Published:Updated:

`மண்ணும் பொண்ணும் ஒண்ணுதான்' படைப்பாளிகளே... ஒரு சின்ன வேண்டுகோள்! #WomensDaySpecial

சினிமாவும் பெண்களும்
சினிமாவும் பெண்களும்

சாதி, மதம், வர்க்கம், பாலினம் எனப் பலவகையான வேறுபாடுகள் தலைதூக்கி வெறுப்புகளை உமிழ்ந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில், பாலினம் எனும் விஷயத்தில் நம் தமிழ் சினிமா எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்துகொள்கிறது என அலசுவது அவசியமாகிறது.

எழுத்தின் வீரியம் பெரிது. அதனினும் பெரிது எழுத்துகளுடன் காட்சிகள் இணைவது. அப்படியான வீரியமிக்க ஒன்றுதான் சினிமா எனும் கூட்டுக்கலை. வெகுமக்களின் வாழ்வியலில் மெல்லிதாகவேனும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வலுவான கலை அது. `அனைத்துக் கலைகளிலும் சினிமாக்கலையே நமக்கு மிக முக்கியமானது' என்றார் விளாடிமிர் லெனின். ஆக, சினிமாவை வெறும் பொழுதுபோக்குக்கான அம்சம் என குறுக்குவதே அபத்தமானது. அதன் சமூக பொறுப்பு, இங்கே மிக முக்கியமானது. சாதி, மதம், வர்க்கம், பாலினம் என பலவகையான வேறுபாடுகள் தலைதூக்கி வெறுப்புகளை உமிழ்ந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில், பாலினம் எனும் விஷயத்தில் நம் தமிழ் சினிமா எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்துகொள்கிறது என அலசுவது அவசியமாகிறது.

Taapsee Pannu in Thappad
Taapsee Pannu in Thappad
ஆணாதிக்கத்தின் மீது விழுந்த ஒற்றை `அறை'... டாப்ஸியின் #Thappad படம் சொல்லும் செய்தி என்ன?

பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்களின் பிரச்னைகளை சித்திரிப்பதில், தமிழ் சினிமா ஒரு குறுகிய வட்டத்திலேயே அடைபட்டுக் கிடக்கிறது. காதல், கல்யாணம், பாலியல் துன்புறுத்தல்கள் என ஆண்-பெண் உறவுமுறைகளின் இடையிலுள்ள சிக்கல்களை ஆணின் பார்வையிலே அணுகுவதைத் தாண்டி பெண்களின் தனிபட்ட உளவியல் பிரச்னைகளையும் எதிர்பாலினத்தின் மீதான குழப்பங்களையும் குடும்ப அமைப்பினுள் பெண்களுக்குள்ள சிக்கல்களையும், சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகளையும் பெண்களின் பார்வையிலிருந்து பேசுவது என்பது தமிழ் சினிமாவுலகில் அரிதிலும் அரிதாகவே நிகழ்கிறது!

இந்த `லவ்வர் பாய்' நாயகர்கள் எல்லாம், நாயகிகளை பின்தொடர்ந்து காதல் எனும் பெயரில் தொந்தரவு செய்யும் கொடுமை என்று முடிவுக்கு வருமோ தெரியவில்லை. நாயகன் காதலைச் சொன்னதும், நாயகி ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், ஒட்டுமொத்த பெண்ணினத்தையும் `என்னம்மா நீங்க பொண்ணுங்களே இப்படித்தானா' என ராகத்துடன் குடிபோதையில் வசைபாட இறங்கிவிடுகிறார்கள். இதில் இன்னும் துயரம் என்னவெனில், அந்தப் வீணாப்போன பாடலைக் கேட்டவுடன் நாயகன் மீது நாயகிக்கு காதல் வந்துவிடுவதுதான். காதல் உறவில் இருந்து நியாயமான காரணங்களோடு விலகும், பெண்களை எல்லாம் இந்த தமிழ் சினிமா காட்சிப்படுத்துவதே இல்லை. மாறாக `பிரேக்-அப்' என்பதே, ஆண்களை ஏமாற்ற பெண்கள் எடுக்கும் ஆயுதம் என விஷமத்தை பரப்பி வைத்திருக்கிறது. `என் முன்னாள் காதலியை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன்' என்பதை பன்ச் டயலாக்கைப் போல் உதிர்க்கும் பசங்களை வளர்த்துவிட்டதுதான் தமிழ் சினிமா, பெண்ணினத்துக்காகச் செய்திருக்கும் மிகப்பெரிய தொண்டு. இன்று செருப்பை எடுக்கிறவர்களே, நாளை ஆசிட்டையும் கத்தியையும் பெண்களுக்கு எதிராகத் தூக்குகிறார்கள்.

