Published:Updated:

அஜித் சொல்லும் நோ மீன்ஸ் நோ பற்றி பிரபலங்களின் கருத்து!

ஓர் ஆண் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற உரிமையை ஒரு பெண்தான் ஆணுக்கு வழங்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பெண்களுக்கு கற்புதான் உயிர் என்பது காலங்காலமாகப் போதிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் எத்தனையோ தமிழ்த் திரைப்படங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களை பரிதாப நிலையிலும், இயலாமை நிலையிலும் காண்பித்து வருகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவனையே கணவனாக ஏற்கும் 'கலாசார'மும் போதிக்கப்படுவதுண்டு. இதுபோன்ற ஒரு சமூக சூழலில், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம், இந்தச் சமுதாய பழங்கருத்துகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பெண்களின் பாலியல் சார்ந்த விருப்பங்களையும் வெறுப்புகளையும் இந்த உலகம் எப்படி அணுகுகிறது என்பதையும், எப்படி அணுக வேண்டும் என்பதையும் கவனத்துடன் பேசியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்தப் படத்தில் ஒரு பெண் இரவு நேர பார்ட்டிக்குச் செல்கிறாள். மது அருந்துகிறாள். அவள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது, சம்பந்தப்பட்டவர்களைத் தாக்கிவிட்டு தன்னை தற்காத்துக்கொள்கிறாள். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்குவதுதானே சமூக மனப்பான்மை? அதை திருத்தும் திரைமொழிதான் 'நேர்கொண்ட பார்வை'.

தன் பாதுகாப்புக்காக ஒரு பெண், ஆணை தண்டித்திருந்தாலும், 'பெண் ஏன் இரவு நேர பார்ட்டிக்குச் செல்ல வேண்டும்? ஆண்களிடன் ஏன் நெருங்கிப் பழக வேண்டும்? மது அருந்தும் பழக்கம் கொண்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்யும்' என்ற பொதுச் சமூகத்தின் புத்தியை சரிசெய்யும் விதமாக வந்திருக்கிறது இப்படம். ஓர் ஆண் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற உரிமையை ஒரு பெண்தான் அவனுக்கு வழங்க வேண்டும். மனைவி என்றாலும், பாலியல் தொழிலாளி என்றாலும் விருப்பமில்லாத பெண்ணை ஆண் உறவுக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது. அவள் 'நோ' என்று சொன்னால் 'நோ'தான் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது 'நேர்கொண்ட பார்வை'

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இப்படம், பெண்களின் உலகத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பல ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பெண்களை இந்த சமூகம் மதிப்பிடும் முறை மற்றும் அதை வெளிப்படுத்தும் முறை குறித்தும், அவை மாற வேண்டிய புள்ளி பற்றியும் இந்த பிரபலங்களிடம் கேட்டோம்.

ரம்யா

ரம்யா
ரம்யா
instagram

"யாரையுமே 'இவங்க இப்படித்தான்'னு நிர்ணயிக்கிற உரிமை யாருக்குமே கிடையாது. எல்லாருமே எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தப்பு பண்ணியிருப்பாங்க. அவங்க பக்கம் இருந்து பார்க்கும்போது, அது அவங்களுக்கு நியாயமாதான் இருக்கும். அப்படியிருக்கும்போது, பொதுவான ஒரு அசஸ்மென்ட் ஷீட்டை வெச்சுக்கிட்டு, எல்லாரையும் அதன்படியே எப்படி மதிப்பிட முடியும்? குறிப்பா, பெண்களுக்கு மார்க் போடுறதுக்கு எல்லாருமே தங்களுக்கு அதுக்கான உரிமையும் அறிவும் இருக்கிறதா நினைக்கிறாங்க. 'பெண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்'னு இந்தச் சமுதாயம் உருவாக்கி வெச்சிருக்கிற கற்பிதங்களில் இருந்து மாறுபடும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, அவ மேல குற்றச்சாட்டுகளைக் கொட்டுறாங்க.

உறவு, நட்பு வட்டத்தில் மட்டுமல்ல... சும்மா தெரிஞ்ச பொண்ணுங்களுக்குக்கூட உடனே தங்களோட அசஸ்மென்ட் ஷீட்டை எடுத்துடுறாங்க. ஆனா, மத்தவங்க மார்க்குக்காக வாழ்ந்துவந்த தலைமறைகள் முடிந்து, பெண்கள் இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றாங்க. படிப்பு, வேலை, உடை, உறவுனு தங்களுக்குப் பிடிச்சதை அவங்க தேர்ந்தெடுத்து வாழ ஆரம்பிச்சிருக்கிறது வரவேற்க வேண்டிய ஒன்று. அதே நேரம், பாதுகாப்பை பொறுத்தவரையில் பெண்கள் கவனமா இருக்கணும். ஏன்னா, 'நோ மீன்ஸ் நோ' என்று சொல்லும் உரிமை நமக்கு இருந்தாலும், அதைப் புரிஞ்சுக்கிற பக்குவம் ஆண்களுக்கும் வரணுமே.

