`பெண் ஓதுவார்' ஓதி செய்துகொண்ட திருமணம்... வழக்கத்தை உடைத்த தியா மிர்சா... ஏன்?
பெண்ணியம் பேசுவது ஆண்களை எதிர்ப்பதாகாது. பெண்களின் சுதந்திரம் மற்றும் அடக்குமுறைகளை நொறுக்குவது” எனப் பல முன்னணி பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தியா மிர்சாவின் திருமண நிகழ்வு பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், சமூக ஆர்வலரான தியா மிர்ஸாவின் திருமணம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட தியா, 2014-ம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் சாஹில் சங்காவை மணந்தார். அவர்கள் 2019-ல் பிரிந்தனர். இந்நிலையில் தியா மிர்ஸாவுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வைபப் ரேகிக்கும் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
பொதுவாக, இந்து மரபின்படி திருமண விழாக்களில் 'ஆண் ஓதுவார்' கொண்டே நிகழ்வு நடத்தப்படும். ஓதுவார் மந்திரங்களை வாசிக்க, தம்பதிகள் தங்களது திருமண உறுதிமொழிகளை எடுப்பது காலம் காலமாக நடக்கும் மரபு. இந்நிலையில், தியாவின் திருமணம் புதுமையாக நடந்தது.
தியா மிர்ஸா தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்றில் தியாவும் ரேகியும் திருமணக்கோலத்தில் இருக்க, திருமணத்தை ஒரு பெண் ஓதுவார் நடத்தி வைத்தார். மேலும், தியா அந்தப் புகைப்பட போஸ்ட்டில், 'எங்கள் திருமண விழாவை பெண் ஓதுவரான ஷீலா அட்டா சிறப்பாக நடத்தி வைத்தார். #ரைஸ்அப் #ஜெனரேஷன் ஈகுவாலிட்டி என்ற ஹேஸ்டேக்கு களுடன் தனது நன்றியை ஷீலா அட்டாவுக்குத் தெரிவித்துள்ளார்.
பாலின சமத்துவத்துக்காகப் பல முன்னணி பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தியா மிர்ஸாவின் திருமண நிகழ்வு அதற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
தியா மிர்ஸாவின் திருமண விழாவில் அவரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.