Published:Updated:

சாய் பல்லவியின் கார்கி!

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
சாய் பல்லவி

கிராமமோ, நகரமோ எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நிமிடமும்... ஏன் ஒவ்வொரு விநாடியுமே பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன

சாய் பல்லவியின் கார்கி!

கிராமமோ, நகரமோ எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நிமிடமும்... ஏன் ஒவ்வொரு விநாடியுமே பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன

Published:Updated:
சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
சாய் பல்லவி

``இப்பயெல்லாம் அவள் என்னை அப்பாவா பாக்கறதில்ல... ஆம்பளையா பார்க்கறா!’’ என்று அந்த ஒன்பது வயதுக் குழந்தையின் அப்பா (சரவணன்) வெளிப்படுத்தும் கதறல், ஈட்டியாய் பாய்கிறது சமூகத்தின் மீது.

``மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா அப்படினு சொல்றதை யெல்லாம் கொஞ்சமும் நம்பிடாதே’’ என்று நிருபர் அகல்யா (ஐஸ்வர்ய லெட்சுமி) எள்ளல் சிரிப்புடன், அந்தச் சிறுமியிடம் அலைபேசியில் சொல்லும்போது, சமூகத்தின் முகத்திரை நார்நாராய்க் கிழிந்து தொங்குகிறது.

கொஞ்சம் ஆழமாக யோசித்தால், ‘அப்பா எனும் உறவுகூட பொய்யோ’ என்று பயமாகத்தான் இருக்கிறது. அத்தனை அப்பாக் களையும் சொல்லிவிட முடியாது என்றாலும், ஆங்காங்கே கேள்விப்படும் விஷயங்கள் அப்படித்தானே இருக்கின்றன. மகளின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; தந்தையால் கர்ப்பமான மகள் என்று தினம் தினம் நீள்கின்றனவே பட்டியல்கள்!

சதைப் பிண்டமும் பெண்குறியும் மட்டுமே தேவைப்படும் ஆணுக்கு, மனைவி என்ன... மகள் என்ன?

‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட் டுமே தெரியும்... முத்தம் காமத்தைச் சேர்ந்தது இல்லை என்று’ என்கிற டயலாக், பல சமயங் களில் பொய்யாகிப் போய்விடுகிறதே!

கலாசாரம், பண்பாடு, கௌரவம் என்கிற போர்வைகளால் பெரும்பாலான கொடுமை களும் கொடூரங்களும் இங்கே மூடி மறைக்கப் பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மூடி மறைத்துவிட மட்டுமே கற்றுத்தரப்படுகின்றன. மகளைச் சூறையாடியது சொந்தத் தந்தையாக இருந்தாலும், அதை மறைத்துவிடும்படிதானே அம்மாக்களை அழுத்தி வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.

சாய் பல்லவியின் கார்கி!

2018-ம் ஆண்டு சென்னை, அயனாவரத்தின் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 வயதுச் சிறுமி, தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவத் தைக் கேட்டு நாடே அதிர்ந்தது. அப்பார்ட் மென்ட்டின் செக்யூரிட்டி, லிஃப்ட் மேன் என்று ஆரம்பித்து, அந்த அப்பார்ட்மென்ட் தொடர்புடைய பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண் பணியாளர்கள் கூட்டாகச் சேர்ந்து நாள் கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை அறிந்து கொந்தளித்தது சமூகம். இதைப் பின்னணியாகக் கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகியிருக்கிறது `கார்கி’ திரைப்படம்.

அந்தச் சம்பவத்தை அப்படியே பிரதி யெடுக்காமல், திரைக்காக பல மாற்றங்களுடன், அதேசமயம், அந்தக் கொடூரத்தின் வலி கொஞ் சமும் குறைந்துவிடாமல் படம்பிடித்திருக் கிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன். அதற்காகவே அவருக்கு முதலில் வாழ்த்துகள்.

கார்கி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி. ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கிச் சுமக்கிறார்.

