்டியளிப்பவரின் பேச்சில் நிதானமும் மாறாப் புன்னகையும் கடைசிவரை தொடர்ந்தது.

“பெங்களூரு வாழ் தமிழ்க் குடும்பம்தான் நாங்க. ஆறு வயசுல முறைப்படி இந்துஸ்தானி மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். காலேஜ் படிக்கிறப்போ பல்வேறு காலேஜ் கல்சுரல் நிகழ்ச்சிகள்ல பாடகியா என் திறமையை வெளிப்படுத்தினேன். பி.எஸ்ஸி முடிச்சதும், ‘ஒரு வருஷம் எனக்குப் பிடிச்ச இசைத்துறையில மட்டும் வேலை செய்றேன். அதுல அர்த்த முள்ள மாற்றங்கள் உருவாகலைனா உங்க விருப்பப்படி படிப்பு சார்ந்த துறைக்குப் போறேன்’னு பெற்றோர்கிட்ட சொன்னேன். சம்மதிச்சாங்க.

அதுவரை சினிமா பின்னணிப் பாடகியாக ணும்னு நான் நினைச்சதேயில்லை. தனி ஆல்பம்ல பாடுறதுதான் என் விருப்பம். சென்னை வந்தேன். சிலரைச் சந்திச்சு என் முந்தைய ஆல்பங்களைக் காண்பிச்சு வாய்ப்பு கேட்டேன். ஒருநாள் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்திக்கக் கூட்டிட்டுப்போனாங்க. அங்கிருந்த சினிமா துறையினர் சிலர், ‘நீங்க சினிமாவில் நடிக்கிறீங்களா?’ன்னு கேட்டாங்க. பதில் சொல்ல முடியாம சிரிச்சேன். அடுத்த நாளே ‘அலைபாயுதே’ படத்துக்கு என்னை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தாங்க. செலக்ட் ஆகலை. மறுநாள், ‘ஹே ராம்’ படத்துக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து என்னை செலக்ட் செய்தாங்க. என்னுடையது பெரிய குடும்பம். சினிமாவில் நடிக்க குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்கி, ‘ஹே ராம்’ படத்துல நடிச்சேன். பிறகு, நான் எதிர்பாராத வகையில் சினிமாவில் பின்னணிப் பாடகியாவும் நடிகையாவும் அடையாளம் கிடைச்சது”

– கன்னக்குழி சிரிப்பில் வசுந்தரா தாஸின் முகம் பிரகாசிக்கிறது.

“அந்த ஒரு வருஷத்தில் என் வாழ்க்கையே மாறிடுச்சு!” - வசுந்தரா தாஸ்

புகழுடன் இருந்தபோதே நடிப்பிலிருந்து விலகியது ஏன்?

‘ஹே ராம்’ படத்துக்காக செலக்ட் பண்ணியதுமே, டயலாக் ஸ்கிரிப்ட்டைக் கொடுத்து ஹோம்வொர்க் பண்ணிட்டு மூணு நாள்ல ஷூட்டிங் வரச்சொன்னாங்க. அதுல நடிச்ச மத்த நடிகர்களுக்கும்லைப்படித்தான் கொடுத்தாங்க. முறையான முன் திட்டமிடலுடன் அந்தப் படம் எடுக்கப்பட்டது. ‘மான்சூன் வெடிங்’ (இந்தி), ‘ராவணபிரபு’ (மலையாளம்) படங்களும் முன்திட்டமிடலுடன் எடுக்கப்பட்டதால, அவற்றிலும் நிறைவான அனுபவத்துடன் நடிச்சேன். ‘சிட்டிசன்’ படத்துல அஜித் உடன் நடிச்சதும் நல்ல அனுபவம். ஆனா, இதுபோல நான் நடிச்ச மற்ற படங்கள் பலவும் முன் திட்டமிடலுடன் எடுக்கப்படல. ஷூட்டிங் போன பிறகுகூட டயலாக் பேப்பர் கொடுக்க மாட்டாங்க. அப்போ தங்களோட கேரக்டர்ல நடிகர்கள் எப்படி ஒன்றிப்போய் நடிக்க முடியும். ஒரு மூட்டையில் அரைகுறை ஆடைகளைக் கொண்டுவந்து, தேவையான டிரஸ்ஸை செலக்ட் பண்ணி எடுத்துக்கச் சொல்லுவாங்க. அத்தகைய பொம்மை மாதிரியான கேரக்டர்களில் மட்டுமே நடிச்சு புகழ்பெறுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. அதனாலதான் நடிப்புக்கு பிரேக் விட்டேன்.