அதுல்யா

அதுல்யா
அதுல்யா
instagram

''இந்தத் திரைப்படம் குறித்த சில எதிர்மறை விமர்சனங்களைப் பார்க்கும்போது, இந்தப் படம் ஏன் இப்போ முக்கியம்னு இன்னும் அழுத்தமா புரியுது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் எல்லா பெண்களும் பார்ட்டிக்கு போய்தான் பாதிக்கப்படுறாங்களா? தினம் தினம் வரும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்திகளுக்கு என்ன சாக்கு சொல்ல முடியும்? 'பெண்கள் நோ சொல்லலாம்'னு சொல்றோம். குழந்தைகளை என்ன சொல்லச் சொல்றது? எத்தனை விடையற்ற கேள்விகள் இருக்கு இங்க.

தங்களுக்கு நடக்கிற பாலியல் வன்கொடுமைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே சொல்லத் தயங்குறதே, என்ன ஏதுன்னே விசாரிக்காம அவங்க முதல்ல குற்றவாளி ஆக்கப்படுவாங்க என்ற அச்சத்தில்தான். 'நேர்கொண்ட பார்வை' படம், பெண்களுக்கு இருக்கும் தேவையில்லாத குற்றஉணர்வுகளை நீக்கச்சொல்லி வலியுறுத்துது.

ஶ்ரீ தேவி

ஶ்ரீதேவி
ஶ்ரீதேவி
instagram

"ஒரு பெண்ணை அவள் உடல், ஆடை, தோற்றம் இவற்றை வைத்துதான் முதல்ல விமர்சிக்கிறாங்க. சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ போட்டால், ஆயிரம் நெகட்டிவ் கமென்ட்ஸ் வருது. அதுக்கு ரியாக்ட் பண்ணாம இருந்தா, அவங்களோட ஈகோ குளிர்ந்துபோகுது. கேள்விகேட்டா, 'மீடியாவில் இருக்கும் பொண்ணுங்களைப் பத்தி தெரியாதா?'னு அவங்க மனசில் இருக்கிற அழுக்கையெல்லாம் கொட்ட ஆரம்பிச்சிடுறாங்க. கமென்ட்ஸ், ட்ரால்னு கீழ்த்தரமா இறங்குறாங்க. உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவது மட்டும் வன்கொடுமை அல்ல. சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்கள் பலர் இப்படி வார்த்தைகளால் வன்கொடுமைக்கு உள்ளாகுறாங்க. இந்நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்கள், ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் அஜித் சார் போன்ற ஒரு மாஸ் ஹீரோ, இப்படி ஒரு ரோலை இதுபோன்ற படத்தில் பண்ணும்போது, இந்தப் படம் சொல்ற மெசேஜ் இத்தனை ஆண்களுக்கும் போய் சேரும் என்பதே சந்தோஷமா இருக்கு.''

நீலிமா ராணி

நீலிமா ராணி
நீலிமா ராணி

"பொதுவா, இந்தச் சமுதாயம் கொடுக்கும் எந்த நெகட்டிவ் கமென்ட்டையும் நான் மனசுக்குள் ஏத்திக்கிறது கிடையாது. நான் யாருன்னு எனக்குத் தெரியும். என்னை எப்படி பாதுகாத்துக்கணும்ங்கிறதும் எனக்குத் தெரியும். என் மனசுக்குத் தப்புனு படுற விஷயத்தை நான் செய்யாதவரை, நான் ஏன் மத்தவங்களுக்கு பயப்படணும்? இந்த ஆட்டிட்யூட்லதான் நான் எப்பவும் இருப்பேன்; என் தோழிகளுக்கும் இதையே வலியுறுத்துவேன். ஒரு ஆண் தவறான எண்ணத்தோட நெருங்கும்போது அதுக்கு ரியாக்ட் பண்ற உரிமை அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் இருக்கு. மத்தவங்க என்ன சொல்வாங்க, வெளியே தெரிஞ்சா அசிங்கமாயிடுமானு எல்லாம் பயப்படத் தேவையில்லை.

வித்யாபிரதீப்

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

"ஒரு பெண் தன்னை பாதுகாத்துக்கொள்ள எவ்வளவு கடமைப்பட்டிருக்காளோ, அதே அளவுக்கு ஒரு பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்ள ஆண்களும் கடமைப்பட்டிருக்காங்க. ஆண்கள்கிட்ட எப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாதுனு பெண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிற அம்மாக்கள், பெண்கள்கிட்ட எப்படியெல்லாம் நடந்துக்கணும்னு ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்க்கணும்.

பலரும் பல இடங்களிலும் வலியுறுத்துற விஷயம்தான் இது. ஆனாலும், தொடர்ந்து சொல்லப்படும்போதுதான் அது செயல்பாட்டுக்கு வரும்.''