அப்பார்ட்மென்ட்டில் ஒன்பது வயது மாணவி, நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பலரையும் உறைய வைக்கிறது. இதில், ஐந்தாவது நபராக அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி கைநீட்டப் படுகிறார்... கைது செய்யப்படுகிறார். தனியார் பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்க்கும் கார்கியின் அப்பாதான் அந்த செக்யூரிட்டி. பள்ளிப் பருவத்தில் ஒரு தங்கை, இட்லி/தோசை மாவு அரைத்து விற்று தன் பங்குக்கு உழைக்கும் அம்மா. பணத்துக்குக் குறைவு இருந்தாலும் பாசத் துக்குக் குறைவில்லாத நடுத்தர வாழ்க்கை.

காதலனை, பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடிக்கப்போகும் கனவுகளுடன் கார்கி சிறகடிக்கும் சமயத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தன் தந்தையும் கைதாகியிருக்கும் செய்தி இடியாக இறங்குகிறது. ஆனால், அழுது அரற்றாமல், காதலனிடம் உதவி கேட்டு நிற்காமல் தனியொருத்தியாய் எதிர்கொள்ளத் துணியும் இடத்தில் தொடங்குகிறது கார்கியின் ஓட்டம்.

சிறுவயதில் மகள் கார்கிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூஷன் ஆசிரியரை தலையில் ஓங்கி அடித்து, ‘இந்த மாதிரி மனுஷங்களை பார்க்கும் போது அப்பாவை நினைச்சுக்க; தைரியம் தன்னால வரும்’ என்று கார்கியின் ஹீரோவாக நிற்கிறார் அப்பா. அத்தகைய அன்புக்குரிய அப்பாவே சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் எனும்போது எந்த மகளால் தாங்க முடியும்?

நன்கு தெரிந்த வழக்கறிஞர், ‘எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்மா’ என்று ஆரம்பத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, ‘இதுமாதிரியான சென்ஸிட்டிவான கேஸில் வாதாடக் கூடாது என்று வழக்கறிஞர் சங்கம் கட்டளையிட்டிருக் கிறது’ என்று சொல்லி விலகிக்கொள்ள, இடிந்து போகிறார் கார்கி. அவரின் பரிதாபமான நிலையைக் கண்டு வருந்தும் அந்த வழக்கறிஞரின் ஜூனியர் (காளி வெங்கட்), ‘நான் வாதாடுகிறேன்’ என்று முன்வருகிறார். திக்குவாய் காரணமாக தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் அந்த ஜூனியர், இரவில் மருந்துக்கடையில் வேலை பார்ப்பவர். அதுவே, இந்த வழக்கில் அவருக்குக் கைகொடுக்கிறது.

சாய் பல்லவியின் கார்கி!

மீடியாக்கள் ஒருபக்கம் துரத்துகின்றன; ஊரே தூற்றித் தள்ளுகிறது; ஆசிரியை வேலையைப் பறிக்கிறது பள்ளி நிர்வாகம்; அம்மாவின் மாவு பிசினஸ் மொத்தமாக முடக்கப் படுகிறது. இதற்கு நடுவே, அப்பாவைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக் கத்துக்காக அந்த ஜூனியர் வக்கீலுடன் அலைந்துதிரிகிறார் கார்கி. ஒரு கட்டத் தில் `க்ளு' கிடைக்க, ஜாமீனில் வெளியில் வருகிறார் அப்பா.

நீதிபதியாக ஒரு திருநங்கையை நடிக்க வைத்திருப்பதற்கு ஒரு சல்யூட்! பாதிக்கப் பட்டிருப்பது பெண் குழந்தை என்றாலும் வழக்கின் போக்கை உணர்ந்து ஜாமீன் தரும் நீதிபதியை மறைமுகமாகத் தூற்று கிறார் அரசு வழக்கறிஞர். ‘சாதாரண நீதிபதியா இருந்திருந்தா கேஸோட சீரியஸ்னஸ் புரிஞ்சிருக்கும்’ என அவர் முணுமுணுக்கும் இடத்தில், ‘ஒரு பொண் ணுக்கு எங்கெங்க வலிக்கும்னும் எனக்குத் தெரியும். ஒரு ஆணுக்கு எங்கெங்க திமிரு இருக்கும்னும் எனக்குத் தெரியும்’ என்று நீதிபதி தரும் பதில்... வேற லெவல்.