நடிப்புக்கு இடையே பின்னணிப் பாடகியானது எப்படி?

‘ஹே ராம்’ ஷூட்டிங்குக்கு இடையில், ‘முதல்வன்’ படத்துல ‘சகலக்க பேபி’ பாடல் பாடும் வாய்ப்பு கிடைச்சுது. அந்தப் பாடல் பெரிய ஹிட்டானதுடன், ஃபிலிம் ஃபேர் விருது கிடைச்சுது. என்னோட இசை ஆல்பமும் ரிலீஸாச்சு. ஒரு வருஷத்துக்குள்ள எனக்கான அடையாளம் கிடைச்சதால, வீட்டுலயும் தொடர்ந்து என் விருப்பப்படி வேலை செய்ய ஒத்துழைப்பு கொடுத்தாங்க. தொடர்ந்து ‘ஐய்யோ பத்திகிச்சு’(ரிதம்), ‘கட்டிப்புடி’(குஷி), ‘பூக்காரி’(சிட்டிசன்), ‘தத்தை தத்தை’(மன்மதன்), ‘சரிகமே’ (பாய்ஸ்) உட்பட தமிழிலும், பல மொழி சினிமாவிலும் நிறைய ஹிட் பாடல்கள் பாடினேன்.

வெஸ்டர்ன், குத்துப்பாட்டு பாடல்களுக்கு முழுமனதோடுதான் ஒப்புக்கொண்டீர்களா?

நிச்சயமா இல்லை. ஒரு பாடல் அல்லது ஒரு கதாபாத்திர நடிப்பு பிரபலமாகிட்டா, அதுபோன்ற வாய்ப்புகளே பாடகர்களுக்கும் நடிகர்களுக்கும் தொடர்ந்து வரும். அந்த ‘டைப் காஸ்ட்’ (Type Cast) நடைமுறை எனக்கும் நடந்துச்சு. ‘சகலக்க பேபி’ பாட்டு ஹிட்டானதால, அதன் பிறகு அதே மாதிரி பாடல்கள்தாம் எனக்கு அதிகம் வந்துச்சு. அதனாலயே எனக்கு முன்கூட்டியே பாடல் வரிகளை அனுப்பச்சொல்லி ஆபாச வார்த்தைகள் இல்லைனாதான் பாடவே சம்மதிப்பேன். சென்னை வரும்வரை, பலமுறை கேட்டும் எனக்குப் பாடல் வரிகளை அனுப்பாத சூழலும் உண்டு.

“அந்த ஒரு வருஷத்தில் என் வாழ்க்கையே மாறிடுச்சு!” - வசுந்தரா தாஸ்

இப்படி முழு உடன்பாடு இல்லாமதான் பல பாடல்களைப் பாடினேன். ஏன்னா, திரைத்துறையில ஆரம்பக்கட்டத்துல இருக்கிற ஒரு கலைஞர், நியாயமான கட்டுப் பாடுகளை விதிச்சா, பிறகு வாய்ப்பு களே சரியா வராது. எல்லோரும் புறக்கணிச்சுடுவாங்க. ஓர் அடை யாளத்தை ஏற்படுத்திக்கிட்ட பிறகு நம்ம கண்டிஷனை சொன்னா, ஒருசிலராவது அதை ஏத்துப்பாங்க.

மெலோடி பாடல்களைப் பாட ணும்னு நிறையவே ஆசைப்பட்டேன். அப்படியான வாய்ப்புகள் வரலை.

1980, 90-களில் தொடர்ச்சியா இளையராஜா சார் இசையில் எஸ்.ஜானகி அம்மா, மெலோடி, குத்துப்பாட்டு, டூயட், கிராமியப் பாடல்னு பலதரப்பட்ட பாடல்களைப் பாடினாங்க. அவங்கமேல இளையராஜா சார் முழு நம்பிக்கை வெச்சு அந்த வாய்ப்புகளைக் கொடுத்தார். அப்படி எல்லா இசையமைப்பாளரும் வாய்ப்பு கொடுத்தால்தானே, பல பின்னணிப் பாடகர்களின் திறமை வெளியே தெரியும். நாங்களே போய், ‘இதுமாதிரியான பாடல் பாட வாய்ப்புக் கொடுங்க’ன்னு கேட்க முடியுமா. நல்ல வாய்ப்பு வந்தால் மட்டும், நிச்சயம் சினிமாவில் பாடுவேன், நடிப்பேன்.

சொந்த இசைக்குழு பணி குறித்து...