A contrast to female stereotyping songs
A contrast to female stereotyping songs
``டியர் `பிகில்’ அட்லி... ஃபுட்பால் விளையாட விஜய் மட்டும் போதுமா... இதெல்லாம் வேண்டாமா?''- ஒரு கால்பந்து ரசிகனின் கடிதம்

தமிழ் சினிமாவில், இயக்குநர்களுக்கு அடுத்ததாக அதிக பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய மாஸ் ஹீரோக்களோ இன்னும் அவர்களின் பொறுப்பை முழுதாய் உணரவில்லை என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான, `பெண்களுக்கான படம்' எனும் கொண்டாடப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களில் கூட அந்த நாயகர்கள் வந்துதான் பெண்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தருகிறார்கள். எல்லாம் `நானே பெண்ணினத்தின் மீட்பர்' வகையறாதான். அதேபோல், கதையிலுள்ள மற்ற அப்பாவி பெண்களைக் காப்பாற்றுவதெல்லாம் சரி, ஹீரோயின்கள் என்ன பாவம் செய்தார்கள்? வெறும் கிளாமருக்காக அவர்களை யூஸ் அண்ட் த்ரோ கப்பைப்போல பயன்படுத்திவிட்டு கதைக்குள் நுழைக்காமல் கசக்கி எறிவது எல்லாம் என்னவென்று சொல்ல? பெண்களுக்கான படம் என எடுக்கப்படும் முக்கால்வாசி படங்களில், ஆபாச நடன அசைவுகளைக் கொண்ட ஐயிட்டம் பாடல்களோ, கிளாமர் காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ கட்டாயம் இடம் பெற்றுவிடுகின்றன. பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை, நடுரோட்டில் சுட்டுக்கொன்று, சிம்பதியின் மீது தன் `மாஸ்' பிம்பத்தைக் கட்டமைக்கும் நாயகர்கள் எல்லோரும், `இது பெண்களுக்கான படம்'தானா என ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசிப்பது நலம்.

இப்படிப் பெண் கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் என்பதையே பிசினஸாக மாற்றி கல்லா கட்டும் திரையுலகம், திருந்தினால் இன்னும் நலம். கதைக்கு நாயகி தேவையில்லை எனில் நாயகி பாத்திரத்தையே விட்டுவிடுங்களேன்.

எதற்காக, வேண்டா வெறுப்பாக ஒரு பெண் கதாபாத்திரத்தை அரையும் குறையுமாக எழுதி, நாயகனை காதலிக்கவிட்டு, கிளாமராக உலவவிட்டு, படத்தையும் கெடுத்து, பெண்களையும் அசிங்கப்படுத்த வேண்டும்?
சினிமாவும் பெண்களும்
சினிமாவும் பெண்களும்

இதற்கிடையில், `ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்' என சினிமாக்கள் வகுப்புகள் எடுப்பதை நினைக்கையில் சிரிப்புதான் வருகிறது. ஒரு பெண் என்றால் வெளீர் நிறத்துடனும் மெலிந்த இடையோடும், அடக்க ஒடுக்கத்துடனும் அழகும் அமைதியும் சரிவிகிதத்தில் கலந்த கலவையாக இருத்தல் வேண்டும் என்கிற எண்ணத்தை ஆழமாகப் பதித்து வருகிறது தமிழ் சினிமா. எதார்த்த வாழ்க்கையில் உங்களைச் சுற்றியுள்ள பெண்களையும் ஏன் ஆண்களையுமே எப்போது காண்பிக்கப் போகிறீர்கள்? சினிமாவுலகம் விதைக்கும் இந்த விஷம எண்ணங்களில், மேற்சொன்ன அம்சங்கள் அல்லாத பெண்கள் நிறத்தின் அடிப்படையில், உருவத்தின் அடிப்படையில் எப்படியெல்லாம் சமூகத்தில் கேலி பேசப்படுகிறார்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?

பெண்களின் பிரச்னைகளை ஆண்கள் பதிவு செய்வதைக் காட்டிலும் பெண் படைப்பாளிகள் அதைக் கையாளும்போது, அவை உண்மைக்கு மிக அருகில் இருக்கும் என்பதே அனைவரின் அவா. இந்த ஆண் மைய சினிமாவுலகில், பெரும்பான்மை ஆண் ரசிகர்களுக்காக, பெண் படைப்பாளிகள் தங்களை இழந்து விடக்கூடாது என்பதோ அனைவரின் அச்சம்.

சினிமாவும் பெண்களும்
சினிமாவும் பெண்களும்
எதிரொலிக்கும் நீதியின் குரல்!
பெண் படைப்பாளிகள் நல்ல சினிமா கலைஞர்களாக, தலைத்தூக்கி கொண்டிருக்கும் இந்நேரம், சிறு நம்பிக்கை உற்றெடுக்கிறது. அந்த ஊற்றில், `மண்ணும் பொண்ணும் எங்களுக்கு ஒண்ணுதான்' வகையறா படைப்பாளிகள் மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிடாதீர்கள் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்த கட்டுரைக்கு