போகப்பொருளாகவும், அடிமையாக வும் மட்டுமே அடையாளப்படுத்தியும், வெளிப்படுத்தியும், கதைகளாக, காப் பியங்களாக, இதிகாசங்களாக எல்லா வற்றிலும் கற்பிதம் செய்யப்பட்டும் சுயத்தை இழந்து நிற்கும் சாதி... பெண் சாதி. அதிலிருந்து வெளிப்பட நினைத் தால், இந்த காமாந்தகர் உலகத்தைக் காட்டிக்காட்டியே பயமுறுத்தி வீட்டுக் குள் பூட்டி வைக்கிறது சமூகம்.

கிராமமோ, நகரமோ எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நிமிடமும்... ஏன் ஒவ்வொரு விநாடியுமே பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இந்தப் பாதகங்களைச் செய்பவர்களில் பெரும் பாலானவர்கள், குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் நன்கு அறிமுகமான நபர்களே. அது ஆசிரியராகவோ, அண்ணனாகவோ, பக்கத்து வீட்டு அங்கிளாகவோ தான் இருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்படும்

பெண் குழந்தைகளின் மனநிலை; அவர்கள் இந்த சமூகத்தையும் மக்களையும் எதிர்கொள்ளும்போது சந்திக்கும் பிரச்னைகள் என ஆழமாகப் பதிவாகி யிருக்கிறது காட்சிகளாக!

கார்கியின் அப்பா, அந்த ஐந்தாவது நபர் இல்லை யென்றால், அவர் யார்? அவரா... இவரா... என்று நீளும் சஸ்பென்ஸ், குழந்தையின் அப்பா சரவணனை யும்கூட சந்தேகிக்க வைக்கிறது. ஆனால், கடைசி நிமிடத்தில் இவர்தான் என்று வந்து நிற்கும்போது மொத்தமாக அதிர்ச்சிதான்!

படம் நெடுகவே தெறிக்கும் ரகங்களாகத்தான் இருக்கின்றன வசனங்கள் அனைத்தும்!

அப்பாவைக் காப்பாற்ற தனியொருத்தியாக வெளியில் கிளம்பும் கார்கி சொல்வதை நம்ப மறுக்கிறார் அம்மா. ‘நேரம், காலம், விதி எல்லாத் தையும் நம்பு. ஆனா, என்ன நம்பாதே. ஏன்னா நான் பொண்ணு’ என்று சொல்லி முகம் புதைத்து கார்கி அழும் இடம், நம் வீடுகள் பலவற்றையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

தங்கை பெரியமனுஷியாகும் தருணம்தான் க்ளைமாக்ஸ். மஞ்சள் நீராட்டு விழா கொண்டாட் டங்கள் களைகட்டிய நேரம், அலைபேசியில் தன்னிடம் பேசும் தொலைக்காட்சி நிருபர் அகல்யா விடம், ‘தெரியலக்க வலி வந்துடுச்சுனு சொன்னேன். உட்கார வெச்சுட்டாங்க’ என்று அந்த பிஞ்சு சொல்வது, சமூகத்துக்கு சேதி சொல்கிறது.

‘ஆறு மணிக்குமேல அங்க போகாதே... இங்க போகாதே என்று அட்வைஸ் மழையா உங்க அக்கா பொழிய ஆரம்பிச்சிருப்பாளே?’

‘இல்லக்கா இப்பயெல்லாம் அது குறைஞ்சுடுச்சு!’

‘ஓ... அட்வைஸ் பண்றதால எதுவும் மாறிடாதுங் கறத இப்பத்தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கா போல உங்க அக்கா.’

உண்மைதானே... காலகாலமாக அறிவுரைகள் சொல்லப்பட்டும், இதுவரையில் எதுவும் மாறிவிட வில்லைதானே!

‘கார்கி’ படக்குழுவுக்கு அவள் விகடனின் வாழ்த்துகள்!