டிரம்ஸ் இசைக்கலைஞரான என் கணவர் ராபர்டோ நரேனும் நானும் 2005-ல் ‘டிரம்ஜம்’னு தனி இசை கம்பெனியைத் தொடங்கினோம். வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகள் செய்கிறோம். எங்க இசைக்குழுவுடன் குறைந்தபட்சம் ரெண்டு மாசமாவது பயிற்சி எடுத்துட்டுதான் நிகழ்ச்சியை நடத்துவோம். அதில் தொடக்கம் முதல் இறுதிவரை ரசிகர்கள் உற்சாகமாக நிகழ்ச்சியை ரசிப்பாங்க. தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் கூட்டு முயற்சியுடன் வேலை செய்ய ஊக்கப்படுத்துற மாதிரியான பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும், பயிற்சிகளையும் கடந்த 15 வருஷமா நடத்தறோம். மேடை நிகழ்ச்சி களிலும், நான் வெளியிடும் சிங்கிள் ட்ராக்ஸ், தனி ஆல்பங்கள்லயும் தொடர்ந்து பாடுறேன்.

பெங்களூரில் நடத்தும் ‘கம்யூனிட்டி டிரம்ஜம்’ நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து..

‘ரங்கோலி மெட்ரோ ஆர்ட் சென்ட’ருடன் இணைந்து அங்கேயே மாதம்தோறும் மூணாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 4 – 6 மணி வரை இந்த இசை நிகழ்ச்சி நடக்கும். அதில் இசை அனுபவம் உள்ளவங்க, இல்லாதவங்க, சாமான்ய மக்கள் யார் வேணாலும் கலந்துக்கலாம். முன்பதிவும் தேவையில்லை. கட்டணமும் கிடையாது. சராசரியா 500 பேர் வரை வருவாங்க. அங்க வரும் எல்லோருக்கும் டிரம்ஸ் உள்ளிட்ட சில இசைக்கருவிகளைக் கொடுத்து, அவங்களுக்குத் தெரிஞ்ச, பிடிச்ச மாதிரி வாசிக்கச் சொல்வோம். நான், எங்க குழுவினர், பொதுமக்கள் உட்பட எல்லோரும் இணைஞ்சு ஒரே அரங்கத்துல ரெண்டு மணி நேரம் இசைக்கருவிகளை வாசிப்பது புதுவிதமான அனுபவம்.

உலகில் வார்த்தைகள் இல்லாமல் மக்களை இணைக்கும் ஒரே யுனிவர்சல் மொழி இசை மட்டும்தான். இசைக்கருவிகளை வாசித்தபடி, அவரவர் தங்களுக்குப் பிடிச்ச மாதிரி வார்த்தைகள் இல்லாத இசை ஒலிகளை ஒலிக்கச் செய்யலாம். அதன் மூலம் மனிதர்களுக்குப் புத்துணர்வு ஏற்படும். வேறுபாடில்லாமல் எல்லாத் தரப்பு மக்களும் பழகுவதுடன், சாமான்ய மக்களும் தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். கடந்த ஏழு வருஷமா நாங்க நடத்தும் இந்த நிகழ்ச்சி, கொரோனாவால் தற்காலிகமா தடைப்பட்டிருக்கு.

மாடித்தோட்டப் பராமரிப்பு!

“அந்த ஒரு வருஷத்தில் என் வாழ்க்கையே மாறிடுச்சு!” - வசுந்தரா தாஸ்

இத்தனை பிஸியிலும் மாடித்தோட்டத்தையும் அழகாகப் பராமரிக்கிறார் வசுந்தரா. ``சின்ன வயசுல வீட்டில் அம்மா மாடித் தோட்டம் வெச்சிருந்தாங்க. அதைப் பார்த்து வளர்ந்த எனக்கும் ஆர்வம். வீட்டு மொட்டை மாடியில் சின்னதா தோட்டம் வெச்சிருக்கேன். அதில், தக்காளி, வாழை, பீன்ஸ், முள்ளங்கி, ஸ்ட்ராபெரி உள்ளிட்ட சிலவகை பயிர்களை வளர்க்கறேன். தினமும் என் செடிகளுடன் தனியா பேசுவேன். பொழுதுபோக்குக்குச் செய்ற இந்த மாடித்தோட்ட விவசாயத்தைப் பெரிய அளவில் செய்ய வாய்ப்புக் கிடைச்சா ரொம்பவே சந்தோஷப்படுவேன்'' என்கிறார் இந்த சகலக்க பேபி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு