லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

மாமியாரைத் தனிக்குடித்தனம் அனுப்புற மொமன்ட்!

நீலவேணி
பிரீமியம் ஸ்டோரி
News
நீலவேணி

ஸ்டாண்டு அப் காமெடியன் நீலவேணி

“ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது எங்க பேச்சுப்போட்டி நடந்தாலும் ‘நீல வேணிக்கு முதல் பரிசை எடுத்து வெச்சிருங்க’ன்னு சொல்லுவாங்க. எல்.கே.ஜில இருந்து பேசியிருக் கேன்னா பார்த்துக்கோங்க. அப்பெல்லாம் கைட் பண்றதுக்கு யாரும் இல்ல. நானேதான் லைப்ரரிக்குப் போய் புத்தகங்களை ரெஃபர் பண்ணி பாயின்ட்ஸ் எடுத்துப் பேசுவேன்”

- தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் ஸ்டாண்டு அப் காமெடியன் நீலவேணி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர். ‘கலக்கப்போவது யாரு’, ‘காமெடி ஜங்ஷன்’, ‘தில்லு முல்லு’, ‘காமெடி கிளப்’ எனப் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய தொடக்கமும் பட்டிமன்ற மேடைகள்தான்.

“ப்ளஸ் டூ படிச்சபோது வீட்டுக்குப் பக்கத்துல பொங்கல் விழா பட்டிமன்றத்துல பேசினேன். அதைப் பார்த்துட்டு என் சொந்தக்காரங்க பட்டி மன்ற நடுவர் எம்.ஆர்.முத்துகிட்ட சொல்லியிருக் காங்க. அவருதான் முதன்முதல்ல எனக்கு வாய்ப்பு குடுத்தாரு” என்பவர் 2012-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 3,000 மேடைகளில் பேசியிருக்கிறார்.

மாமியாரைத் தனிக்குடித்தனம் அனுப்புற மொமன்ட்!

“கிராமங்களில், விழாக்களில் மேடைகளில் பேசுறதுதான் எங்களுக்கு உயிர்மாதிரி. காசு குடுத்தாலும் குடுக்காட்டியும் எங்களால பேசாம இருக்கவே முடியாது. பணத்தைத் தாண்டி எங்களுடைய சந்தோஷம், நிம்மதி எல்லாமே அதுதான். கொரோனா பரவுறதால மேடைகள்ல பேசுற வாய்ப்பு இல்ல. அது நாங்கெல்லாம் தனித்தீவுல இருக்கிற மாதிரி வருத்தத்தைக் குடுக்குது” என்பவர், தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

“மதுரை முத்து அண்ணாதான் ஸ்டாண்டு அப் காமெடியனா பர்ஃபாம் பண்றதுக்கு வாய்ப்பு குடுத்தாரு. சீரியஸா பேசணும்னா எவ்ளோ நேரம்னாலும் பேசிடலாம். காமெடியா பேசுறது கஷ்டம்தான். நல்லா வொர்க்அவுட் ஆகும்னு நாம சொல்ற ஜோக் குக்கு ஒருத்தர்கூட சிரிக்க மாட்டாங்க. சும்மா கவுன்டருக்காக ஏதாவது பேசுவோம் அது பயங்கரமா ஹிட் ஆயிடும். பஸ்ல போகும்போது, வீட்ல நடக்குற விஷயங்கள்னு ஏதாவது கன்டென்ட் கிடைக்கும்போது அதை உடனே குறிச்சு வெச்சிட்டு டெவலப் பண்ணிடுவேன்” என்றவர் அதற்கு சாம்பிளாக ஒரு நிகழ்வைப் பகிர்ந்தார்.

“மாமியாரா மருமகளான்ற தலைப்புல பட்டிமன்றத்துல பேசிட்டு இருந்தேன். நான் மருமகள் பக்கம். மாமியாரையெல்லாம் போட்டுத் தாக்கிட்டு இருந்தேன். பேசும் போது, என்னதான் மாமியாருக்கும் எனக்கும் பிரச்னை வந்தாலும் நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன்னு சொன்னேன். கீழே இருந்து ஒருத்தர், ‘நீ கிழிக்கிற கிழியைப் பாத்தா உன் மாமனார், மாமியார்தான் தனிக்குடித்தனம் போவாங்க’னு கவுன்ட்டர் கொடுத்தாரு. அடுத்த மேடையில அந்த கன்டென்ட்டையே ஜோக்கா பேசிட்டேன்” எனும் நீலவேணி பல தடை களைத் தாண்டி இந்தத் துறையில் நீடிக்கிறார்.

“பட்டிமன்றம் பேசப் போறதுக்கு அப்பா, அம்மா கிட்ட பர்மிஷன் வாங்குறதே போர்க்களம் மாதிரிதான் இருக்கும். ராத்திரில நிகழ்ச்சி நடக்கும், சில நேரம் போற இடத்துலயே தங்க வேண்டி வரும். இதுக்கெல்லாம் அக்கம் பக்கத்துல ஏதாவது சொல்லிட்டாங்கன்னா அடுத்த நிகழ்ச்சிக்கு விட மாட்டாங்க. கல்யாணம் ஆகாத பொண்ணு யாராவது ஏதாவது சொல்லிட்டா கல்யாணம் நடக்காமப் போயிடுமோன்னு நியாய மான பயம் அவங்களுக்கு. இதனாலயே ‘இந்தப் பொண்ணு திடீர்னு வராம போயிடும்’னு நிறைய வாய்ப்பு தவறிப் போயிருக்கு” என்ப வருக்கு, தற்போது கணவர் சிவா பக்கபலமாக இருக் கிறாராம்.

“உனக்குத் துணையா இருக்க முடியாட்டாலும் உன் வளர்ச்சிக்குத் தடையா இருக்க மாட்டேன்னு என் கணவர் சொல்வாரு. நான் இனி எந்த உயரத்துக்குப் போனாலும் அது அவருக்குத் தான் சமர்ப்பணம்”

- லவ்வாங்கியாக நிறைவு செய்தார் நீலவேணி.